ஊருக்கு உபதேசிப்பதைவிட தங்களுக்குள் ஒற்றுமைப்படுவதே காலத்தின் தேவை!

  • இர்ஷாட் ஏ. காதர்

kattankudy main roadகாத்தான்குடி: தாருள் அதர் அத்தஹ்விய்யாவின் மற்றுமொரு இஸ்லாமிய மாநாடு எதிர்வரும் வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் மிக விமர்சையாக இடம்பெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளும் விளம்பரங்களும் ஓர் தேர்தல்கால இறுதிக்கூட்ட ஏற்பாடுகள் போல் கலகலப்பாக இடம்பெற்று வருகின்றன.

காத்தான்குடியில் தௌஹீத் வளரச்சியின் பின்னர் பல தௌஹீத் வாதிகள் உருவாக ஆரம்பித்தனர். அதன் பின்னர் தங்களுக்குள் ஓர் தௌஹீத் அமைப்பை ஏற்படுத்தி, பிரச்சாரங்களை மேற்கொண்டும் மக்களை நேர்வழிப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபடுத்தி வந்தனர்.

தற்பொழுதும் காத்தான்குடி தௌஹீத் குழுக்கள் தங்களுக்குள் ஏதோ குறிப்பிட்ட சில இஸ்லாமிய பிரச்சாரங்களை மேற்கொண்டுவருகின்ற போதிலும், குறிப்பாக தாருள் அதரும், தேசிய தௌஹீத் ஜமாஅத்துமே (NTJ) வெளிப்படையாக பிரச்சாரப் பணிகளில் இயங்கி வருகின்றன.

சிறிலங்கா தௌஹீத் ஜமாஅத் (SLTJ) வருடத்துக்கு ஒரு முறை சர்வதேசப் பிறை சர்ச்சையை எதிர்த்துப் பேச கொழும்பிலிருந்து தங்களது சிரேஷ்ட உறுப்பினர்களை அழைத்துவந்து, ஓர் மேடை அமைப்பதோடு அவர்களது இஸ்லாமியப் பணி நிறைவடைந்து விடுகிறது.

இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் (CIG) அமைப்பானது, செயலளவில் வழிகாட்டாமல் மௌனமாக இருக்கிறது. எனினும் அறிவுபூர்வமான சிறந்த நூலகமொன்றை தன்னகத்தைக் கொண்டிருப்பதாலும், வாராந்த, மாதாந்த சிறு பயான்களை ஏற்பாடு செய்வதாலும், வருபவர்களுக்கு ஈச்சம் பழத்தையும், குர்ஆனையும் கொடுத்துவிடுவதோடு அவர்களது பணி நிறைவடைந்து விடுகிறது.

குபா தௌஹீத் அமைப்பானது பெண்கள் பயான், மற்றும் மாதாந்த மார்க்க நிகழ்வுகளை எப்போதாவது ஏற்படுத்திவிட்டு அவர்களும் ஒதுங்கி விடுகின்றனர்.

காத்தான்குடியின் மூத்த தௌஹீத் இயக்கமான இஸ்லாமிக் சென்ரர், வருடாந்த இரு பெருநாள் திடல்களை ஏற்பாடு செய்துவிட்டு கலைந்து விடுகின்றனர்.

அல்மனார் நிறுவனம் உழ்ஹிய்யா, மற்றும் நன்கொடைகளை வழங்கிவிட்டு அவர்களும் ஒதுங்கிக் கொள்கின்றனர்.

சி.ஐ.ஜி மற்றும் அல்மனார் தவிர்ந்த ஏனைய அனைத்து தௌஹீத் அமைப்புக்களும் தங்களது ஜூம்ஆ குத்பாக்களில் மாத்திரம் பித்அத்தையும் சிர்க்கையும் பட்டும் படாமலும் பிரசங்கம் செய்துவிட்டு மிம்பரைவிட்டு இறங்கி விடுகின்றனர்.

மேற்கூறப்பட்ட ஜூம்ஆ இடம்பெறும் தௌஹீத் அமைப்புக்களின் பள்ளிகளில் செல்லாது ஜம்இய்யத்துல் உலமாவின் கீழ் இயங்கும் பள்ளிவாயல்களுக்கு சென்றுவரும் தனித்துவமான தௌஹீத் வாதிகளும் சிலர் இருக்கின்றனர்.

“தாங்களே நம்பர் வன்” என்று நிமிடத்துக்கு நிமிடம் புகழ்ந்து தள்ளும் இலங்கை வானொலிகள் போன்று, இத்தகைய தௌஹீத் வாதிகளும் தாங்களே, தங்கள் அமைப்புக்களே சிறந்தது என தங்களை புகழ்ந்துவரும் இந்நிலையில்,

தங்களுக்குள் ஏற்பட்ட மார்க்கக் கொள்கை முரண்பாடுகளால் பல குழுக்களாகப் பிரிந்து செயற்படும் தௌஹீத் இயக்கங்கள் முதலில் தங்களுக்குள் ஒற்றுமைப்படுவதே காலத்தின் தேவையாகும்.

ஹாஜா கந்தூரி வந்தால் மாத்திரம் “மழைகாலத் தவளைகள்” போன்று கத்திக்கொள்ளாமல், தங்களது செயற்பாடுகள் அனைத்தும் சமூகத்தின் நேர்வழியை நோக்கியதாக அமைய வேண்டும்.

“கடலூர் அப்பா கந்தூரி” மிக விமர்சையாக இடம்பெற்றதா இல்லையா என்பதை விட, நாளை “ஆற்றங்கரை அப்பா” என இன்னுமொரு தர்ஹா இடம்பெறாமல் பாதுகாப்பதே காலத்தின் தேவை.

எனவே தாங்கள் விட்ட தவறுகள் எவை என்பதை தௌஹீத் வாதிகள் ஒரே சபையில் உட்கார்ந்து பேசவேண்டும். அதற்கு முன்னர் தங்களுக்குள் ஒற்றுமையை முதலில் ஏற்படுத்த வேண்டும்.

தாங்களே ஒற்றுமைப்படாமல், மார்க்க முரண்பாடுகளை விவாதித்து, உண்மையை வெளிப்படுத்த முடியாத இத்தகைய தௌஹீத்வாதிகள், ஊருக்கு மட்டும் உபதேசம் செய்வதால் இவர்கள் எதனை எதிர்பார்க்கிறார்கள் என்பது மட்டும் புரிகிறது.

யுவர் காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர், காத்தான்குடி

Published by

2 responses to “ஊருக்கு உபதேசிப்பதைவிட தங்களுக்குள் ஒற்றுமைப்படுவதே காலத்தின் தேவை!”

  1. avan avan markkam avan avanukku aanaal islathai arinthu kollavendiyathu owwaruvathum kattayakkadamai

  2. Thawheed Amaippukalukkul samaathaanaththai aetpaduththi kolvathu sarchaikkuriyathaa irukkirathu.

Leave a comment