கனவுகள்

mosque masjidஉம்மா உகண்டாவில்
உழுந்து வடை சுடுவார்
ஒபாமா திண்டு பார்த்து
உறைப்பு என்று சொல்வார்

அம்மிக்கு அடியாலே
அனகொண்டா ஆ என்கும்
கம்பெடுக்க ஓடையிலே
கால்கள் கல்லாகும்

படித்த வகுப்புக்கள்
படமாக ஓடி வரும்
பிடித்த பிள்ளையொன்று
பேயாக மாறி வரும்.

சுற்றுலா செல்வதற்காய்
சுறுக்காக வெளிக்கிட்டும்
சற்றும் நகராது
சாலையிலேயே வேன் நிற்கும்

வாப்பா திடீரென்று
வாசலில் கூப்பிடுவார்
சாப்பாடு வைக்கும்போது
சட்டென்று மறைந்திடுவார்

தஹஜுத்து அலாரம்
தலையணையில் அடிக்கும்
கனவிலே கணக்காக
கரத்தையில் மணியடிக்கும்.

பள்ளியிலே பாங்கு
பட்டும் படாமல் கேட்கும்
கனவினிலே தொழுகை
களாவின்றி நடக்கும்

ஓதல்கள் ஓதி
ஒழுவும் எடுத்து
சாதாரணமாய் படுத்தால்
சந்தோச கனவு வரும்.

  • காத்தான்குடி நிஷவ்ஸ்

Published by

One response to “கனவுகள்”

  1. What is that?

Leave a reply to Munir Cancel reply