தாருல் அதர் அத்தவிய்யாவிற்கு ஓர் திறந்த மடல்

Dharul Athar logoAM.பர்சாத்,
C13/4, தக்வா வீதி,
புதிய காத்தான்குடி-03.
08.10.2015

தலைவர்/ செயலாளர்,
தாருல் அதர் அத்தவிய்யா,
கப்பல் ஆலிம் வீதி,
காத்தான்குடி-02.

அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.,)

உங்களுக்கு ஒரு திறந்த மடல்

நமது ஊரின் தஃவா இயக்கங்களும், எதிர்கால தௌஹீத் ஒற்றுமையும் வலுபெற வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனையே இதனை எழுதுகிறேன்.

பல்வேறு தஃவா பணிகளில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இயங்கு இஸ்லாமிய அமைப்பாக உங்களது அமைப்பு நமதூரின் செயற்பட்டு வருகின்றது. துரதிஷ்ட வசமாக நமதூரில் பல்வேறு கோணங்களில் தக்கவா இயக்கங்கள் பிரிந்தும் செயற்படுகின்றன. இவ்வாறான நடவடிக்கைகள் தொடராமல் ஊரில் தௌஹீத் ஒற்றுமையை கடைப்பிடிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு எமது ஊர் தள்ளப்பட்டுள்ளது.

இருப்பினும் உங்கள் அமைப்பின் செயற்பாடு தற்போதைய சூழலில் பக்க சார்பாகவும் ஏதோர்சித் தனமான நடவடிக்கைகளால் உங்கள் அமைப்பின் நன்மதிப்புக்கு பெரும் குந்தகத்தை ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக உங்கள் அமைப்பால்தான் ஊரில் தௌஹீத் பிரிவினைகளும் ஒற்றுமைகளும் சீர்குலைந்துள்ளது என்பது இம்முறை ஹஜ் பெருநாள் தொழுகை மூலம் நிரூபணமானது.

இம்முறை ஹஜ் பெருநாள் தொழுகையை அனைத்து அமைப்புக்களும் ஒற்றுமைப்படுத்தி ஓர் இடத்தில் தொழும் விடயத்தில் காத்தான்குடியிலுள்ள பல புத்திஜீவிகள் ஒன்றிணைத்து ஒரு முயற்சியினை மேற்கொண்டார்கள்.

அதனடிப்படையில் அனைத்து அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இந்த விடயத்தில் காத்தான்குடி தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) உடன்படவில்லை. அதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக ஊடகங்களின் வாயிலாக முன்வைத்திருந்தார்கள். இருப்பினும் இம்முயற்சியினைக் கைவிடாமல் மற்றைய அமைப்புக்கள் அனைத்தையும் ஒற்றுமையாக தொழுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன.

இதில் குபா, தாருல் அதர், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம், மஹ்லசதுள் சுன்னாஹ் போன்ற அமைப்புக்கள் கலந்துகொண்டு பல வாதப் பிரதிவாதங்களுக்கும் பல விட்டுக்கொடுப்புக்களுக்கும் மத்தியில் (தக்பீர் கட்டுதல், சப் சீர் செய்தல், பெருநாள் குத்பா, பெருநாள் தொழுகை) என ஏகமனதாக தீர்மானித்து எழுத்துமூலம் வாசிக்கப்பட்டு இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இருப்பினும் எழுத்து மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மீறி மறுதினம் இந்நிலைப்பாட்டிலிருந்து தாருல் அதர் தனிப்பட்ட காரணங்களுக்காக ஒற்றுமையாகத் தொழவேண்டிய விடயத்தைச் சீர்குலைத்துள்ளது.

இஸ்லாமிய தஃவா பணியில் ஈடுபடும் ஊடகம் இஸ்லாமிய செய்திச் சேவைக்குள் மட்டுப்படுத்தப்படுவது ஆரோக்கியமானது. அதனைத் தாண்டி தனது சேவையினை விஸ்தரிப்பதாயின் அந்த ஊடகம் நடுநிலைமையாக செயற்பட வேண்டியது உங்கள் அமைப்புன் பொறுப்பாகும். அந்த வகையில் உங்கள் ஊடகம் பக்கசார்பாக செயற்படுகின்றது.

