காத்தான்குடி: இன்று ஹஜ்ஜூப் பெருநாள் உலகின் அநேகமான நாடுகளில் ஒரே தினத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. “சர்வதேசப் பிறை” மார்க்க இயக்கங்களும், “உள்ளுர் பிறை” மார்க்க இயக்கங்களும் ஒருமித்தே பெருநாள் கொண்டாடும் ஓர் சந்தர்ப்பம் குறிப்பாக காத்தான்குடியில் பல வருடங்களுக்குப் பின்னர் இம்முறை ஏற்பட்டிருக்கிறது.
சர்வதேசப் பிறையின் அடிப்படையில் பெருநாள் கொண்டாடுவதே சர்வதேச ஒற்றுமையை வலியுறுத்தும் என சில மார்க்க இயக்கங்களும், உள்ளுர் பிறைப்படி பெருநாள் கொண்டாடுவதே உள்நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்தும் என உள்ளுர் பிறைக்கார இயக்கங்களும் தன்பிடியை தளர்த்தாமல் தங்களது கொள்கையை முன்வைத்து வந்த நிலையில்,
இவர்களில் யார் விட்டுக்கொடுப்பாளர்கள், உண்மையாளர்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ள அல்லாஹ் இம்முறை காத்தான்குடியில் ஒரே பிறையின் அடிப்படையில் பெருநாள் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளான்.
ஆனால், தாங்களே உண்மையாளர்களாகவும், எங்களது கொள்கையே நேரானதாகவும் என தங்களை தாங்களே முதன்மைப்படுத்திக் கொள்ளும் காத்தான்குடி தௌஹீத் வாதிகளின் ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு, உண்மை, விசுவாசம் போன்ற இஸ்லாத்தின் அடிப்படை விடயங்கள் பெருநாள் திடலிலும் பிரிந்து சிதைந்து சென்றுவிட்டதை இன்று மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டனர்.
வழமைபோலவே சர்வதேசப் பிறை இரு குழுக்களும் வேறாக தொழுதன. உள்ளுர் பிறை இரு குழுக்களும் வேறாக தொழுதன.
ஓர் பிரதேசத்துக்கு ஓர் பெருநாள் திடலே எனும் நபி வழி, சுமார் ஒரு கி.மீ. நீளம் கொண்டமைந்த காத்தான்குடி கடற்கரையில் நான்காகப் பிரிக்கப்பட்டு, நபிவழித்திடல் கேவலப்படுத்தப்பட்டிருந்ததாகவே இன்று அதிகமான பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
ஊருக்கும் உலகுக்கும் சத்திய மார்க்கத்தையும், ஒற்றுமையையும் வலியுறுத்துவதாக தங்களைத் தாங்களே புகழ்ந்துகொள்ளும் காத்தான்குடி தௌஹீத் வாதிகளின் இத்தகைய செயற்பாடுகள் விமர்சிக்கத்தக்கதாகவே அமைகிறது.
இதைத்தான் கடந்த ரமழான் இறுதியின் போதும் எனது மற்றுமொரு ஆக்கத்தில் பெருநாள் திடல்கள் நான்காக இடம்பெற காத்தான்குடி காத்திருக்கிறது என குறிப்பிட்டிருந்தேன். அதன் உண்மையை மக்கள் இன்றைய தினம் அறிந்து கொண்டனர்.
விட்டுக்கொடுப்பு இல்லாத இந்த தௌஹீத் வாதிகளின் செயற்பாடுகள் கண்டிக்கத்தக்கது.
பிறை ஒன்று, இதைத்தான் “லோகல்” காரர்களும், இன்டர்நெஷனல் காரர்களும் சொல்லி வந்த “விஞ்ஞான” கண்டு பிடிப்பாகும். பிறை ஒன்றுக்காகவே பல மேடைகளை அமைத்து, நிரூபித்தும் வந்தனர்.
ஆனால் அதே ஒரு பிறைதான் இன்றும் காத்தான்குடிக்கு மேல் நிற்கிறது. ஆனால் கூடாரம் கலைந்து நான்கானது. அது காத்தான்குடியின் அதிசயமானது!
யுவர்காத்தான்குடிக்காக இர்ஷாட் ஏ. காதர்
Published by

Leave a reply to Riyas Cancel reply