லண்டன்: பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரன் மாணவப் பருவத்தில் செய்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய, விநோதமான செயல்கள் குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய அவரது வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. டேவிட் கமரன் மாணவ பருவத்தில் செய்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய/அதிர்ச்சியளிக்கத்தக்க செயல்கள் குறித்து அவரது சொந்தக் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல் தலைவர் ஒருவரே இந்த புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.
ஆஷ்கிராப்ட் பிரபு எழுதியிருக்கும் டேவிட் கமரனின் வாழ்க்கை வரலாற்று நூலில், டேவிட் கமரன் போதை மருந்தை பயன்படுத்தியதாகவும், ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது அந்த மாணவர் சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேரும்போது நடத்தப்படும் விநோத சடங்கில் பங்கேற்றார் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்த தகவல்கள் எதனையும் தாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று பிரதமர் டேவிட் கமரனின் அலுவலகத்துக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த காலத்தில் கன்சர்வேடிவ் கட்சிக்கு ஏராளமான நிதியுதவி செய்திருக்கும் ஆஷ்கிராப்ட் பிரபு, கமரன் தலைமையிலான அமைச்சரவையில் தனக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை என்பதற்காக கமரன் மீதான தனது தனிப்பட்ட பகையை தீர்த்துக்கொள்ள இந்த புத்தகத்தையும் அதில் இருக்கும் தகவல்களையும் தான் வெளியிடவில்லை என்று மறுத்திருக்கிறார்.
Leave a comment