கடந்த வார அரசியல் களநிலவரங்களில் களைகட்டியது கிழக்கு பிரதேச அரசியல் தலைவர்களின் ரிப்பன் வெட்டும் போட்டியும் அதன் பின்னர் அவர்கள் வழங்கிய பேட்டிகளும்தான். உலகெங்கும் முஸ்லிம் சமுகம் பல்வேறுபட்ட இன்னல்களுக்கும் பெரும் துயரங்களுக்கும் தொடர்ச்சியாக ஆட்பட்டு நொந்து நிற்கிறது. அந்த சமூகத்திற்கெதிரான சதி நடவடிக்கைகள், அந்த சமுகத்தை கருவறுப்பதற்கான நிகழ்ச்சி நிரல்கள் உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரந்துகிடக்கிறது.
இந்த சதிகளின் முஸ்தீபுகளை எமது தேசத்திலும் நாம் கண்டோம், அது இன்னும் ஓய்ந்து விடாத ஒரு சூலில், இலங்கயின் அரசியல் களம் பல்வேறு மாற்றங்களிக் கண்டு ஒரு புதிய இயங்கியலுக்கூடாக தனது பயணத்தை தொடரத் தொடங்கியுள்ளது.
நல்லாட்சி அரசு பல அரசியல் நகர்வுகளையும் தீர்க்கமான அரசியல் பொறிமுறைகளையும் உருவாக்குவதற்கான முயற்சியில் படிப்படியாக முனைப்புடன் செயற்படுகிறது. பல்வேறுபட்ட ஆணைக் குழுக்கள் உருவாக்கமும் , சட்டவாக்கங்களும் சந்தடியில்லாமல் முன்னகர்கின்றன, நாட்டின் அரசியல் மற்றும் பொது விடயங்கள் தொடர்பான கொள்கை உருவாக்கங்களும், நில வாரைபுகள் வரையறைகள் தொடர்பிலான தீர்மானகளும் கொண்டுவரப் படுகின்றன, இவ்வாறு பல அரசியல் நிகழ்வுகள் நடந்தேறும் இந்த காத்திரமான தருணத்தில் பல்வேறுபட்ட அறிஞர்களையும் அனுபவமிக்கவர்களையும் உள்வாங்கி எமது தேசத்தின் அரசியல் மாற்றத்தில் மற்றும் கொள்கைவகுப்பு நடவடிக்கைகளில் எதிர்கால முஸ்லிம் சமுக இருப்பையும் உரிமைகளையும் கருத்திற்கொண்டு பல அரசியல் முன்னகர்வுகளைச் செய்ய வேண்டியது நமது அரசியல்வாதிகளின் தலையாய கடமையாகும்.
இந்த சமுக பொறுப்பை தலையில் சுமப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் இவர்களை மக்கள் அரியாசனத்தில் அமர்த்தினார்கள். ஆயினும் இந்த அரசியல் தலைவர்கள் இந்த பெரும் பொறுப்புகளை மறந்துவிட்டு, தெரு முனைகளில் குடுமிச் சண்டை பிடித்துக் கொண்டு சமுகத்தின் தராதரம் பற்றிய கேவலமான எண்ணக் கருவினை ஏனைய சமுகங்களின் மத்தியில் விதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
முஸ்லிம் சமுகம் பல பழிப்புகளையும் அவமானங்களையும் தாங்கி நிற்கிறது, எமது தேசிய உணர்வும் தேசியத்திற்கான பங்களிப்பும் கேள்விக்குள்ளாக்கப் பட்டிருக்கின்றன, இந்த தேசத்தின் வளங்களை சுரண்டுபவர்களாக, அனைத்தையும் அனுபவித்துக் கொண்டு தேச நலனில் தியாகத்துடன் பங்களிப்புச் செய்யாதவர்களாக எம்மை சித்திரிப்பதில் ஏனைய சமூகமும் அவர்களது ஊடகங்களும் வெற்றி பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில்தான் முஸ்லிம் நபரொருவர் விடுகின்ற சிறிய தவறும் முஸ்லிம் சமுகத்தின் தவறாக வியாக்கியானம் செய்யப்படுகிறது. இந்த விடயங்களை மனதில் வைத்துக் கொண்டுதான் ஒவ்வொரு முஸ்லிமும் செயற்படவேண்டிய கூட்டு பொறுப்பு எம்மீது சுமத்தப் பட்டிருக்கிறது. குறிப்பாக சமுகத்தின் முக்கிய புள்ளிகளும் அரசியல் தலைவர்களும் இந்த விடயத்தில் மிகவும் அக்கறையுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டிய கடப்பாடுடையவர்களாகின்றனர்.
