முல்லைத்தீவு: ‘மீண்டும் வில்பத்தாகிறதா முள்ளியவளை’ இவ்வாறு தலைப்பிடப்பட்ட செய்திகள் முல்லைத்திவு முஸ்லிம்களை உணர்ச்சி வசப்படுத்தும் நோக்கில் பத்திரிகைகள், இணையத்தளங்கள் மற்றும் சமூக வளைத்தளங்களில் தீயாகப் பரவிக்கொண்டிருக்கிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரபுரம் கிராம சேவகர் பிரிவிலுள்ள முறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்கள் காடுகளை அழித்து குடியேறி வருகிறார்கள் என தமிழ்த் தரப்பினர்களினால் உண்மைக்குப் புறம்பான முறையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
எனினும் முல்லைத்தீவிலிருந்து மாகாண சபைக்கு தெரிவான கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் மாத்திரமே தான் பிரபல்யம் அடைய வேண்டும் என்பதற்காகவும், தமிழ் மக்களின் உரிமைக்காக போராடுவதாகவும் நினைத்து முஸ்லிம்கள் வாழும் முறிப்பு பிரதேசத்திற்கு ஒருசில ஊடகவியலாளர்களை அழத்துக்கொண்டு முஸ்லிம்களை வம்புக்கு இழுக்கும் வகையில் செயற்படுவது முல்லைத்தீவு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆனாலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் தமிழ் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். முறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்தவர்கள் என்றும் அவர்கள் அவர்களுடைய சொந்தக்காணியையே துப்பரவு செய்து குடியேறி வருகிறார்கள் எனவும் உளத்தூய்மையுடன் சொல்கிறார்கள்.
இந்தக்கிராமத்தில் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் மிக நீண்ட காலமாக நல்லுறவுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்றும் அந்த நல்லுறவில் கொஞ்சம் கூட விரிசல்கள் ஏற்படவில்லை. ஆனாலும் அவ்வாறு விரிசல்கள் ஏற்படுத்தவே முயற்சிக்கிறார்கள்.
ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஆட்சிக்காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிலாவத்தை எனுமிடத்தில் தமிழ் மக்களுக்காக ஒரு மாதிரிக்கிராமமொன்றை அமைத்தனர்.
அதுபோல முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் குடும்பங்களையும் குடியமர்த்த மாதிரிக்கிராமமொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் அப்போதைய அரசாங்கத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
அதற்காக அரசு தெரிவு செய்த இடமே முறிப்பு கொத்தியாகும்பம் பிரதேசமாகும். அப்போதைய முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபராக இருந்த வி.சிங்காரவேல் முறிப்பு கொத்தியகும்பம் பிரதேசத்தில் முஸ்லிம் மக்களுக்காக அரை ஏக்கர் காணியை வழங்கி அங்கு மாதிரிக்கிராமமொன்றை அமைக்கும் நோக்கில் ‘கொத்தியாகும்பம் விசாலிப்பபுத்திட்டம்’எனும் திட்டத்தின் கீழ் 1981ஆம் ஆண்டு காணிக் கச்சேரியொன்றை நடத்தியுள்ளார்.
1981ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி குறித்த காணிக்கச்சேரி நடத்தப்பட்டுள்ளதுடன், காணிக்கச்சேரியிலிருந்து 77 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், 13பேர் காத்திருக்கும் பட்டியலில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு காணிக்கச்சேரி மூலம் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களும் உதவி காணி ஆணையாளரினால் உத்தியோகபூர்வமாக 1981ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த பட்டியலில் ஆட்சேபனைகள் ஏதேனும் இருப்பின் 1982ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி காலை 9.30 மணி முதல் 10.30வரை தண்ணீரூற்று கிராம சேவகரிடம் ஒப்படைக்கும்படியும் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காணிக்கச்சேரியில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களின் பிரதிகள் தகவலுக்காக முல்லைத்திவு மாவட்ட அமைச்சர், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி சபையின் தலைவர், முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற அங்கத்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி சபையின் அங்கத்தவர்கள், முல்லைத்தீவு மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு நடத்தப்பட்ட காணிக்கச்சேரியில் 77 பேருக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்பட்டடதுன் குறித்த காணியும் உரியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் , இவற்றில் நான்கு பேர் குறித்த காணியில் குடியேறாமல் இருந்தமையால் அவை பள்ளிவாயல், பொதுமண்டபம், பாலர் பாடசாலை உள்ளிட்ட பொதுத் தேவைகளுக்hககவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதனை குறித்த கொத்தியாகும்பம் விசாலிப்பு திட்டத்தின் (அரை ஏக்கர்) காணி வரைபடம் ஆதாரமாகக் காட்டி நிற்கிறது.
