-
தேசிய தவ்ஹீத் ஜமாஅத் உலமாக்கள் குழு
இஸ்லாத்தின் மூலாதாரம் திருக்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் மாத்திரம் தான் என்பதை நாம் அழுத்தம் திருத்தமாகச் சொல்லி வருகிறோம். ‘ஒரு காரியம் இஸ்லாத்தில் இருப்பதாக எமக்கு நிரூபணமாகி விட்டால் அதைச் செயற்படுத்துவதில் விட்டுக் கொடுப்பதோ, சமரசம் செய்து கொள்ளவதோ கூடாது’ எனும் கொள்கையில் நாம் உறுதியாக உள்ளோம்.
இந்த உறுதித் தன்மையையும், கொண்ட கொள்கையை ஓங்கிச் சொல்லும் தைரியத்தையும் ஏனைய இயக்கங்களிடம் காண முடியாது. அல்லாஹ்வின் அருளால் அரசியல் உள்ளடங்களாக அனைத்து விவகாரத்திலும் வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கும் இயக்கமாகவே தேசிய தவ்ஹீத் ஜமாஅத் விளங்குகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
• கொள்கையில் நடிப்பவர்களுடன் சமரசம் இல்லை!
‘இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துச் சொல்கிறோம்’ எனக் கூறித் துவக்கப்பட்ட அதிகமான இயக்கங்களின் மார்க்க நிலையோ மிகவும் பரிதாபகரமாக உள்ளது. உதாரணமாக தாருல் அதரை எடுத்துக் கொண்டால் அந்த அமைப்பிற்கு அழைத்து வரப்படும் பல (உலமாக்களின்) அழைப்பாளர்களின் கொள்கை அந்த இயக்கத்தின் கொள்கைக்கே எதிராக உள்ளது. அடிக்கடி அழைக்கப்படும் அப்துல் ஹமீட் (ஷரஈ) தொடக்கம் அதி விஷேடமாக அழைக்கப்படும் கோவை அய்யூப் வரை ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட கொள்கை முரண்பாடுகள் உள்ளன. ஒரே மார்க்க மஸ்அலாவில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு. ஒருவர் ‘கூடும்’ என்பதை இன்னுமொருவர் ‘கூடாது’ என்கிறார்.
ஒருவர் சத்தியமென்பதை மற்றுமொருவர் அசத்தியம் என்கிறார். இது குறித்து யாராவது கேள்வி கேட்டால் ‘அது அவரின் ஆய்வு. இது இவரின் ஆய்வு’ என்று சகட்டு மேனிக்கு பதில் சொல்லித் தப்பித்துக் கொள்கின்றனர்.
‘ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி பாமரர்களைக் குழப்பும் ஆலிம்களை வைத்து அழைப்புப் பணி செய்வது ஆகுமானதா? இல்லையா?’ என்பது கூட இந்த இயக்கத் தலைமைக்குப் புரியவில்லை. ‘எங்கள் கொள்கை குர்ஆன் ஹதீஸ்’ எனக் கூறும் இவர்களிடம் உள்ள மார்க்க ரீதியான உள்முரண்பாடுகளைப் பாருங்கள்!
01. பெண்கள் தங்கம் அணியக் கூடாது என்பது தாருல் அதரின் கொள்கை. ‘தங்கம் அணியலாம்’ என்பது கோவை அய்யூபின் கொள்கை.
02. ஸப்பில் கோடு அடிக்கக் கூடாது என்பது தாருல் அதரின் கொள்கை. ‘கோடு அடிக்கலாம்’ என்பது கோவை அய்யூபின் கொள்கை.
03. ஜும்ஆவில் சூரா காப் கட்டாயம் ஓத வேண்டுமென்பது தாருல் அதரின் கொள்கை.’ஓதத் தேவையில்லை’ என்பது கோவை அய்யூபின் கொள்கை.
04. கூட்டுக் குர்பானி பித்அத் என்பது தாருல் அதரின் கொள்கை. ‘கூட்டுக் குர்பானி கொடுப்பது ஸுன்னத்’ என்பது கோவை அய்யூபின் கொள்கை.
