- இர்ஷாட் ஏ. காதர்
காத்தான்குடி: போலிச் செய்திகளும், ஊர்ஜிதமற்ற செய்திகளும் சமூக வலைத்தளங்களிலும், இன்னும் சில பொய்ச்செய்திகளின் ஊடகங்களிலும் தொடர்ந்து வெளிக்கொண்டு வருகின்ற நிலையில், சமூகவலைத்தள பயனாளர்களும், இவ்வூடகங்களின் வாசகர்களும் தனது கண்களை இறுக மூடிக்கொண்டே “மாஷா அல்லாஹ்” என்று இடுகைகளையிட்டு, போலிச் செய்திகளுக்கும், ஊர்ஜிதமற்ற தகவல்களுக்கும் வலுசேர்ப்பது இன்றைய சமூகவலைத்தள வேடிக்கைகளில் ஒன்றாக மாறிவிட்டது.
“முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஸ், புனித இஸ்லாத்தை ஏற்றார்”, “ஆங்கில நகைச்சுவை நடிகர் மிஸ்டர் பீன் புனித இஸ்லாத்தை ஏற்றார்”, “பல வருடங்களாக மூடிக்கிடந்த இங்கிலாந்தின் பள்ளிவாயல் ஒன்றில் திடீரென அதான் ஒலித்தது”, “மஸ்ஜிதுல் அக்ஸா தாக்கப்பட்டது”, “இஸ்ரேலுக்கு சவூதி எச்சரிக்கை” போன்ற போலிச் செய்திகள் வைரஸாக பரவி வந்தன.
இவற்றுள் “மஸ்ஜிதுல் அக்ஸா தாக்கப்பட்டது” எனும் போலிச் செய்தியைத் தவிர, ஏனைய அனைத்து போலிச் செய்திகளுக்கும் முகநூல் பயனாளர்களும், குறித்த ஊடகங்களின் வாசகர்களும் “மாஷா அல்லாஹ்” என்று இடுகையிட்டு, போலிச் செய்திக்கு வக்காலத்து வாங்கி இருந்தனர்.
மார்க்க சந்தேகங்களை அல்லது போலியான இஸ்லாமிய வரலாறுகளை மார்க்க அறிஞர்களிடம் எவ்வாறு அதனைக் கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறோமோ, அந்த அக்கறை, ஊடகச் செய்திகளை வாசிக்கும் வாசகர்களிடத்தில் இருப்பதில்லை.
எதை எழுதினாலும், எதைப் பிரசுரித்தாலும் உண்மையே என்று கண்ணை மூடிவிட்டு “மாஷாஅல்லாஹ்” என்று கொமண்ட் அடிக்கும் வாசகர்கள் பலர், தற்போது “இவர்களைப்போல் ஓர் அறிவிலி சமூகவலைத்தளத்தில் இருப்பானோ?” என நகைக்கும் நிலைக்கு இவ்வாறு கொமண்ட் அடிப்பவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஓர் அரசியல்வாதி எதைக்கூறினாலும், தன்னால் முடியாததை கூறினாலும், “வெளிநாட்டு பிரதிநிதி ஒருவர் முஸ்லிம்களைப் பற்றி புகழ்ந்து பேசினார்” என வரும் செய்திகளையும் நம்பிக்கொண்டு “மாஷா அல்லாஹ்” இடும் இத்தகையவர்கள், இனிமேலாவது மாஷாஅல்லாஹ்வை மதித்து அதற்குரிய அந்தஸ்தை வழங்குவதற்கு இச்செய்தி, குறித்த சம்பவம் உகந்ததா என்பதை சிந்தித்து செயற்டவேண்டும் என கேட்கின்றேன்.
- யுவர்காத்தான்குடிக்காக, இர்ஷாட் ஏ. காதர், காத்தான்குடி
Leave a comment