- மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர் அப்துல் அஸீஸ்
காத்தான்குடி: மிகப் பழமைவாய்ந்த அரசியல் வரலாற்றைக் கொண்ட தலைவர்களின் சந்ததிகள் இன்று தலைமைத்துவத்தில் இருந்து வருகிறார்கள். இருப்பினும் புரட்சிகர சமூக மாற்றத்திற்கான அரசியல் முன்னெடுப்புக்கள் மற்றும் சமூக மாற்றங்களைச் செய்கின்றவர்கள் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இன்று உலகத் தலைவர்களிடையே இருக்கின்ற பிரச்சினைகளுள் தலையானது தலைமைத்துவப் பிரச்சினை. இவ் அதிகாரத்துவம்தான் சுரண்டலையும், அச் சுரண்டலுக்கான நியாயங்களையும் சமூகத்தில் கற்பிக்கின்றது.
தலைவர் என்றால் மற்றோரின் நடத்தை மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவராக இருக்க வேண்டும். இதே போல் தலைமைத்துவம் என்பது சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும். தலைவராக எவரும் பிறப்பதில்லை, தகுதியில்லாத் தலைமைத்துவம் நிலைப்பதில்லை என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும், அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவி ஸல்மா ஹம்ஸா தலைமையில் காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலயத்தில் தமிழ், முஸ்லிம் யுவதிகளுக்காக நடைபெற்ற தலைமைத்துவம் என்ற தொனிப் பொருளிலான செயலமர்வின் போது வளவாளராக கலந்து கொண்டு விரிவுரையாற்றிய அஸீஸ் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

வீட்டில் தொடங்கி, பொது வேலைகளில் வளர்ச்சிபெறும் தலைமைத்துவ கட்டமைப்புக்கள் மக்கள் பெரும் ஆதரவைப் பெற்று அரசியல் பணிகளில் தலைவர்களாக ஆக்கப்படுகிறார்கள். தலைமைத்துவத்தில் பெண்ணும் இருக்கலாம், ஆணும் இருக்கலாம். இவர்களுக்கு பொறுமை, சகிப்புத் தன்மை மற்றும் விட்டுக் கொடுத்தல் என்ற பண்பாடு கட்டாயம் இருக்க வேண்டும். உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் அவசியம்.
ஒரு ஜனநாயக தலைமைத்துவத்தில் அனைவருக்கும் கருத்துக்கூறுவதற்கு உரிமையளித்தல், அதற்கமைய முடிவெடுத்தல், முடிவெடுக்கும் வேளையில் பெரும்பான்மையினரின் கருத்துக்கு அமைவாக முடிவெடுத்தல், சுய கருத்தை திணிக்காமை என்பன அவசியமாகும்.
ஒரு சட்டபூர்வமான தலைமைத்துவத்தில், உறுப்பினர்களின் உணர்வுகளை விட சுற்றிக்கைகள், சட்டதிட்டங்கள். ஒழுக்கக் கோவைகளுக்கு முக்கியத்துவமளித்தல், புதிய விடயங்கள் உள்வாங்குவதைக் காட்டிலும் ஒழுக்க விதிகளுக்கு அமைவாக செயற்படல், முடிவெடுத்தலில் உறுப்பினர்களின் கருத்துக்களை விட, சட்டக் கோவைகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவமளித்தல், தனிமனித கருத்துக்கள் உள்வாங்கப்படாமை போன்றவைகள் பண்புகளாகக் காணப்படும்.
இதை விட பெறுமதியாக பெற்றோர் தலைமைத்துவம் காணப்படும். இதில் பிள்ளைகளுக்கிடையே சமத்துவமின்மையைக் கொண்டிருத்தல், கருத்துக்கூறும் உரிமை குறிப்பிட்ட அளவே பிள்ளைகளிடம் இருத்தல், சிலவேளைகளில் முடிவெடுக்கமுடியாத முடிவுகளை நிறைவேற்றல், கண்டிக்கும் வேளையில் கண்டித்து, அரவணைக்கும் வேளையில் அரவணைக்கும் தன்மை போன்றவை சிறப்பமசஙகளாக காணப்படும் என மேற்கண்டவாறு அஸீஸ் தெரிவித்தார்.
Leave a comment