05. அத்தஹிய்யாத்தில் விரலசைப்பது தாருல் அதரின் கொள்கை. ‘அசைப்பது தேவையில்லை’ என்பது அப்துல் ஹமீத் ஷரஈயின் கொள்கை.
06. நெஞ்சில் தான் தக்பீர் கட்ட வேண்டுமென்பது தாருல் அதரின் கொள்கை. ‘நெஞ்சில் தான் கட்ட வேண்டுமென்பதில்லை’ என்பது அக்கரைப்பற்று அன்ஸார் மௌலவியின் கொள்கை.
07. ‘பெண்கள் முகத்தைத் திறக்கலாம்’ என்பது தாருல் அதரின் கொள்கை. ‘திறக்கக் கூடாது’ என்பது அக்கரைப்பற்று அன்ஸார் மௌலவியின் கொள்கை.
08. ‘சர்வதேசப் பிறை தான் சத்தியமானது’ என்பது தாருல் அதரின் கொள்கை. ‘உள் நாட்டுப் பிறையே சத்தியமானது’ என்பது பீர் முஹம்மட் காஸிமியின் கொள்கை.
09. பெண்கள் காது குத்தக் கூடாது என்பது என்பது தாருல் அதரின் கொள்கை. ‘குத்தலாம்’ என்பது அக்கரைப்பற்று அன்ஸார் மௌலவியின் கொள்கை.
10. கிழக்கு அடிவானில் உண்மையான வெளிச்சம் வந்த பிறகே சுபஹ் தொழ வேண்டுமென்பது என்பது தாருல் அதரின் கொள்கை. ‘இருட்டிலேயே சுபஹ் தொழலாம்’ என்பது பீர்முஹம்மட் காஸிமியின் கொள்கை.
11. ஸுஜூதிலிருந்து நிலைக்கு எழும்பும் போது மாவு பிசைவது போன்று கைகளை ஊன்றி எழும்ப வேண்டுமென்பது தாருல் அதரின் கொள்கை. ‘அவ்வாறு எழும்பாமல் கைகளை விரித்து எழும்பலாம் ‘ என்பது அக்கரைப்பற்று அன்ஸார் மௌலவியின் கொள்கை.
12. கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் நோன்பு நோற்கக் கூடாது என்பது தாருல் அதரின் கொள்கை. ‘இவர்கள் நோன்பு நோற்கலாம்’ என்பது கோவை அய்யூபின் கொள்கை.
13. ‘துயர்காலக் குனூத் ஓதக் கூடாது’ என்பது தாருல் அதரின் கொள்கை. ‘துயர் காலக் குனூத் ஓதலாம்’ என்பது அன்ஸார் மௌலவியின் கொள்கை.
14. மக்கா, மதீனா, பைத்துல் மக்திஸ் ஆகிய மூன்று பள்ளிகளில் மாத்திரமே இஃதிகாப் இருக்கலாமென்பது தாருல் அதரின் கொள்கை. ‘எல்லாப் பள்ளிகளிலும் இருக்கலாம்’ என்பது பீர்முஹம்மட் காஸிமியின் கொள்கை.
15. மரண அறிவித்தலை பகிரங்கமாக அறிவிக்கக் கூடாது என்பது தாருல் அதரின் கொள்கை. ‘பகிரங்கமாக அறிவிக்கலாம்’ என்பது அன்ஸார் மௌலவியின் கொள்கை.
16. மையவாடியில் பாதணி அணியக் கூடாது என்பது தாருல் அதரின் கொள்கை. அணியலாம் என்பது முபாறக் மதனீயின் கொள்கை.
17. இரண்டாம் ஜமாஅத் நடத்தக் கூடாது என்பது தாருல் அதரின் கொள்கை. ‘முதல் ஜமாஅத் முடிந்த பின் எத்தனை ஜமாஅத்துக்கள் வேண்டுமென்றால் நடத்தலாம்’ என்பது அன்ஸார் மௌலவியின் கொள்கை.
இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஒரே இயக்கத்தில் அழைப்புப் பணி செய்யும் இவர்கள் ஒரு மேசையில் உட்கார்ந்து தங்களுக்கிடையில் உள்ள முரண்பாடுகளை ஏன் பேசித் தீர்த்துக் கொள்ளக் கூடாது? ‘கருத்து முரண்பாடு ஏற்படும் போது குர்ஆன் ஹதீஸை நோக்கித் திரும்புங்கள்! அதில் ஒரு தீர்வுக்கு வரலாம்’ என்று உரக்கச் சொன்னவர்கள் ஏன் இப்படி முரண்பட்டு நிற்க வேண்டும்? தமிழகத்திலிருந்து தற்போது தாருல் அதருக்கு வருகை தந்திருக்கும் கோவை அய்யூபும், தாருல் அதரின் பிரச்சாரகர் மௌலவி அஸ்பர் (பலாஹி) அவர்களும் உட்கார்ந்து ‘முரண்பாடுகளைப் பேசினால்’ முரண்பாடுகளில் உடன்பாடு ஏற்படாதா? ‘மாமறைக்கு ஒரு மாநாடு’ நடாத்த எடுக்கும் பிரயத்தனத்தில் கால்வாசியை ஒதுக்கினால் கூட கருத்து முரண்பாடுகளை உடன்பாடாக ஆக்கிக் கொள்ளலாம்! ‘கூட்டுக் குர்பானி கூடும் என்பது கோவை அய்யூபின் ஆய்வு!, கூட்டுக் குர்பானி கூடாது என்பது எங்களது ஆய்வு!’ என்றால் இருவரில் யாருடைய ஆய்வை பொதுமக்கள் ஒப்புக் கொள்வது? முரண்படும் இரு தரப்பும் உட்கார்ந்து பேசினால் தானே ஒரு கருத்துக்கு வர முடியும்? இல்லையென்றால் மறுமை நாள் வரை முரண்பாடுகள் தொடருமே? முரண்பாடுகள் தொடருவது அல்லாஹ் விரும்பும் செயலா?
ஒவ்வொருவரின் கருத்தும் ‘ஆய்வு’ என்றால் இஸ்லாத்தில் யாருடைய கருத்தைத்தான் பிழை காண்பது? ‘எல்லாம் சரி’ என்பது இஸ்லாமியக் கொள்கையாக இருந்தால் ‘பித்அத்’ என்று எதைத்தான் சொல்வது? ‘ஆய்வு செய்யும் அனைவருடைய ஆய்வும் சரியானது’ என்றால் மௌலவி அப்துர் ர ஊபும் ‘ஆய்வு செய்துதான்’ அத்வைதத்தைச் சொன்னார். அவரது ஆய்வும் சரியானதா? கூட்டு துஆ, குனூத் ஓதலாம் என்று கூறும் ஆலிம்களும் ஏதோ ஒரு வகையில் ஆய்வு செய்துதான் கூறுகிறார்கள். ஏன் தர்ஹா வழிபாடை நியாயப்படுத்தும் அப்துல்லாஹ் ஜமாலி கூட ஆய்வு செய்துதான் தனது கருத்தைக் கூறுகிறார்.
சுன்னத் வல்ஜமாஅத் மற்றும் தப்லீக் ஜமாஅத் ஆலிம்களின் ஆய்வை ஒப்புக் கொள்ள மறுக்கும் இவர்கள் தங்களுக்குள் முரண்பட்டால் மட்டும் ‘இது இவரின் ஆய்வு! அது அவரின் ஆய்வு!’ என்று கூறி சமாளித்துக் கொள்வது ஏன்? ‘சத்தியம் என்பது ஒன்று தான்’ என்று கூறி பொதுமக்களை அழைத்து விட்டு ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி மக்களைக் குழப்புவது என்ன வகையான ஆய்வு என்று எமக்குப் புரியவில்லை!
