கொழும்பு பாபர் வீதி கோவில் தேர் விவகாரம், சுமுகமான தீர்வு காணப்பட்டது – நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

nfgg1கொழும்பு: கடந்த ஒரு சில நாட்களாக கொழும்பு பாபர் வீதியில் அமைந்துள்ள கோயிலில் தேர் எடுத்தல் தொடர்பான சர்ச்சைக்குறிய செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வெளிவந்து கொண்டிருந்தன. ஒரு சில முஸ்லிம் தீவிரவாதப் போக்குடையவர்கள் குறித்த கோவிலில் தேர் எடுப்பதற்கு தடை விதிப்பதாகவும், கோவில் நிர்வாகிகளை அச்சுறுத்துவதாகவும், அதனால் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி நிச்சயக்கப்பட்டிருந்த தேர்த் திருவிழாவினை நடத்த முடியாமல் போனமை குறித்தே இந்த சர்ச்சை நிலவியது.

இந்த சூழ்நிலையில் தேசிய நல்லிணக்கத்திற்கான கௌரவ அமைச்சர் மனோ கணேஷன் அவர்கள் சம்பந்தப்பட்டு இவ்விடயத்தை முஸ்லிம் தலைமைகளிடம் பேசி சுமுகமான ஒரு தீர்வினைக்காண வேண்டுமென ஒரு முயற்சியை மேற்கொண்டார்.

nfgg1

அந்த வகையில் கொழும்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் அவர்களும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் நஜாஹ் மொஹமத் அவர்களும் கௌரவ அமைச்சர் மனோ கணேஷன் அவர்களுடன் இணைந்து குறித்த தரப்பினர்களுடன் தொடர்பு கொண்டு இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டனர்.

nfgg

இதன் விளைவாக இன்று 12.10.15 காலை 9.00 மணிக்கு தேசிய நல்லிணக்கத்திற்கான அமைச்சில் அமைச்சர் மனோ கணேஷன் தலைமையில் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் ந.தே.மு யின் பொதுச் செயலாளர் நஜாஹ் மொஹமத் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், அமைச்சின் உத்தியோகத்தர்கள், பாபர் வீதி மஸ்ஜித் நிர்வாகிகள், கோயில் தர்மகர்த்தாக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த விவகாரம் ஒரு சர்ச்சையாக மாறியமைக்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் கலந்துரையாடியதுடன் ஊடகங்களிலும் சமூக வளைத் தளங்களிலும் பிரச்சாரம் செய்யப்படுவது போன்று பாரிய பிரச்சினைகள் எதுவும் இல்லை எனவும் பரஸ்பர புரிந்துணர்வும் ஒரு சில விட்டுக்கொடுப்புகளும் இல்லாமையே இத்தகைய சர்ச்சைக்கு காரணம் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. இவ்வாறான சூழ்நிலைகளில் பிரச்சனைகளை கலந்துரையாடி சுமுகமாக தீர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், சமூக வலைத்தளங்களில் செய்திகளை, படங்களை பிரசுரிக்கும் போது கவனமாகவும் பொறுப்புணர்வுடனும் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

நாம் மிகவும் சிரமப்பட்டு ஏற்படுத்தியுள்ள நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நாட்டில் சுமுகமான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை குழப்பியடிப்பதட்காக இனவாத சிந்தனை கொண்ட தீவிரவாத சக்திகள் தருணம் பார்த்துக் கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நாம் கவனமாக செயற்பட வேண்டியுள்ளோம் என்றும் மீண்டும் அவ்வினவாத சக்திகள் எழுச்சி பெறுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது எனவும் அங்கு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே ஏற்பட்டுள்ள சர்ச்சையை சுமுகமாகத் தீர்க்கும் வகையில் ஏற்கனவே திட்டமிட்டு நடத்த முடியாமல் போன தேர் எடுக்கும் நிகழ்வை இம்மாதம் 22ஆம் திகதிக்கும் 31 ஆம் திகதிக்குமிடையில் ஏதாவதொரு தினத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மேற்கொள்ளும் என கூட்ட இறுதியில் தீர்மானிக்கப்பட்டது.

இவ்விடயத்தை சுமுகமாகத் தீர்ப்பதற்கு முஸ்லிம் சமூகம் சார்பாக பலரும் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். குறிப்பாக அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் கொழும்பு மத்திய கிளை உறுப்பினர் மௌலவி லபீர் அவர்களும், கொழும்பு மாவட்ட பள்ளிவாயல்களின் சம்மேளன உறுப்பினர் அல்ஹாஜ் ஜஹ்பர் அவர்களும் எமக்கு உதவியாக செயட்பட்டமையை நன்றியோடு நினைவு கூறுகிறோம். மேலும் இப்பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுகளும்.

Published by

Leave a comment