றியாத்: இவ்வருட ஹஜ் கடமையின்போது மக்கா (ஹஜ்) பிரதேசங்களில் இடம்பெற்ற நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சவுதி அரேபியாவின் உத்தியோகபூர்வ அறிவிப்பை விடவும் சுமார் மூன்று மடங்கு அதிகம் என ஏ.பீ. செய்திச் சேவையின் தரவுகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 769 பேர் உயிரிழந்ததாக சவுதி அதிகாரிகள் குறிப்பிட்டபோதும், குறைந்தது 2,110 பேர் பலியாகி இருப்பதாக ஏ.பீ. குறிப்பிட்டுள்ளது. செய்தி அறிவிப்புகள் மற்றும் அனர்த்தத்தில் பிரஜைகளை இழந்த 30 நாடுகளின் அறிவிப்புகளைக்கொண்டே இந்த புதிய பலி எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளில் ஹஜ் கடமையில் ஏற்பட்ட அதிக உயிர்ப்பலி கொண்ட அனர்த்தமாக இது பதிவானது. ஆரம்ப கட்ட உயிர்ப்பலியை அடுத்து சவுதி நிர்வாகம் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை புதுப்பிக்காமல் பேணி வருகிறது.

கடந்த செப்டெம்பர் 25 ஆம் திகதி இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 934 பேர் காயமடைந்ததாக சதி நிர்வாகம் குறிப்பிட்டிருந்தது.
இதில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான ஈரானில் மாத்திரம் 465 பேர் பலியாகி இருந்தனர். தவிர, ஆபிரிக்க பிராந்தியத்தில் நைஜீரியாவின் 199 பேரும், மாலியில் 198 பேரும் எகிப்தின் 192 பேரும் கொல்லப்பட்டதாக அந்தந்த நாடுகள் அறிவித்திருந்தன.
Leave a comment