பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்
கொழும்பு: கொழும்பு 13, பாபர் வீதியிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழாவை முஸ்லிம்கள் நிறுத்த முற்படுவதாக கூறப்படுவது வெறும் வதந்தியாகும். ஒருசிலரின் செயற்பாடுகளைவைத்து நாட்டில் முஸ்லிம்கள் தொடர்பில் தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்தப்படுகின்றது. சமய நிகழ்வுகளை தடை செய்வதற்கோ அதற்கு இடையூறு விளைவிப்பதற்கோ நாம் சந்தர்பமளிக்கப்போவதில்லை என தெரிவித்த கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரான அமைப்பாளுமான முஜிபுர் ரஹ்மான் இது குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் இந்து மத விவகார, மீள் குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் தேசிய கலந்துறைாயாடல் அமைச்சர் மனோ கனேஷன் மற்றும் அப்பிரதேசத்தை சேர்ந்தவரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரிமளஸ் கொஸ்தா உள்ளிட்டோருடன் கலந்தாலோசித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது குறித்து முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவிக்கையில்,
பாபர் வீதியில் பாரிய சர்ச்சைக்குரிய எந்த சம்பவங்களும் இடம்பெறவில்லை. அங்கு முஸ்லிம்களும் சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர். ஒரு சிலர் ஆரம்பத்தில் பாபர் வீதி 36 ஆம் ஒழுங்கையிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழா குறித்து ஆட்சேபனை தெரிவித்னரே தவிர அதனை எதிர்க்கவில்லை. தற்போதுவரை அப்பகுதியில் எவ்விதமான அசம்பவிதங்களும் ஏற்படவில்லை. இந்நிலையில் சிலர் வேண்டுமென்றே தவறான செய்திகளை பரப்புகின்றனர். இது வெறுக்கத் தக்க செயற்பாடாகம்.
கொழும்பில் முஸ்லிம்களும் தமிழர்களும் ஒரே மொழியை பேசும் சமூகத்தவர்கள் என்கிற ரீதியில் அன்னியோன்யமாக சகவாழ்வுடன் வாழ்கின்றனர். சிலரின் செயற்பாடுகள் இதற்கு குந்தகமாக அமைகின்றது. இவ்விடயம் ஊடகங்கள் மூலமாக பெரிது படுத்தப்பட்டிருக்கிறது. இதனையிட்டு மிகவும் மனவேதனையடைகின்றேன்.
கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக பல சூழ்ச்சிகள் இடம்பெற்றது. இதில் இனவாதிகள் தோல்வியடைந்தனர். இன்று தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிணக்குகள் ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனர். இவ்விடயத்தில் ஒரு சிலர் வீனாக தலையிட முற்படுகின்றனர். ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருவிழா விவகாரத்தை பூதாகரமாக்கி அதில் குளிர் காய முற்படுகின்றனர்.
இவற்றுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை. நல்லாட்சியில் இன முறுகளுக்கு இடம் கொடுக்கப்போவதில்லை. அதற்கு வழிசமைப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் பின்வாங்கப்போவதில்லை.
பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ளக் கூடிய இவ்விடயத்தை பூதாகரமாக மற்றவேண்டாம் என்றார்.
Published by

Leave a comment