மதுபான குற்றச்சாட்டு: சவுதி சிறையில் இருக்கும் பிரிட்டிஷ் பிரஜை ஒரு வாரத்தில் விடுதலை

britishறியாத்: மதுபானம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் ஒரு வாரத்திற்குள் விடுதலை செய்யப்படுவார் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலிப் ஹேமன்ட் தெரிவித்துள்ளார். கார்ல் அந்த்ரீ என்ற 74 வயதான இந்த பிரிட்டிஷ் பிரஜை, வீட்டில் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை வைத்திருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டதையடுத்து, சவுதி அரேபிய மத காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அவர் ஒரு வருடத்துக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு கசையடி வழங்கப்படலாம் என்ற அச்சம் அவரது உறவினர்களுக்கு ஏற்பட்டது. சவுதி அரேபிய அதிகாரிகள் இது நடக்கும் என்பதை மறுத்தனர்.

இந்நிலையில், அந்த்ரீ விடுவிக்கப்படுவார் என்பது குறித்து பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் தனது டிவிட்டர் தளத்தில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்.

அந்த்ரீயின் விடுதலை தொடர்பில் சவுதி அரசாங்கத்துடன் பல தடவைகள் கலந்துரையாடியதாகவும் அவர் கூறினார். பல வருடங்களாக சவுதியில் வாழ்ந்து வரும் அந்த்ரீ, ஜித்தாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

british
சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் பிரஜை கார்ல் அந்த்ரீ

அந்த்ரீயின் குடும்பத்தார் அவரை விடுதலையைக்கோரி ஊடகங்கள் மூலம் முன்னர் முறையிட்டிருந்தனர். அத்தோடு, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தண்டனையான 360 கசையடிகள் நிறைவேற்றப்படுமாயின், அவர் உயிரிழப்பார் என்ற அச்சமும் அவர்களிடம் இருந்தது.

அந்த்ரீயின் விடுதலை செய்தியானது ஒரு நீண்ட ஆண்டு கவலைக்கு பின் கிடைத்த, பெரிய ஆறுதலாக இருப்பதாக அவரது மகள் கெர்ஸ்டன் பிரோத் தெரிவித்துள்ளார்.

Published by

Leave a comment