லாஹூர்: பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இன்சமாம் உல் ஹக், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலில் வரவிருக்கும் சிம்பாப்வே தொடருக்கு மட்டும் இன்ஸமாம் நியமிக்கப்பட்டதாக கூறப்பட்டாலும் ஆப்கான் கிரிக்கெட் சபை தலைமைச் செயலதிகாரி ‘பீக் ஸ்டானிக் சாய் தெரிவிக்கும் போது, “இன்ஸமாம் ஒப்பந்தம் 2 ஆண்டுகள் வரை நீடிக்கலாம்” என்று கூறினார்.
கடந்த 3 ஆண்டுகளாக பாகிஸ்தான் துடுப்பாட்ட பயிற்சியாளராக இன்ஸமாம் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் இதுவரை அது குறித்த முடிவை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை எடுக்கவில்லை. காரணம் நன்கு தகுதி பெற்ற பயிற்சியாளர்களே தேவை என்று பாகிஸ்தான் கருதியது. இதனால் தற்போது துடுப்பாட்ட பயிற்சியாளராக சிம்பாப்வே முன்னாள் வீரர் கிராண்ட் பிளவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
2007ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னரே கிரிக்கெட் தொடர்பான நிகழ்வுகளில் அரிதாகவே இன்ஸமாம் கலந்து கொண்டார். சொந்த வர்த்தகம் மற்றும் மதம் சார்ந்த விவகாரங்களில் அவர் அதிகம் ஈடுபட்டார்.
இந்நிலையில் ஆப்கான் முந்திக் கொண்டு இன்ஸமாம் உல் ஹக்கை பயிற்சியாளராக நியமித்துள்ளது.

120 டெஸ்ட் போட்டிகளில் இன்ஸமாம் 8,830 ஓட்டங்களை 49.60 என்ற சராசரியின் கீழ் எடுத்துள்ளார். இதில் 25 சதங்களும் 46 அரைச்சதங்களும் அடங்கும். 378 ஒருநாள் போட்டிகளில் 11,739 ஓட்டங்களை 39.52 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் 10 சதங்கள், 83 அரைச்சதங்கள் அடங்கும்.
Leave a comment