காத்தான்குடி ஆதார வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா – காத்தான்குடி மீடியா போரம் கலந்துரையாடல்

  • எம்.ஐ. அப்துல் நஸார்

kattankudy media forum kmfகாத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலை குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி மீடியா போரம் ஆகியவற்றுக்கிடையிலான கலந்துரையாடலொன்று ஞாயிற்றுக்கிழமை (08) காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் அலுவலகத்தில் நடைபெற்றது.

சினேகபூர்வமாக நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தற்போது நிலவுகின்ற ஆளணிப் பற்றாக்குறை, பௌதீக வளப் பற்றாக்குறை என்பவை சம்பந்தமாகவும் குறித்த வைத்தியசாலையினை இப் பிரதேச மக்கள் பயன்படுத்திக் கொள்வதை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியமும், அவ்வாறு பயன்படுத்துவதனூடகவே ஆளணிப் பற்றாக்குறையினையும், பௌதீக வளப் பற்றாக்குறையினையும் நிவர்த்தி செய்ய முடியும் எனவும் சுட்டிக் காட்டப்படடது.

இது தவிர தூர இடங்களிலிருந்து வைத்தியசாலைக்கு வருகின்ற மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலின்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலை குறைபாடுகள் தொடர்பில் காத்தான்குடி மீடியா போரத்தினால் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கை வாசித்துக் விளக்கப்பட்டதோடு அதன் பிரதியொன்று காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

கலந்துரையாடலின் இறுதியில் பின்வரும் விடயங்கள் தொடர்பில் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாசார்பில் உறுதியளிக்கப்பட்டது.

காத்தான்குடி மீடியா போரத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட ஆளணிப் பற்றாக்குறை, வைத்திய உபகரணப் பற்றாக்குறை மற்றும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஆகியவற்றிற்கு தீர்வு காண்பது தொடர்பாக எதிர்வரும் 14.11.2015 அன்று விசேடமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜம்இய்யாவின் கூட்டத்தில் உரிய அரசியல்வாதிகள், சுகாதாரத்துறையோடு சம்பந்தப்பட்வர்களுடன் எவ்வாறு கலந்துரையாடி தீர்வுகளைப் பெற முடியும் என்பது தொடர்பில் ஆராயப்பட்டு முடிவுகள் எட்டப்படும்.

இவ்விடயம் தொடர்பில் மிகுந்த சிரமத்துடன் தயாரிக்கப்பட்டு கையளிக்கப்பட்டிருக்கின்ற தொகுப்பினை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக ஓரிரு வாரங்கள் குத்பாக்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வது பற்றியும் குறித்த கூட்டத்தில் ஆராயப்படும்.

விசேட போக்குவரத்து ஒழுங்கொன்றினை செய்வது பற்றியும் நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துரையாடப்படும் எனவும தெரிவிக்கப்பட்டது.

இது சமூகத்தின் முக்கியமானதொரு தேவையாக இருப்பதனால் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஏனைய சமூக அமைப்புக்களுடன் ஒன்றிணைந்து இந்த தேவையினை பூர்த்தி செய்ய ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சார்பில் அதன் தலைவர் மௌலவி ஏ.எம்.அப்துல் காதர் (பலாஹி), செயலாளர் ஏ.ஜீ.எம்.ஜெலீல் (மதனி), மௌலவி எம்.எச்.எம்.புஹாரி (பலாஹி) மற்றும் அல்ஹாஜ் மௌலவி எம்.ஐ. அப்துல் கையூம் (ஷர்கி) உள்ளிட்ட நிருவாகக் குழு உறுப்பினர்களும் அதேபோன்று காத்தான்குடி மீடியா போரம் சார்பில் அதன் தலைவர் ஏ.எல். டீன் பைரூஸ், செயலாளர் ஏ.எச்.எம்.அன்வர், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா (பலாஹி) மற்றும் எம்.எஸ்.எம்.நூர்தீன் உள்ளிட்ட நிருவாகக் குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த விடயம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை (05) பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரதிநிதிகளை சந்தித்து காத்தான்குடி மீடியா போரம் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment