- MJ
காத்தான்குடி: 1987-1990, இந்திய அமைதிப்படையினர் வட கிழக்கில் நிலைகொண்டிருந்த காலப்பகுதி. வடகிழக்கு மக்களை விட இந்திய அமைதிப்படையினரின் எண்ணிக்கை அதிகம் என மக்களால் உவமானமாகக் கூறப்பட்ட நேரம்.
காத்தான்குடியின் பிரதான வீதியில் விரல்விட்டு எண்ணக்கூடிய கடைகளே ஆங்காங்கே அமைந்திருந்தது.
ஊருக்குள் மாடி வீடுகளோ, வீடுகளையும் உறவுகளையும் பிரிக்கும் உயர்ந்த மதில்களோ அன்றிருக்கவில்லை.
“புலி வால்”களும், “டெலோ வால்”களும் ஊருக்குள் ஆக்கிரமித்த இத்தருணத்தில், பொதுமக்களும், பிரமுகர்களும் மிக நிதானமாக காய்நகர்த்திய காலகட்டம் இதுவாகும்.
காத்தான்குடிக்குள் இந்தியப்படையினர் நுழைந்த புதிதில் புலி ஊராகவே கருதினர். அதனால் குறுக்கறுக்கும் பொதுமக்களை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களையும் தீர்த்தனர். எப்பகுதியிலேயாவது நாய் குரைத்தால் அல்லது திடீரென காகம் கரைந்தால் வானை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களும், மோட்டார் ஷெல்களும் ஏவப்படும். சுப்ஹூத் தொழுகைக்குப் பள்ளிக்குச் செல்லும்போது வீதிகளில் வீழ்ந்துகிடக்கும் வெற்றுத் தோட்டக்களை ‘புறக்கி’ எடுப்பதும் ஓர் பொழுதுபோக்காகவே அன்றைய சிறுவர்களுக்கு இருந்தது.
நள்ளிரவில் காத்தான்குடிக்குள் நுழையும் ஆயிரக்கணக்கான இந்திய ஜவான்கள் ஒவ்வொரு வீதிகளிலும், முடுக்கு ஒழுங்கைகளிலும், பூட்டப்பட்ட ஒவ்வொரு வீட்டு வாசல் கதவுகளுக்கு முன்னாலும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர்.
எந்த வீட்டில் புலி இருக்கிறது. எப்போது வெளியில் வரும் என காத்திருந்த நேரம்.
தினமும் இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணிவரையும் ஊரடங்குச் சட்டம் அமலில் இருக்கும். இஷாத் தொழுகையை முடித்தவர்கள் அவசரமாக வீடு திரும்பிவிட வேண்டும். சந்திகளில் கூடி நின்று கதைத்துக்கொண்டிருப்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறும்.
“கர்ப்பி (curfew) போட்டிருக்கய்யா உனக்கு தெரியாதைய்யா” என தமிழ் தெரிந்த, ஆயிரத்தில் ஓர் ஜவான் எச்சரிக்கும்போது சிரிப்பாகவும் இருக்கும்.
எஸ்.எல்.ஆர். (Self-Loading Rifle), எல்.எம்.ஜி (Ligh Machine Gun), எஸ்.எம்.ஜி (Submachine Gun) துப்பாக்கிகளும், மோட்டார் செல், ரேடியோ என்பன எமது சிறுவர்களுக்கு புதினமாக இருந்தன. ஏதோ தெரியாத புரியாத மொழியில் இந்திய ஜவான்களின் ஆயுத தளபாடங்களை எம்மவர்கள் இரசித்த நேரம்.
“இந்தியப்படை வாரானுகள் ஓடுங்கடா மன” என கூடி நிற்பவர்களைப் பார்த்து பெரியவர்கள் எச்சரித்துவிட்டு போகும் நேரம்.
சில நேரங்களில் சுப்ஹ்த் தொழுகைக்குச் செல்பவர்கள் பலர் விசாரணையின் பேரிலும், தற்காலிக சுற்றிவளைப்பு என்ற பேரிலும் தடுத்து நிறுத்தப்படுவர்.
அதிகாலை 4 மணியிலிருந்து ஒலிவாங்கி பொருத்தப்பட்ட இராணுவ ஜீப் வண்டிகளில் ஊருக்குள் தமிழில் காத்தான்குடி சுற்றிவளைக்கப்பட்டிருப்பதை பொதுமக்களுக்கு அறிவித்துச் செல்வர்.
சுப்ஹூத் தொழுகைக்கு விழிப்பவர்களும், வேலை, பாடசாலை மற்றும் அலுவலகங்களுக்குச் செல்பவர்கள் செய்வதறியாது நிற்பர்.
பதினான்கு வயதுக்கு மேற்பட்ட, 55 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் அனைவரும் மீராபாலிகா வித்தியாலயத்திற்கு காலை எட்டு மணிக்கு முன்னர் சமூகமளிக்குமாரு கட்டளை பிறப்பிக்கப்படும்.
பெண்களும், வயோதிபர்களும், சிறுவர்களும் மற்றும் நோயாளிகளும் வீட்டிலேயே இருப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.
ஆண்கள் அனைவரும் மீராபாலிகாவிற்குள் தற்காலிகமாக அடைக்கப்படுவர். நூற்றுக்கணக்கான இந்தியப்படையினர் மீராபாலிகாவிற்குள் சூழ்ந்திருப்பர்.
ஆயிரக்கணக்கான ஜவான்கள் ஊருக்குள் சுற்றிவளைப்பை முன்னெடுத்துச் செல்வர்.
பொம்மை தலையசைத்தால் புலி வீடாக கருதப்பட்டு, விசாரணையும், சோதணையும் கடுமையாக்கப்படும்.
காலை 8 மணியிலிருந்து பிற்பகல் 2 மணிவரையிலும் ஊருக்குள் வீடு வீடாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டை நிறைவடைந்ததும், மீராபாலிகாவுக்குள் அடைக்கப்பட்டுள்ள ஆண்களை வரிசையாக வரும்படி கேட்கப்படுவர்.
இந்தியப் படையினரின் இந்த காலகட்டத்தில் சோகச் சம்பவங்களும் நிகழ்ந்திருந்தன.

Leave a comment