தூக்கிலிடும் வேலைக்கு நேர்முகத்தேர்வு இடம்பெற்றது!

hangகொழும்பு: இலங்கையில் தூக்கு தண்டனைக் கைதிகளை தூக்கிலிடும் வேலையை செய்வோரை தேர்ந்தெடுக்க நேற்று (13) நேர்முகத் தேர்வு நடந்தது. இந்த வேலைக்காக 24 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், அவர்களில் 14 பேர் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தனர் எனவும், நேர்முகப்பரீட்சையில் பெற்றுக்கொண்ட மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களில் இருவர் இன்னும் சில தினங்களுக்குள் தெரிவு செய்யப்படவுள்ளனர் எனவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேர்முக தேர்வுக்கு வருகை தந்தவர்கள் தூக்கிலிடும் தொழிலுக்கு தாம் உள ரீதியாக தயாராகிருப்பதை உறுதிப்படுத்தும் மருத்துவ சான்றிதழ்களையும் கொண்டுவந்தனர் என்று அதிகாரி தெரிவித்தார்.

இலங்கையில் மரண தண்டனை சட்டப்புத்தகத்தில் இருந்தும், 1976லிருந்து அந்த தண்டனை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இலங்கையில் தூக்கு தண்டனை நிறைவேற்றும் வேலை செய்யும் ஆட்களும் இல்லாத நிலை கடந்த பல ஆண்டுகளாக இருந்திருக்கிறது. கடைசியாக 2014ம் ஆண்டில் இந்த வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், பயிற்சி பெற்ற பின், வேலைக்கு வர பயந்து, வேலைக்கு வராமலே நின்று விட்டார்.

இலங்கையில் சுமார் 400 பேர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படாத நிலையில் இருக்கின்றனர்.
இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தால் அடுத்த ஆண்டிலிருந்து இலங்கை மரண தண்டனையை அமல்படுத்தும் என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Published by

Leave a comment