- எம்.ஐ. அப்துல் நஸார்
காத்தான்குடி: உஸ்தாத் அஷ்-ஷெஹ் எம். ஏ.எம். மன்சூர் (நளீமி) யினால் எழுதப்பட்ட குர்ஆனிய சிந்தனை என்ற தலைப்பிலமைந்த அல்குர்ஆன் விளக்கவுரை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16.10.2015 வெள்ளிக்கிழமையன்று மாலை 7.00 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் செயலாளர் ஏ.எம். சாதிக்கீன் தெரிவித்தார்.
மேற்படி அல்குர்ஆன் விளக்கவுரை நூல் வெளியீட்டு விழா தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
அவரைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்த காத்தான்குடி சமாதான ஒன்றியத்தின் உறுப்பினரான எஸ்.எம்.சாதுலி, மேற்படி விழா றாபிதத்துன் நளீமிய்யீன் அமைப்பின் தலைவர் அஷ்-ஷெஹ் எஸ்.ஏ.கே. அப்துர் ராஸிக் (நளீமி) தலைமையில் நடைபெறவுள்ளதாகவும், நிகழ்வின் கௌரவ அதிதிகளாக காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் அப்துல் காதர் பலாஹி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் அல்ஹாஜ் றஊப் ஏ மஜீட் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும், விசேட அதிதியாக உஸ்தாத் அஷ்-ஷெஹ் எம்.ஏ.எம்.மன்சூர் (நளீமி) கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நூல் அறிமுக உரை கவிமணி எம்.எச்.எம்.புஹாரி பலாஹியினால் நிகழ்த்தப்படவுள்ளதோடு, நூல் ஆய்வுரையினை தென் கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லமிய கற்கைகள் நெறி பீடாதிபதி அஷ்-ஷெஹ் எஸ்.எம்.எம்.மஸாஹிர் (நளீமி) யினால் நிகழ்த்தப்படவுள்ளது.
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக எழுதப்பட்ட அல்குர்ஆன் விளக்கவுரை நூலினது இரண்டாவது வெளியீடே காத்தான்குடியில் தற்போது நடைபெறவுள்ளதாகவும், இதன் முதலாவது வெளியீடு கொழும்பில் நடைபெற்றதாகவும் தெரிவித்த அவர் பிரதியொன்றின் விலை 1,900 ரூபா எனவும் தெரிவித்தார்.

Leave a comment