கொழும்பு: இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்பட்டு வந்த தலைமைத்துவப் பயிற்சிகள் நிறுத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக கல்விக்கு பொறுப்பான அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல கூறியுள்ளார். பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படுகின்ற மாணவர்களுக்குக் கட்டாயப் பயிற்சியாக இதனை முன்னைய அரசாங்கம் வழங்கி வந்தது.
கடந்த 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சி நெறி 28 நிலையங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இளைஞர் யுவதிகளின் கல்வி மற்றும் உடல் உள சுகாதார நலன்களைக் கருத்தில்கொண்டு நிபுணத்துவம் வாய்ந்தவர்களினால் மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சி இது என்று அப்போதைய உயர்கல்வி அமைச்சராக இருந்த எஸ்.பி.திசாநாயக்க கூறியிருந்தார்.
ஆயினும், இராணுவத்தினரால் இவ்வாறு தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுவதை கல்வியியலாளர்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் விரும்பவில்லை. அதேநேரம், இந்தப் பயற்சியின்போது மாணவர்கள் சிலர் உயிரிழந்திருந்தமையும் இந்தப் பயிற்சியைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அப்போது வலுவூட்டியிருந்தது.
இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்தே இந்தப் பயிற்சி நிறுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
Published by


Leave a comment