இது இவ்வாறு இருக்க 1970 மற்றும் 1976 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முறிப்பு, வன்னியன்மேடு, கொத்தியாகும்பம், ஆகிய பகுதிகளில் இரண்டு, மூன்று ஏக்கர் வீதம் காணிகள் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்குரிய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுப் பத்திரம் (போமிட்) உள்ளிட்ட ஆவணங்களும் அவர்களிடம் இருக்கின்றன. ஆக, மொத்தத்தில் முறிப்பு பிரதேசத்தில் 253 முஸ்லிம் குடும்பத்திற்கு அரசாங்கத்தினால் 630 இற்கும் கூடுதலான காணிகள் வழங்கப்பட்டிருக்கிறது.
குறித்த காணிகளுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட போமிட் உள்ளிட்ட ஆவணங்களும் உரியவர்களிடம் உள்ளதுடன், யுத்தம், இடப்பெயர்வு என்பவற்றால் சிலருடைய காணியின் போமிட் உள்ளிட்ட ஆவணங்கள் காணாமலும் போயுள்ளன.
இவ்வாறு காணாமல் போன காணியின் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பத்திரத்தை (போமிட்) பெற்றுக்கொள்வதற்காக காணிக்குச் சொந்தமானவர்கள் பிரதேச செயலகத்தின் ஊடாக மாகாண காணி திணைக்களத்திடம் விண்ணப்பித்துள்ளனர்.
1982ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் முறிப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளில் முஸ்லிம்;கள் குடியிருந்தனர். ஆப்போது அந்தப் பிரதேசத்தில் ஜூம்ஆப்பள்ளிவாசலொன்றும் இருந்துள்ளதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையினால் முறப்பு பிரதேசத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி அயல் கிராமமான தண்ணிரூற்று, நீராவிப்பிட்டி, ஹிஜ்ராபுரம் ஆகிய கிராமங்களில் உறவினர்களின் வீட்டிலும், பாடசாலையிலும் தங்கியிருந்தனர்.
அதன் பின்னர் அந்தக்காலப்பகுதியில் போர் உக்ரமடைந்துள்ளதும், இந்நிய இராணுவத்தினரின் வருகையும் அடுத்து 1990ஆம் ஆண்டு வடபுல முஸ்லிம்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட போது முல்லைத்தீவு முஸ்லிம்களும் கையில் உள்ளதை எடுத்துக்கொண்டு புத்தளம், அநுராதபுரம் போன்ற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றனர்.
இவ்வாறு வடபுல முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து சென்றதும், அதனால் பட்ட துன்பங்களும், கஷ்டங்களும் எழுதி விபரிக்க முடியாதவை.
எனினும் யுத்தம் முழுமையாக நிறைவுக்கு வந்து, சமாதானம் ஏற்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு முஸ்லிம் மக்கள் தமது சொந்த மண்ணில் வாழுவதற்கு மிகவும் ஆசையுடன் காணப்படுகின்ற போதிலும் அனைவரும் அங்கு சென்று வாழ்வதற்கான சூழ்நிலை காணபப்டவில்லை.
காரணம் முல்லைத்தீவு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது காணப்பட்ட சனத்தொகையையும் பார்க்க தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் ஒரு பகுதியினர் மட்டுமே முல்லைத்தீவில் சென்று குடியிருக்கின்றார்களே தவிர, எல்லோரும் அங்கு சென்று குடியிருக்க முடியாத அவல நிலை காணப்பட்டது.
இதற்கு காரணம் சொந்த காணி , வீடு இல்லாத குறையாகும். இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த காணியற்ற அனைவருக்கும் பொருத்தமான இடத்தில் அரச காணியை தெரிவு செய்து அதனை பிரதேச செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர்களின் அனுமதிகளுடன் காணிக்கச்சேரி நடத்தி பொருத்தமானவர்களுக்கு காணிகளை கொடுப்பதற்கான ஆரம்ப முயற்சிகள் கடந்த 2012ஆம் ஆண்டளவில் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் துரதிஷ்டவசமாக அந்தக் காணியை முஸ்லிம் மக்களுககு வழங்க முடியாமல் போயுள்ளன. இதற்கும் மதவாதம், பிரதேசவாதம் என்று வெறிபிடித்து திரியும் இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருசில உறுப்பினர்களே காணரமாகும்.
