- பழுலுல்லாஹ் பர்ஹான்
மட்டக்களப்பு: கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் எச்.என்.டீ.ஏ மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளின் போது மாணவர்களை கலகத் தடுப்பு பொலிசார் தாக்கிய சம்பவத்தை கண்டித்து “பறிக்கப்பட்ட உரிமைகளை மீண்டும் வழங்கு ,உரிமை கோரும் மாணவர்களை தண்டிக்காதே”எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று 2 திங்கட்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி
பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு –கல்முனை கோயில்குளம் பிரதான வீதியில் உயர் கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் மட்டக்களப்பு உயர் தொழிநுட்பவியல் நிறுவனத்திற்கு முன்பாக இடம்பெற்றது.
மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு உயர் தேசிய கணக்கீட்டு (எச்.என்.டி.ஏ.) பிரிவைச் சேர்ந்த தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்கள் கல்வி உரிமையை கோரிய எச்.என்.டி.ஏ மாணவர்களுக்கு பொலிசாரால் ஏற்பட்ட கொடூரமான செயலை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்,உயர்பட்டப்படிப்பை பணத்திற்கு விற்பதை நிறுத்து,மாணவர்களை ஒடுக்குவதை உடனடியாக நிறுத்து, எச்.என்.டி.ஏ. மாணவர்கள் இழந்த கல்வி உரிமையை மீண்டும் பெற்றுத்தா?,மாணவர்கள் தாக்கப்படுவதும் ,இலவசக் கல்வியை விற்பதுமா இலங்கை சட்டயாப்பில் உள்ளடக்கப்படுகிறது,மாணவர்களும் மனிதர்களே எங்களை அடக்கி ஒடுக்க வேண்டாம்,மகாபொல திட்டத்தை 5000 வரை உயர்த்து , எச்.என்.டி.ஏ உயர் கல்வியை வணிகவியல் (பீகொம்) தரத்திற்கு உயர்த்து , எச்.என்.டி.ஏ பாடநெறிக்கு வழங்கப்பட்ட பட்டப்படிப்படிப்பிற்கு உரிய சமத்துவத்தை மீண்டும் வழங்கு போன்ற பல்வேறு தமிழ் மொழியிலான பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன் ,சதாசிவம் வியாளேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மட்டக்களப்பு உயர் தேசிய கணக்கீட்டு (எச்.என்.டி.ஏ.) மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் , மேற்படி விடயம் தொடர்பில் தாங்கள் பொது நிருவாக அமைச்சின் கவனத்திற்கும் உயர் கல்வி அமைச்சின் கவனத்திற்கும்; கொண்டுவருவதாகவும் இவ் விடயம் குறித்து எதிர்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் ஐயாவிடம் கதைத்துள்ளதாகவும் அவர் ஜனாதிபதியுடனும் ,பிரதமருடனும் கதைப்பார் எனவும் இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.