“ஹிஸ்புல்லாஹ் எப்படி ஆசனம் பெற்றார் என்ற அந்தரங்கம் எங்களுக்குத் தெரியும்: பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை மக்கள் தெரிந்துகொள்வார்கள்”
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
கொழும்பு: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தொடர்பில் மாகாணசபை உறுப்பினர் சுபைர் அவர்கள் முன்வைத்த கருத்துகள் முற்றிலும் அறியாமையில் இருந்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பான வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படுவதை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி எதிர்த்ததாகவும் ஊருக்கு எம்.பி கேட்கும் காலத்தில் காத்தான்குடிக்கு எம்.பி வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள் என மாகாணசபை உறுப்பினர் சுபைர் தெரிவித்த கருத்துத் தொடர்பில் வினவியபோதே வடக்கு மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“வங்குரோத்துக்காரன் என்றால் பிச்சைக்காரன் என்று அர்த்தம், தேசியப்பட்டியல் உறுப்புரிமையை, மக்களால் நிராகரிக்கப்பட்ட தோல்வியடைந்த ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதியிடம் பிச்சையாகவே பெற்றுக்கொண்டார். இதனைத்தான் வங்குரோத்துத்தனம் என்று சொல்வோம். அவர் எப்படி ஆசனம் பெற்றார் என்ற அந்தரங்கம் எங்களுக்குத் தெரியும். பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை மக்கள் தெரிந்துகொள்வார்கள்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்தமைகான உண்மையான காரணத்தை உறுப்பினர் சுபைர் இருட்டடிப்புச் செய்ய முயற்சிக்கின்றார். எங்களது எதிர்ப்பு நடவடிக்கை காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ்வின் தூண்டுதலினால் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட வன்முறைத் தாக்குதலுக்கு எதிரானதாகவே அமைந்திருந்தது. தனக்கு தேசியப்பட்டியல் ஆசனம் உறுதிசெய்யப்பட்டவுடன் ஹிஸ்புல்லாஹ் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டார். பெண்கள் உட்பட எமது 10க்கும் அதிகமான ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்கள். எங்களது ஆதரவாளர்களின் கடைகள், வீடுகள் சேதமாக்கப்பட்டன. இந்த நாட்டில் மிக அமைதியாக நடந்து முடிந்த பொதுத் தேர்தல் ஹிஸ்புல்லாஹ்விற்கு தேசியப்பட்டியல் கிடைத்தவுடன் வன்முறைக்களமாக மாறியது இதனையே நாம் எதிர்த்தோம். இத்தகையவர்கள் பாராளுமன்றம் சென்று எதனை சாதிக்கப் போகின்றார்கள் என்று வினா எழுப்பினோம். இதனை வங்குரோத்துத் தனம் என்று நாளுக்கொரு மேடையும் வாரத்துக்கொரு கட்சியும் தாவுகின்ற சுபைர் போன்றவர்கள் தெரிவிப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி புதிய ஒரு அரசியல் கட்சி, எமது தேசிய அரசியல் பிரவேசம் நிகழ்ந்து இரண்டு வருடங்களுக்குள் இவ்வளவு மக்கள் ஆதரவை எம்மால் பெற முடிந்திருக்கின்றது. எங்களுடைய வேட்பாளர்கள் ஊழல் பேர்வழிகள் கிடையாது, கட்சி தாவுகின்ற கொள்கையற்றவர்கள் கிடையாது, காசு கொடுத்து சீட் கேட்கின்றவர்கள் கிடையாது, மக்களின் வாக்குகளை களவாடுகின்றவர்கள் கிடையாது. உண்மையானவர்கள், நேர்மையானவர்கள், வெளிப்படையானவர்கள், மக்கள் நலனுக்கு முதலிடம் கொடுக்கின்றவர்கள், பிரதேசவாதம் பார்க்காதவர்கள். இப்படி எங்களுடைய கட்சியும் அதன் வேட்பாளர்களும், அங்கத்தவர்களும் நல்லவர்கள், எங்களுடைய பெயரைப்போலவே நாங்களும் எங்களது செயற்பாடுகளும் நல்லவை. இதனை எவ்வித தயக்கமும் இன்றி எம்மால் எங்கு வேண்டுமானாலும் தைரியமாகச் சொல்ல முடியும்.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் எமது முயற்சிகளை நாம் முழுமையாக மேற்கொண்டோம், முடியுமானவரை மக்களிடம் எமது கருத்துக்களை எடுத்துச் சென்றோம். எமக்கு வாக்களித்த ஒவ்வொரு வாக்காளனும் எமது கொள்கையை ஏற்று எம்மை நல்லவர்கள் என்று கண்டதன் பின்னர்தான் அவனுடைய உள்ளத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர்தான் எமக்கு வாக்களித்திருக்கின்றார். ஆனால் அத்தகைய நல்லவர்களின் வாக்குகள் எம்மை பாராளுமன்றம் கூட்டிச்செல்ல போதுமானவையல்ல.
அஸ்மின் அய்யூப்
இது எமக்கு வாக்களித்த அந்த நல்ல மக்களின் குறைபாடு கிடையாது, இதனை நாம் எமது முயற்சிகளின் குறைபாடாகவே காணுகின்றோம். எமது செய்தியை இன்னும் அதிகமான மக்களிடம் நாம் எடுத்துச் சென்றிருந்தால் எமது வெற்றி உறுதிப்படுத்தப்பட்டிருக்கும். இப்போதும் நாம் பின்னிற்கப்போவதில்லை எமது முயற்சிகள் தொடரும் நல்லதை வெல்லவைக்க மக்கள் எங்களோடு அணிசேர்வார்கள். இந்த செய்தியை அறிந்துகொண்ட ஒரு சிலருக்கு இப்போதே நடுக்கம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றது. அதன் விளைவாகத்தான் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை குறிவைத்துத் தாக்குகின்றார்கள்.
இன்னும் ஒரு சிலர் பிரதேசவாத சாக்கடைக்குள் எம்மை அமிழ்த்தப் பார்க்கின்றார்கள், ஊர்வாதம் பேசி எம்மோடு இருக்கின்ற மக்களை தம்பக்கம் திருப்ப முனைகின்றார்கள். ஆனால் இந்தப் பருப்பு இனி வேகாது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேர்தல் பிரவேசம் பிரதேசவாதத்தை ஆட்டம் காணவைத்திருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் அடைமொழி அரசியல் செய்கின்ற பலர் தமது தவறுகளை கண்டுகொள்வார்கள்.
சகோதரர் சுபைர் அவர்கள் உட்பட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மீது காழ்ப்புணர்ச்சிகொண்டிருக்கின்ற அரசியல்வாதிகள் தாம் நல்லதுக்கு எதிராக இருக்கின்றோம் என்பதை உணர்ந்துகொள்வார்கள் என்று கருதுகின்றேன். எமது அரசியல் வெளிப்படையானது, எனவே எமது அரசியல் சார்ந்த எல்லா விடயங்களையும் செலவுகள் உட்பட நாம் வெளிப்படையாகவே நடந்துகொள்கின்றோம், இதனை மக்கள் வரவேற்கின்றார்கள், சுபைர் கேட்பதைப்போல நாம் எதற்காகச் செலவழித்தோம் என்று வெளிப்படுத்துவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம், அதனை மக்கள் முன் ஒரு பொறுப்பாக நாம் நிறைவேற்றுகின்றோம்.” என்றும் குறிப்பிட்டார்.
5 responses to ““ஹிஸ்புல்லாஹ் எப்படி ஆசனம் பெற்றார் என்ற அந்தரங்கம் எங்களுக்குத் தெரியும்: பொருத்தமான சந்தர்ப்பத்தில் அதனை மக்கள் தெரிந்துகொள்வார்கள்””
Mohammed Fasleen
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மாகாணசபை உறுப்பினர் அஸ்மின் அய்யூப் அவர்கள் முன்வைத்த கருத்துகள் முற்றிலும் அறியாமையில் அல்லது அவரின் பொறாமையில் இருந்து தெரிவிக்கப்பட்ட கருத்துக்களாகும் என்பதை காத்தான்குடி மக்களாகிய நாங்கள் நன்றாகவே தெரிந்து வைதிருக்கின்றோம்.
உங்களுடைய நல்லாசி பற்றி எங்களுக்கு தெரியும் அதைத்தான் கொழும்பில் பார்த்தோமே
, எமது தேசிய அரசியல் பிரவேசம் நிகழ்ந்து இரண்டு வருடங்களுக்குள் இவ்வளவு மக்கள் ஆதரவை எம்மால் பெற முடிந்திருக்கின்றது.என்று சொல்ல உங்கள்ளுக்கு வெக்கமா இல்ல வாய் இருந்தால் எல்லாவற்றையும் பேசிட முடியுமா? கொஞ்சமாவது சிந்திக்க வேண்டாமா?
