‘வார உரைகல்’ பெயரில் போலியான முகப்புத்தகம்! வாசகர்கள் அவதானமாக இருக்குமாறு பிரதம ஆசிரியர் வேண்டுகோள்!!

varauraikal fake‘வார உரைகல்’ எனும் பெயரில் இங்கு காணப்படும் என்னால் வெளியிடப்பட்ட 253 மற்றும் 300வது ‘வார உரைகல்’ பத்திரகைகளின் முன்பக்கப் புகைப்படங்களுடன் முகப்புத்தம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வருவதாக வாசகர்கள் பலரும் எனது கவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.

எனினும், அரசாங்கத் தகவல் திணைக்களம் மற்றும் தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம் என்பவற்றில் முறைப்படி என்னால் பதிவுசெய்யப்பட்டுள்ள ‘வார உரைகல்’ எனும் இந்த ஊடகத்தின் பெயரில் என்னால் இவ்வாறானதொரு முகப்புத்தகம் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்படுவதில்லை என்பதை அனைத்து வாசகர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இத்தால் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

varauraikal fake
போலி

இந்தப் போலி முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டிருகின்ற, எதிர்காலத்திலும் பிரசுரமாக்கப்படவுள்ள எந்தவொரு செய்திகள் தொடர்பாகவும், அச்செய்திகள் தொடர்பில் பரிமாறப்படும் கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் எனக்கு சம்பந்தம் கிடையாது என்பதுடன், இப்போலி முகநூல் பிரசுர நடவடிக்கையானது என்னையும், எனது ஊடகத்தின் பெயரையும் ஏதோவொரு வகையில் சட்டச்சிக்கலில் மாட்டிவிடுவதற்காக இனந்தெரியாத நபர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு திட்டமிடப்பட்ட முயற்சியாக இருக்கலாம் என்பதையும் முன்கூட்டியே எனது வாசகர்களுக்கும், ஊடகத்துறை சார்ந்த சகோதரர்களுக்கும் எச்சரிக்கையாகத் தெரிவிக்கவும் கடமைப்பட்டுள்ளேன்.

எனவே, ‘வார உரைகல்’ ஊடகத்தளங்களின் அபிமான வாசகப் பெருமக்கள் இவ்விடயத்தில் அவதானமாக இருப்பதுடன், இதனை இயக்கும் நபர்கள் பற்றிய விபரங்கள் தெரியவரும் பட்சத்தில் அதுபற்றிய தகவல்களை வழங்கி உதவுமாறும் இத்தால் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வண்ணம்,

புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
(பிரதம ஆசிரியர் – ‘வார உரைகல்’)
புதிய காத்தான்குடி – 06
26.10.2017

Published by

Leave a comment