முகநூல் ‘விளையாட்டு’: 200 பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து மிரட்டிய இளைஞன்
ஹைதராபாத்: ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் நண்பராக பழகி 200 பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து பணம் பறித்துள்ளார். மலக்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வரும் அப்துல் மஜீத் (21), கடந்த 1½ வருடங்களாக பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் போலி பக்கங்களை தொடங்கினார்.
பின்னர் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பணக்கார மாணவிகளை குறிவைத்து பழகி அவர்களின் புகைப்படத்தை கேட்டு பெற்றுள்ளார். மேலும், நன்கு பழகிய பெண்களிடம் அவர்களது நிர்வாண படங்களை அனுப்பும்படி கேட்டுள்ளார். பல பெண்கள் தங்களது நிர்வாண படங்களை அனுப்பி உள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் நிர்வாண படங்களை இணையத்தில் வெளியிடுவதாக கூறியும், பெற்றோருக்கு அனுப்பி விடுவதாக கூறியும் பணம் பறித்துள்ளார்.
இந்நிலையில் அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட ஜனனி என்ற மாணவி நடந்ததை தனது தாயிடம் கூறினார். இதையடுத்து அவரின் தாய் ஸ்வேதா பிரபு, தனது மகள் மூலமாகவே அப்துல் மஜீத் பற்றிய விவரங்களை சட்டிங் மூலம் சேகரித்து அவரது மிரட்டல்களை பதிவு செய்தார்.
பின்னர், அனைத்து ஆதாரங்களுடன், தனது மகள் ஜனனியுடன் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். அப்துல் மஜீத்தை பொலிசார் நேற்று கைது செய்தனர்.
அப்துல் மஜீத் (21)
விசாரணையில் அப்துல் மஜீத் பல்வேறு பெண்கள் பெயரில் 200 பெண்களை மிரட்டி பணம் பறித்து உள்ளது தெரிய வந்தது. அவரது செல்போனில் இருந்து பல்வேறு மாணவிகளின் 80 நிர்வாண படங்களை பொலிசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் 100–க்கும் மேற்பட்ட நிர்வாண படங்கள் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.
அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகார் செய்யலாம் என்று கூறிய பொலிசார் அதற்கான செல்போன் எண்களை வெளியிட்டு உள்ளனர். அது மூலமாக இதுவரை 80 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
Leave a comment