கடந்த 01.09.2015ல் ஜம்இய்யதுல் உலமாவால் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஒன்றினை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்தது. அதற்கு இருதினங்களுக்கு முன் ஜாம்இய்யதுல் உலமாவிற்கு என்னால் ஒரு கடிதம் எழுதப்பட்டு அது பல ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டது. அதனை பெரும்பாலான ஊடகங்கள் அதன் முக்கியத்துவம் கருதி பிரசுரித்தன. மீள்பார்வை, விடிவெள்ளி போன்ற பத்திரிகைகள் பிரசுரித்து முக்கியத்துவம் கொடுத்தன.

அந்தவகையில் உங்கள் அமைப்பின் செய்திச் சேவையான சாஜில் நியூஸ்க்கும் மேற்படி கடித மின்னஞ்சல் மூலமாக என்னால் இருதடவைகள் அனுப்பப்பட்டன. அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவுமில்லை, பதிவேற்றவுமில்லை. மாறாக குறிப்பிட்ட நிகழ்வில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்விற்கு நினைவுச்சின்னம் வழங்கியதை ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளரின் முகப்புத்தகத்தில் இருந்து புகைப்படத்தைப் பெற்றுக்கொண்டு அதனை ஒரு செய்தியாக சாஜில் மீடியா உருமையாளர் பதிவேற்றியிருந்தார். இதிலிருந்து சாஜில் மீடியாவின் பக்கசார்பு தெட்டத் தெளிவாகப் புலனாகின்றது. குர்ஆன், ஹதீஸ் அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தஃவா அமைப்பின் ஊடகமானது இவ்வாறு பக்கசார்பாக நடப்பதானது மிகுத்த வேதனை அளிக்கின்றது.

இப்படியான செயற்பாடுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் போது உங்கள் அமைப்பால் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட மாமறைக்கு ஒரு மாநாடு நிகழ்வில் உங்கள் அமைப்பால் 14 அம்சங்கள் கொண்ட பிரேரணை ஒன்று அதன் செயலாளரினால் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதில் 14வது பிரேரணையாக “அமைப்பின் பெயரால் பிரிந்துகிடக்கும் அனைத்து கொள்கை சகோதரர்களும் காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் ஓர் தலைமையின் கீழ் செயற்பட வேண்டும் என இம்மாநாடு உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது..

• உங்கள் அமைப்பால் பிரிந்து சென்றவர்களை ஒற்றுமைப்படுத்த பிரேரணை நிறைவேற்றி அரசுக்கு அனுப்புவதால் ஒரு பிரயோசனமும் கிடையாது.

• உங்கள் அமைப்பால் பிரிந்து சென்றவர்களை ஒற்றுமைப்படுத்த வேண்டியது உங்களின் கடமையே தவிர அரசின் கடமை கிடையாது.

• உங்கள் அமைப்பால் பிரிந்து பிரிந்து சென்றவர்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு உங்கள் அமைப்பு எடுத்த நடவடிக்கைதான் என்ன?

• உங்கள் அமைப்பால்தான் ஊரில் பல கோணங்களில் தஃவா அமைப்புக்கள் பிரிந்துள்ளன. உங்கள் அமைப்பிலிருந்து மற்றுமொரு அமைப்பு உருவாகுமே தவிர தௌஹீத் அமைப்புக்கள் ஒன்றிணைத்து செயற்படும் என்பது இவ்வாறான உங்களின் நடவடிக்கைகளினால் கேள்விக் குறியாகவே இருக்கும்.

கடந்த காலங்களைவிட தற்போது ஒற்றுமைப்பட வேண்டிய தேவை வலுப்பெற்று வருகின்றது. மார்க்க விரோத நிகழ்வுகள், இஸ்லாமிய அரசியல் கலாசாரத்தை உருவாக்கல். அதிகரித்து வரும் அனாச்சாரம் என்று ஒற்றுமைப்படுவதர்கான தேவை நாளாந்தம் அதிகரித்து வருவதால் ஒற்றுமை என்ற வசனத்தை வார்த்தை அளவிலும் அறிக்கை அளவிலும் விட்டுவிடாமல் அதை நடைமுறைப் படுத்தும் அமைப்பாக உங்கள் அமைப்பு இனிவரும் காலங்களிலாவது அடைந்துகொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே இந்த விடயங்களை உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.

நன்றி.

Published by

Leave a comment