கொழும்பு: ஐ.நா மனித உரிமை பிரேரணை தொடர்பில் விமல் வீரவன்ச எம்பிக்கு பேசுவதற்கு நேரம் வழங்காததற்கு ஆட்சேபனை தெரிவித்து ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் செங்கோலை தூக்கிச்செல்ல முற்பட்டதால் சபையில் குழப்பநிலை ஏற்பட்டது. இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க (ஐ.ம.சு.மு)வின் உரையைத் தொடர்ந்தும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனை பேசுமாறு சபைக்குத் தலைமைதாங்கிய ஐ.தே.கவைச் சேர்ந்த முஜிபுர் ரஹ்மான் எம்பி அறிவித்ததைத் தொடர்ந்து எதிர்த்தரப்பில் இருந்தவர்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர்.
எதிர்த்தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் விமல் வீரவன்ச எம்பிக்கு உரையாற்ற நேரம் வழங்குமாறு கோரி ஐ.ம.சு.மு எம்பிக்கள் சிலர் கோஷம் எழுப் பினர். இதற்கு சபைக்குத் தலைமைதாங்கிய முஜிபுர் ரஹ்மான் எம்பி இடமளிக் காததால் சபையில் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு ஐ.ம.சு. முவுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் சந்தர்ப்பம் வழங்கியதால், அடுத்ததாக உரையாற்ற அமைச்சர் சுவாமிநாதனுடைய பெயரே தனக்கு வழங்கப்பட்டுள்ள பட்டியலில் இருப்பதாக அவர் கூறினார்.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத எதிர்த்தரப்பினர் ஆசனங்களிலிருந்து எழுந்து தொடர்ந்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தினேஷ் குணவர்த்தன, விமல்வீரவன்ச ஆகியோர் சபை நடுவில் வந்து செங்கோலை தூக்கிச்செல்ல முயற்சித்ததோடு, இதனை பிரதி படைக் கலசேவிதர் தடுக்க முற்பட்டார்.
பிரதி படைக்கலசேவிதருடன் சேர்த்து தினேஷ் குணவர்த்தன எம்பி செங்கோலை சபை நடுவுக்கு இழுத்துச் சென்றார். நிலைமையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபைக்கு தலைமைதாங்கிய முஜிபுர் ரஹ்மான் எம்பி சபையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். ஜெனீவா பிரேரணை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை அஜித் மானப்பெரும ஆரம்பித்து வைத்ததுடன் அவரைத் தொடர்ந்து பண்டாரகொட, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சிவசக்தி ஆனந்தன், விஜித ஹேரத், அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஆகியோர் உரையாற்றினர்.
அடுத்ததாக அமைச்சர் சுவாமிநாதனை பேச அழைத்த போதே குழப்பநிலை ஏற்பட்டது. மஹிந்த சமரசிங்க அமைச்சராக இருப்பதால் அவரை ஐ.ம.சு.மு எதிர்க்கட்சி உறுப்பினராக எடுத்துக்கொள்ள முடியாது.
எனவே எதிர்க்கட்சி சார்பில் விமல் வீரவன்ச உரை யாற்றுவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என தினேஷ் குணவர்த்தன எம்பி வலியுறித்தினார்.
எனினும், தனது விருப் பப்படி அமைச்சர் சுவாமிநாதனை அழைக்கவில்லையென்றும், தனக்கு வழங்கப்பட்ட பட்டியலுக்கு அமையவே தான் அவரை பேசுவதற்கு அழைப்பதாகவும் சபைக்குத் தலைமைதாங்கிய முஜிபுர் ரஹ்மான் எம்பி கூறினார். இதனைத் தொடர்ந்தே குழப்பம் ஏற்பட்டது. சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை கூடியதும், குழப்ப நிலை தொடர்பில் கவலையடைவதாக தினேஷ் குணவர்த்தன எம்பி குறிப்பிட்டார். அதன் பின்னர் விமல் வீரவன்ச எம்பி உரையாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

Leave a comment