சோபித்த தேரர்

Monkகொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கிட்டத்தட்ட பத்தாண்டு கால ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்காக சிவில் சமூக அமைப்புகளையும் பல்வேறு எதிரணிக் கட்சிகளையும் ஒன்றுதிரட்டுவதில் முக்கிய பங்காற்றியவராக பார்க்கப்படுகின்ற சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரருக்கு பல்வேறு அரசியல் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரமுகர்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்துவருகின்றனர்.

அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த சோபித்த தேரர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் படி கடந்த 3-ம் திகதி மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிங்கப்பூர் மருத்துவமனையில்  ஞாயிறு (8) காலை உயிரிழந்த மாதுலுவாவே சோபித்த தேரரின் உடல் கொழும்பிலுள்ள அவரது கோட்டை நாக விகாரையில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

Monk
சோபித்த தேரர்

இறுதிக் கிரியைகள் வரும் 12-ம் திகதி அரச மரியாதையுடன் நடக்கவுள்ளதாக சிங்கப்பூரில் இருந்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

சோபித்த தேரரின் மறைவு ஒட்டு மொத்த நாட்டுமக்களுக்கும் பேரிழப்பு என்று நல்லாட்சி முயற்சிகளில் சோபித்த தேரருடன் சேர்ந்து பணியாற்றியவரான முஸ்லிம் சமாதான செயலகத்தின் ஸ்தாபக தலைவரான ஜாவிட் யூசுப் கூறினார்.

புதிய ஆட்சியை கொண்டுவருவதில் சோபித்த தேரர் ஆற்றிய பங்களிப்பை யாரும் மறந்துவிட முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக மைத்திரிபால சிறிசேன தேர்தலில் களமிறக்கப்பட முன்னதாக, பொது வேட்பாளராக போட்டியிட சோபித்த தேரர் முன்வந்திருந்தார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறைவைக்கப்பட்டபோது அவரின் விடுதலைக்காகவும், 1987-ம் ஆண்டில் இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டபோது, அப்போதைய ஜனாதிபதி ஜேர். ஆர் ஜெயவர்தனவுக்கு எதிராகவும் வீதிப் போராட்டங்களை சோபித்த தேரர் நடத்தியிருந்தார்.

1942-ம் ஆண்டு மே மாதம் 29-ம் திகதி பிறந்த சோபித்த தேரர், கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் இலங்கை அரசியலில் செல்வாக்கு செலுத்திவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment