கொழும்பு: நெற் களஞ்சியமாக மாற்றப்பட்ட மத்தல விமான நிலையம் திறக்கப்படும் அறிகுறி தென்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மத்தல விமான நிலையத்தின் ஒரு பகுதி நெற்களஞ்சியமாக மாற்றப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த விமான நிலையத்தினை மீளவும் பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான அறிகுறி தென்படுகின்றது. இது தொடர்பாக சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க குறிப்பிடுகையில்,
மத்தல விமான நிலையத்தை உடனே திறப்பது குறித்து அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளதாகவும் இதனால் சீன விமானங்கள் இலங்கை வருவது எளிதாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தென் கிழக்கு ஆசியாவிலேயே சுற்றுலாவிற்கான முக்கிய தடமாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதே முதன்மையான கடமை என தெரிவித்த அவர் வரும் 2016-ம் ஆண்டில் 25 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதே இலக்கு என்றார். கடந்த வாரம் தேசிய அரசில் பதவியேற்ற ஜோன் அமரதுங்க, சுற்றுலாவை விரிவாக்க இலங்கை முடிவு செய்துள்ளதாகவும், முக்கியமாக சீனச் சுற்றுலாப் பயணிகளை கருத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதலில் சீனா விமானங்கள் வந்திறங்க ஏதுவாக மத்தல விமான நிலையத்தை திறக்க வேண்டும் எனவும் அதன் வாயிலாக ஒப்பந்த விமானங்களை அதிகம் வரவழைக்க வேண்டும் என்றார். சீன மக்கள் இலங்கைக்கு வரவும் அவர்களது பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளைச் செய்யவும் அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் இந்த விடயத்தில் சீன அரசிற்கு நாங்கள் முழு ஊக்கத்தை அளிக்கின்றோம் என்றார்.
இலங்கையின் முக்கிய சுற்றுலா ஆதாரமாக சீனா மாறி வருகிறது. மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கமானது அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, இலங்கையில் சீன மொழி மீது நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும், மேலும் சீன உணவு வகைகளை நாம் சிறிய பகுதிகளிலும் உட்படுத்த வேண்டும். பெரிய உணவு விடுதிகளை மட்டுமே சீனத்து பயணிகள் நாட வேண்டிய சூழலை நாம் உருவாக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அத்துடன் சீனச் சுற்றுலாப் பயணிகள் மேற்கத்தேய பயணிகளை விடவும் குறைவாக பணம் செலவு செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் ஜோன் அமரதுங்க, நாட்டின் அந்நியச் செலாவணி அதிகரிக்க முக்கிய காரணம் சீன சுற்றுலாப் பயணிகளே எனவும் குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்சவினால் சீன அரசாங்கத்தின் உதவியோடு அவரது ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டதே இம் மத்தல விமான நிலையம். இந்நிலையில் இந்த விமான நிலையமானது பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல என்றும், கோடிக்கணக்கான பணத்தினை மகிந்த அரசாங்கம் வீணடித்து விட்டது என்கின்ற குற்றச்சாட்டுக்கள் அண்மையில் எழுந்திருந்தன.
Published by


Leave a comment