பல்கலைக்கழக மாணவர்களின் கொலை: மஹிந்த குடும்பம் எதிர்நோக்கும் மற்றுமொரு சிக்கல்..?

mahindaகொழும்பு: கம்பஹா பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பான விசாரணை சீ.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களாக இருந்த ஜானக மற்றும் சிசித எனும் இரண்டு மாணவர்கள் கடந்த 2012ம் ஆண்டு கம்பஹா, யக்கலையில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர்.

வாகன விபத்தொன்றில் அவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்து பொலிசாரும் விசாரணைகளை முடித்துக் கொண்டிருந்தனர். எனினும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடாக முன்னைய மஹிந்த அரசுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் ஆர்ப்பாட்டங்களில் முன்னின்று செயற்பட்டதன் காரணமாக குறித்த மாணவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பரவலாக சந்தேகிக்கப்பட்டது. மேலும் மாணவர்களின் மரணம் தொடர்பாக முன்னைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவின் விமர்சனமும் அந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்திருந்தது.

இந்நிலையில் குறித்த மாணவர்களின் மரணம் தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. மேலும் இது தொடர்பாக பொலிசிலும் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதுகுறித்த வழக்கு இன்று கம்பஹா நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மாணவர்களின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி டிகிர ஜயதிலக உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் ராஜபக்ஷவினருக்கு இன்னொரு தலையிடி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Published by

Leave a comment