எனினும் அப்போது அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்த போதிலும் பின்னர், கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தினால் காணியற்ற முல்லைத்தீவு முஸ்லிம் குடும்பங்களுக்கு பொருத்தமான இடத்தில் அரச காணியை வழங்குவதற்குரிய காணிக்கச்சேரிகளும் இரண்டு, மூன்று தடவைகள் நடத்தப்பட்டன. அவ்வாறு காணிக்கச்சேரிகள் நடத்தப்பட்டும் சமாதானத்திற்குப் பின்னரான காலப்பகுதியில் முல்லைத்தீவு முஸ்லிம்களுக்கு இன்றுவரை அரசாங்கத்தினால் ஒரு இஞ்சிக் காணிகூட வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரியவிடமாகும்.
1990ஆம் ஆண்டுக்குப் பின்னர் முல்லைத்தீவு முறிப்பு பிரதேசத்திலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேறியமையால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காணியை உரிய முறையில் பராமறிக்க முடியாமல் போயுள்ளதுடன், இதனால் பெருங்காடாக காட்சியளிக்கிறது.
சமாதானம் ஏற்பட்டதன் பின்னர் அந்த மக்கள் தமது சொந்த ஊரில் குடியேறச் சென்றுள்ளதுடன், காடுகளாக காட்சியளிக்கும் காணிகளை துப்பரவு செய்யுமாறு பிரதேச செயலகத்தினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கமையவே முறிப்பு பிரதேசத்தில் காணிகள் இருக்கின்ற அனைவரும் தமது காணிகளை துப்பரவு செய்யும் முயற்சியில் ஈடபட்டனர்.
குறித்த காணியை துப்பரவு செய்து அங்கு வீடு, மலசலகூடம், கிணறு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்குக் கூட பண வசதியில்லாமல் கஷ்டப்பட்ட முறிப்பு முஸ்லிம்கள் தனவந்தர்கள், நண்பர்கள்;, வெளிநாட்டிலுள்ளவர்களின் உதவியைப் பெற்று காணியை துப்பரவு செய்து தற்காலிக கொட்டில்களையும் அமைத்து வருகிறார்கள்.
ஆங்கு இருப்பதற்கு வீடு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள போதிலும், மலசலகூடம், குடிப்பதற்கும், குளிப்பதற்கும் நீர் இன்றி, பெரும் கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்ற போதிலும் சில குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்மையால் காலையில் காணிக்கு சென்று சென்று பின் மாலையில் தமது உறவினர்களின் வீட்டுக்குச் சென்று தங்கிவாழும் நிலையே தற்போது காணப்படுகிறது.
ஆனால், இன்று முறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்கள் காடை அழித்து அரச காணியை பிடிக்கிறார்கள் என்பதும், இவர்கள் புத்தளத்திலிருந்தும், அக்கரைப்பற்றிலிருந்தும், சம்மாந்துறையிலிருந்தும் வந்தவர்கள் என்று வெறும் உண்மைக்குப் புறம்பான முறையில் கருத்துக்களை வெளியிடுவதில் எந்தவிதமான உண்மைகளும் கிடையாது என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசாங்கத்தினால் முறிப்பு பிரதேசத்தில் வழங்கப்பட்ட காணிகளுக்குசுரிய ஆவணங்கள் உரியவர்களிடம் இருக்கின்ற போதிலும் புத்தளத்தில் இருந்து வந்து காட்டை அழித்து காணி பிடிக்கிறார்கள் என்று முறிப்பு பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு இரண்டு ஏக்கர் காணியோ மூன்று ஏக்கர் காணியோ வழங்கப்படவில்லை என்று வரலாறு தெரியாமல் வாய்க்குவந்தபடி பேசுகின்ற அறிக்கைகள் மூலம் முஸ்லிம் சமூகத்தை புண்படுத்துகின்ற, தமிழ் முஸ்லிம் மக்களிடையே இருக்கின்ற நல்லுறவில் விரிசல்களை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.
முல்லைத்தீவில் தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் புரிந்துணர்வுடன் இணைந்து வாழ்வதற்கும், முல்லைத்தீவு முஸ்லிம்களின் கௌரவமான மீள்குடியேற்றத்திற்கும் இரண்டு தரப்பினரைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஒரே மேசையில் அமர்ந்து பேச வேண்டும்.
1990ஆம் ஆண்டுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் எப்படி ஐக்கியத்துடன் வாழ்ந்துவந்தார்களோ அதுபோலவே தொடர்ந்தும் ஒற்றுமையாக வழ்வதற்கு தமிழ் முஸ்லிம் மக்கள் விரும்புகிறார்கள்.
- முல்லைத்தீவிலிருந்து முஹம்மட் ரிபாக்

Leave a comment