• முரண்பாடுகளில் உடன்பாடு காணலாம்!
அல்லாஹ் கூறுகிறான் (நம்பிகை கொண்டோரே!) ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்’ (04: 59) இந்த வசனத்தின் அடிப்படையில் எமக்கு மத்தியில் ஏற்படும் கருத்து முரண்பாடுகளுக்கு கண்டிப்பாக குர்ஆன், ஹதீஸில் தீர்வு இருக்கும் என்பது புலனாகிறது. தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தில் உள்ள உலமாக்களுக்கும் அவ்வப் போது கருத்து முரண்பாடுகள் ஏற்படவே செய்கின்றன. முரண்பாடு ஏற்பட்டவுடன் ‘இது ஸஹ்றான் மௌலவியின் ஆய்வு!, இது தௌபீக் மௌலவியின் ஆய்வு!’ என்று சொல்லி எமது ஜமாஅத் சமாளிப்பதில்லை.
உலமாக்களுக்கான ஆய்வுக் கூட்டத்தை கூட்டி முரண்பாடுகளைப் பேசுகின்றனர். இதன் மூலம் ஒருமித்த கருத்து ஏற்படுகிறது. அதனால் தான் தவ்ஹீத் ஜமாஅத்தில் ஆளுக்கொரு கருத்தைச் சொல்லும் அசிங்க நிலை இல்லை. உதாரணமாக ‘கூட்டுக் குர்பானி இல்லை’ என்றால் தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து அறிஞர்களும் ஒரே நிலைப்பாடுதான். எமக்குள் முரண்பாடு ஏற்பட்ட பின் உடன்பாடும், ஒருமித்த கருத்தும் எப்படி வருகிறது என்றால் ஆய்வுக் கூட்டம் கூடுவதின் காரணமாகத்தான்! இஸ்லாமிக் சென்டர், தாருல் அதர், இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம், தவ்ஹீத் கூட்டமைப்பு போன்ற இயக்கங்களிடம் முரண்பாடுகள் நீடிப்பதற்கு அடிப்படைக் காரணம் ‘மார்க்க ஆய்வை கூட்டாகச் செய்தல்’ எனும் அச்சாணியைத் அவர்கள் தொலைத்ததுதான் என்றால் மிகையில்லை.
• ஒற்றுமை எனும் போலிக் கோஷம்
இஸ்லாத்தில் ஒற்றுமை வலியுருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒற்றுமை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இருக்க வேண்டுமென்றும் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ் கூறுகிறான் ‘அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்!’ (03:103)
நிலையான கொள்கையற்றவர்களுடனும், இஸ்லாத்தின் பெயரால் ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி மக்களைக் குழப்புபவர்களுடனும் ஒற்றுமை இருக்க வேண்டியதில்லை. எமது ஜமாஅத் ஏற்பாடு செய்யும் பெருநாள் திடலில் பெருநாள் தக்பீராக ‘அல்லா{ஹ அக்பர்’ என்று மட்டுமே சொல்ல வேண்டும். ஏனைய வாசகங்களைச் சொல்வது நரகில் சேர்க்கும் என்று அழுத்தமாகச் சொல்வோம். இப்படி இஸ்லாமிக் சென்டர் சொல்லுமா?. எமது பெருநாள் உரையில் ‘பெருநாள் தொழுகையை திடலில் தான் நிறை வேற்ற வேண்டும். பள்ளியில் நிறை வேற்றுவது கூடாது. அவ்வாறு நிறைவேற்றினால் நரகம் கிடைக்கும்’ என்று ஒங்கிச் சொல்வோம். இவ்வாறு இஸ்லாமிக் சென்டர் திடலில் சொல்வார்களா?