இந்த யதார்த்த சூழலுக்கு மாறாக, சமுகத்தின் மானம் மரியாதை என்பதை தலைமீது வைத்து சுமக்க வேண்டிய, அதன் மதிப்பை காட்டிக் காக்க வேண்டிய பொறுப்பு வாய்ந்த அரசியல் பதவிகளில் இருக்கின்ற எமது அரசியல் பிரமுகர்களின் நடவடிக்கைகள் மிக மோசமான முறையில் சமுகத்தை தலைகுனிய செய்துள்ளது, ஒரு கட்டடத்தை பல முறை திறப்பதும், கட்டடங்களை திறக்கவிடாமல் என்னை வீசி அழகழிப்பு செய்வதும், கேவலமான துண்டு பிரசுரங்கள் அடித்து வெளியிடுவதும். தகதி வாய்ந்த தன்மானமுள்ள அரசியல் தலைமைகளுக்கு உகந்ததல்ல. இன்னும் இந்த கீழ்த்தரமான கைங்கரியங்களை தமது அபிமானிகளை வைத்து தூண்டிவிடுவதும் மிக அநாகரிமாக செயற்பட வைப்பதும் இந்த அரசியல் தலைவர்களை தெரிவு செய்த மக்களுக்கு பலத்த அவமானமும் ஏமாற்றமுமாகும்.
முஸ்லிம் உரிமை முஸ்லிம் விடுதலை சமுக இருப்பு என பிரமாண்டமான கோசங்களோடு பிரச்சாரம் செய்து வெற்றி பெற்ற இந்த அரசியல்வாதிகள் முஸ்லிம் சமுக ஒற்றுமை, சமுக நாகரிகம், முன்மாதிரியான அரசியல் கலாச்சாரம் பற்றியும் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
மிக முக்கியமாக முஸ்லிம் சமுகத்தின் முதுகெலும்பாக மிளிர வேண்டிய கல்விக் கூடங்களில், இவ்வாறான அநாகரிக செயற்பாடுகள் நிகழ்த்தப்படுவதும், மாணவர்களை அடைத்து வைத்து தமது கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் மிகவும் அநாகரிகமான செயற்பாடுகளாகும், மேலும் மாணவர் சமுகத்திற்கு அடிமைத் துவத்தைக் கற்றுக் கொடுத்து, அரசியல் ஜால்றாகளையும் அடிவருடிகளையும் கதாநாயகர்களாக கட்டமைப்புச் செய்துகொள்ள வைக்கும் கைங்கரியமுமாகும், இதன் மூலம் வருங்கால சந்ததிகளுக்கு நாம் எதனைக் கற்றுக் கொடுக்கிறோம் என்பதனையும் மனதில் கொள்ள வேண்டும், அரசியல் பிரமுகர்களின் கைப்பிள்ளைகளாக ஆசிரியர்களை மாற்றிவிடுவது, அந்த ஆசிரியர்களுக்கான மரியாதையை மானவர்ககளின் மத்தியில் மிகமோசமாக சிதைத்துவிடும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
இவ்வாறான அரசியல் தலைமைகளை களமிறக்கும் கட்சித் தலைமைகளும், இவர்களை தொடர்ச்சியாக வாக்களித்து வெல்லவைக்கும் மகாஜனங்களும் இந்த அரசியல் பிரமுகர்களின் நடவடிக்கைகள் பற்றி தமது தெளிவான அதிருப்தியை பதிவு செய்யவேண்டும், எமது சமுகத்தின் கெளரவம் பற்றியும் மாணவ சமூகத்தினதும் எமது பாடசாலைகளினதும் சுயாதீனம் பற்றியும் கருத்தில் கொண்டு இந்த கீழ்த்தரமான அரசியல் விளையாட்டுகளுக்கு எமது சமுகத்தின் கல்விக் கூடங்கள் பலியாவதைத் தடுக்க சிந்தித்து செயல்படவேண்டியது நம் அனைவரதும் கடமையும் கூட்டுப் பொறுப்புமாகும்.

Leave a comment