கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டம் முழங்காவில் பகுதியில் வீட்டுத்திட்டப் பயனாளியான பெண் ஒருவரிடம் அதிகாரி ஒருவர் பாலியல் சலுகை கோரியதாகக் கூறப்படும் விடயத்தில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியிலான இந்த வீட்டுத்திட்டத்தை தன்னார்வ தொண்டு நிறுவனமாகிய இலங்கை செஞ்சிலுவைச் சங்கமே செயற்படுத்தி வருகின்றது. இந்த நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப அதிகாரி ஒருவரே பாலியல் சலுகை கோரியதாக முறையிடப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகின்றனர். கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
சம்பந்தப்பட்ட அதிகாரி கட்டாய விடுப்பில் இருப்பதாகவும் விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் சாட்சியங்கள் கிடைக்குமானால் குற்றவியல் விசாரணைக்கு காவல்துறையின் உதவி நாடப்படும் என்று செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இதேவேளை, அரச தரப்பிலும் இது தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
வடக்கு கிழக்கு பிரதேசத்தில், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள 89 ஆயிரம் குடும்பங்கள் பெண்களை, தலைமைத்துவமாகக் கொண்டிருப்பதாகவும், இந்தப் பெண்கள் எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளில் பாலியல் லஞ்சம் என்பது சாதாரணமானது. இது புதிய விடயமல்ல என்று பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு என்ற பெண்கள் செயற்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஸ்ரீன் ஸரூர் கூறுகின்றார்.
இந்தப் பெண்கள் இயற்கை வளங்களையே தங்களுடைய தேவைகளுக்காக சார்ந்திருக்கின்றார்கள். இந்த வளங்கள் யுத்தம் முடிவடைந்து 6 வருடங்களாகிய பின்னரும், இராணுவம் மற்றும் அரச அதிகாரிகள் தன்னார்வ தொண்டு நிறுவன அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதனால் அவற்றைப் பெற்றுக்கொள்ளச் செல்லும் பெண்கள், கட்டாயமாக, இத்தகைய பாலியல் லஞ்சத் தொல்லைக்கு ஆளாக நேரிடுகின்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைத் தடுக்க வேண்டுமானால், யுத்தத்தின் பின்னர் வருங்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள கட்டமைப்புக்களில் தீர்மானங்களை எடுக்கும் நிலையிலும் செயற்படுத்தும் நிலையிலும் 50 வீதமான பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும்.
நாட்டில் நடைமுறையில் உள்ள லஞ்ச ஊழல் தொடர்பான சட்ட விதிகளில் பொருட்கள் மற்றும் பணம் என்பவற்றைப் பெறுவதையே லஞ்சக் குற்றமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பாலியல் லஞ்சம் பற்றி அதில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த சட்ட விதிகளில் பாலியல் லஞ்சக் குற்றம் குறித்து தெளிவான அம்சங்கள் சேர்க்கப்பட வேண்டும். அத்துடன் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான ஒழுக்கக் கோவையில் பாலியல் லஞ்சம் கோருபவர்களுக்கு எதிராக தண்டனை வழங்குவதுடன், அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற விதிமுறைகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீன் ஸரூர் தெரிவித்தார்.
Published by

Leave a comment