தமிழ் பெண்ணிடம் கட்டணமாக தோடு பெற்ற அஷ்ரப்!

ashrofகொழும்பு: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் ஏ. எச். எம். அஷ்ரப் இன்றைய நாட்களில் பெரிதும் நினைவு கூரப்படுகின்றார். இவரின் சட்டத்தரணி உயர் தொழிலில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மிகவும் சுவாரஷியம் ஆனது. தமிழ் பெண் கட்சிக்காரர் ஒருவருக்காக விவாகரத்து வழக்கில் அஷ்ரப் ஆஜராகிக் கொண்டிருந்தார். வழக்குத் தவணைகளின்போது இப்பெண் கட்டணம் கொடுப்பார்.

ஒரு முறை கட்டணம் கொடுக்க கையில் பணம் இல்லை என்று கூறிய பெண் அடுத்த தவணையில் நிச்சயம் பணம் கொடுப்பார் என்று சொல்லி கெஞ்சினார். ஆனால் காசு தந்தால்தான் வழக்கில் ஆஜராவார், இல்லையென்றால் நீதிமன்றத்துக்கு போக மாட்டார் என்று அஷ்ரப் பிடிவாதமாக கூறி விட்டார்.

இவரிடம் பேசிப் பயன் இல்லை என்று முடிவுக்கு வந்த பெண் காதுகளில் இருந்த ஜோடி தங்க தோட்டை கழற்றி அஷ்ரப் கைகளில் கொடுத்தார். தோடுகளை பெற்று சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு நீதிமன்றத்துக்கு சென்றார் அஷ்ரப். அஷ்ரப்பின் இச்செயற்பாடு சூழ நின்ற தோழர்களை அதிர்ச்சி அடைய வைத்து இருந்தது. ஆயினும் எவரும் இது குறித்து கேட்கவில்லை.

வழக்கு பேசி வந்த பிற்பாடு பெண்ணிடம் மீண்டும் தோடுகளை கொடுத்து அனுப்பி வைத்தார். இக்கட்சிக்காரர் உண்மையில் ஏழையா? என்பதை உறுதிப்படுத்தவே இச்சோதனையை நடத்தி இருந்தார் என்று தோழர்களுக்கு சிரித்துக் கொண்டு சொன்னார் அஷ்ரப்.

இச்சம்பவத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஹசன் அலி அண்மையில் ஊடக நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

(மின்னஞ்சல்: தாய்நாடு)

Published by

Leave a comment