கொழும்பு: ஜனாதிபதி மாளிகையில் கட்டப்பட்டுள்ள 04 மாடி நிலக்கீழ் மாளிகையில், யுத்த சமயத்தின்போது, தேசிய பாதுகாப்பு சபையினர் ஒருபோதும் கூடியதில்லை என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். குறித்த நிலக்கீழ் மாளிகையில், யுத்த காலத்தின்போது, பாதுகாப்பு சபையின் கூட்டங்கள் நடைபெற்றதாக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அறிவித்திருந்தார்.
இந்த பதுங்கு குழி, கடற்படையினரால் கட்டப்பட்டது என தனக்குத் தெரியும் என்பதோடு, தெனியாய பகுதியிலுள்ள தோட்டம் ஒன்றில் மற்றுமொரு பதுங்கு குழி உள்ளதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குறித்த மாளிகையை கட்டுவதற்கு எவ்வளவு செலவாகியது என்பது குறித்த தகவலை, முன்னாள் ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த பொன்சேகா, பெலவத்தை, அகுறுகொட பாதுகாப்பு படை முகாமை கட்டுவதற்கு செலவிடப்பட்ட தொகைக்கு சமனான தொகையே இம்மாளிகைக்கும் செலவாகியதாக, தனக்கு கிடைத்த தகவல் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி அதனைக் கட்டுவதற்கு, 33 பில்லியன் அமெரிக்க டொலர், இலங்கை நாணயப் பெறுமதியின்படி, ரூபா 4,641.53 பில்லியன் செலவாகியிருக்கலாம் என அவர் தெரிவித்தார்.
Leave a comment