பிறை விவகாரத்தில் உள்நாட்டுப் பிறை எனும் வழிகேட்டில் இருக்கும் இஸ்லாமிக் சென்டரில் எப்படி இணைவது? இஸ்லாமிக் சென்டர் ஏற்பாடு செய்யும் திடலில் உரையாற்றும் உலமாக்களைப் பார்த்தால் இடத்திற்கு ஏற்ப மார்க்கத்தை வளைத்துச் சொல்பவர்களாகவும், வழிகெட்ட ஜம்இய்யதுல் உலமா அமைப்பில் அங்கம் வகிப்பவர்கவுமே இருக்கின்றனர். இன்னும் சொல்லப் போனால் மதீனாவில் படித்து வந்த அதிகமான மதனிகள் மனைவி வீட்டில் வாழ்பவர்களாக இருக்கின்றனர். இஸ்லாம் ஹராமாக்கிய வரதட்சனையில் இருக்கும் இவர்கள் ‘ஹராம் ஹலாலைப் பற்றிப்’ பேசலாமா?
கொள்கையில் இஸ்லாமிக் சென்டர் தடம் புரண்டதற்காக நேர்வழியில் இருக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தும் தடம் புரள வேண்டுமா? இவர்களுடன் சேர்ந்து பெருநாள் தொழுதால் தான் அல்லாஹ் தொழுகையை ஒப்புக் கொள்வானா? போலியாக ஒரு மணித்தியாளம் திடலில் ஒற்றுமைப்படுவதை விட சத்தியத்திற்காக சாகும் வரை பிரிந்திருப்பதே மேலானது. தூயோனைத் துதித்திட தனிப் பள்ளி அவசியமாகுவது போல் பெருநாளில் தூய சுன்னாஹ்வை அமுல்படுத்தவும் தனித்திடலே அவசியமென்பது எமது நிலைப்பாடாகும்.
• ஒரே திடலில் அனைவரையும் ஒன்றாகத் தொழு வைக்க வேண்டுமென ஆசைப்படும் சகோதரர்களுக்கு!
முதலில் நீங்கள் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்க வேண்டும். ‘நானும் தவ்ஹீத்’ என்று சொல்வதால் ஒருவன் தவ்ஹீத்வாதியாகி விடமாட்டான். ஒரு மார்க்க விடயத்தில் நாலு தவ்ஹீத் இயக்கங்கள் நாலு கருத்தைச் சொன்னால் ஏதோ ஒன்றுதான் சத்தியமாக இருக்கும் எனும் நம்பிக்கை முதலில் உங்களுக்கு வர வேண்டும்.
அல்லாஹ் சொல்கிறான் ‘அவனே உங்களின் உண்மை இறைவனாகிய அல்லாஹ். உண்மைக்குப் பின்னே வழிகேட்டைத் தவிர வேறு என்ன உள்ளது? நீங்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?’ (திருக் குர்ஆன் 10:32)
எது சத்தியம் என்பதை அறியவும், யார் இடத்திற்கு ஏற்ப நடிக்கிறார்கள்? யார் அரபிக் காசுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள்? என்பதைத் தெரியவும் சிறு முயற்சியை அவசியம் நீங்கள் மேற்கொள்ள வேண்டும். சத்தியத்தை அறிவதில் உங்களுக்கு ஆர்வமிருந்தால் தஃவாக் களத்தில் யார் உண்மையாளர்? யார் போலியானவர்? என்பதை இலகுவில் அடையாளம் கண்டு கொள்வீர்கள். அடையாளம் கண்டு கொண்டால் போலிகளை ஒதுக்கி விட்டு நேர்மையாளர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்!
கருத்து முரண்பாடுகளை உட்கார்ந்து பேசாமல் எந்த உடன்பாடும் எக்காலத்திலும் ஏற்பட்டதில்லை எனும் பேருண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்! எமக்கும் ஏனைய தஃவா இயக்கங்களுக்கும் மத்தியில் உள்ள மார்க்க முரண்பாடுகளை ஒரு சபையில் உட்கார்ந்து பேசும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்!
அப்போது யார் போலி என்பதை மிக இலகுவாகத் தெரிந்து கொள்வீர்கள்!
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரையும் சத்தியத்தில் வாழ வைத்து சத்தியத்திலேயே ஒற்றுமைப்படுத்துவானாக!

Leave a comment