வங்குரோத்துக்காரன் என்றால் பிச்சைக்காரன் என்று அர்த்தம், தேசியப்பட்டியல் உறுப்புரிமையை ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதியிடம் பிச்சையாகவே பெற்றுக்கொண்டார். இதனைத்தான் வங்குரோத்துத்தனம் என்று சொல்வோம்.என்று இப்படி வங்குரோத்து விளக்கம் சொல்லும் நீங்கள் நிராகரிக்கப்பட்ட தோல்வியடைந்த உறுப்பினர் என்பதை மறைத்து விட்டு என்னமோ அறிவாளி மாதிரி பேசி மக்களை ஏமாற்றும் கோமாளிக் கதையை விட்டு விட்டு நீங்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் பதவியை ஜெயிச்சா பெற்றுக் கொண்டீர்கள் என்பதை எங்களுக்கு கூறுங்கள்
சம்பந்தன் ஐயாவிடம் பிச்சையாகவே பெற்றுக் கொண்டீர்கள் என்பதை இவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடலாமா? அப்போ நீங்கள் வங்குரோத்துக்காரன் என்றால் பிச்சைக்காரன் இல்லாமல் வேறு யார்
மாகாணசபை உறுப்பினர் பதவியை பெற சம்பந்தன் ஐயா ட காலில் விழுந்த நீங்கள் ஹிஸ்புல்லாஹ் அமைச்சரை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது திரு அய்யூப் அஸ்மின்.அவர்களே
I really like your comments because Azmin appreciate pirabakaran and his movement in recent rally which held in Jaffna. Azmin is ready to sell our community for his position.
He used the word Vanakkam when he has been interviewed in Lanka sri Radio broadcast.
கடந்த 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற வட மாகாண சபைத் தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) சார்பில் சகோதரர் அய்யூப் அஸ்மின் அவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் (TNA) போட்டியிட்டு அதில் படு தோல்வி அடைந்த பின்னர் TNA இனால் வழங்கப்பட்ட போனஸ் ஆசனத்தைக் கொண்டு வட மாகாண சபைக்குச் சென்ற ஒரு உறுப்பினர் என்பதை அவருக்கு ஆரம்பத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மிகச் சொற்ப அளவிலான 127 வாக்குகளால் தோல்வியுற்ற சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தேசியப்பட்டியல் நியமனத்தை விமர்சனம் செய்வதற்கு என்னுடைய பார்வையில் இவர் எவ்வித தகுதியும் அற்றவர். காரணம் வட மாகாண சபைத் தேர்தலில் TNA 33118 வாக்குகளைப் பெற்றுக் கொண்ட போதும் அதில் போட்டியிட்ட இவர் வெறும் 1009 வாக்குகளை மாத்திரமே பெற்று படுதோல்வி அடைந்து போனஸ் ஆசனம் ஊடாக வட மாகாண சபை சென்று விட்டு தற்போது மிகச் சொற்ப 127 வாக்குகளால் தோல்வியை தழுவி தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற சென்ற சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வை விமர்சனம் செய்வது வேடிக்கையான விடயமாகும்.
அவரது பார்வையில் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பெற்ற தேசியப்பட்டியல் ஜனாதிபதியிடம் இருந்து பெறப்பட்ட பிச்சை என்றால் அவரது மாகாண சபை உறுப்பினர் பதவி கூட TNA இடம் இருந்து பெறப்பட்ட பிச்சையே ஆகும். இவரது குறித்த இக்கருத்தானது அவர் வானை நோக்கி உமிழ்வதைப் போன்ற ஒரு செயல்பாடாகும்.
தேர்தலில் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தோல்வியடைந்ததால் கவலை அடைந்திருந்த அவரது ஆதரவாளர்கள் தேசியப்பட்டியல் ஊடாக அவர் மீண்டும் பாராளுமன்றம் தெரிவாகி இருக்கிறார் என்ற அறிவித்தல் வந்தவுடன் பிரதேச மக்களும், அவரது ஆதரவாளர்களும் வீதிகளில் இறங்கி பட்டாசுகளைக் கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்த போது இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத எதிர்கட்சி மற்றும் இவரது இயக்கத்தை சேர்ந்த சிலர் வன்முறைகளை தூண்டும் வண்ணம் செயல்பட்டதனால் சிறு சிறு குழப்பங்கள் இரண்டு இடங்களில் ஏற்பட்டது. இதனால் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று ஒரு பெண் உட்பட 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன் எதிர்தரப்பைச் சேர்ந்த மூன்று பேர் காயங்களுக்கு உள்ளாகினர். அதே வேளை சுமார் 3000 ரூபாய் பெறுமதியான ஒரு கடையின் கண்ணாடியும் பாதிக்கப்பட்டது. இது போக வேறு எந்த அசம்பாவிதங்களும் இவர் சொல்வது போல் அங்கு இடம்பெற வில்லை. ஆனால் குறித்த அய்யூப் அஸ்மின் அவர்கள் சார்புற்றிருக்கும் NFGG எனும் இயக்கம்தான் இதனை ஏதோ பாரியளவிலான வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றது போல் ஒரு மாயையினை உண்டாக்கி அதனை பொய்யான முறையில் உண்மைக்குப் புறம்பாக ஊடகங்கள் அனைத்திலும் விளம்பரம் செய்த அதேவேளை எல்லாவற்றுக்கும் ஒரு படி மேலாகச் சென்று ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னால் சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு வழங்கப்பட்ட தேசியப்பட்டியலை இரத்துச் செய்யுமாறு கூறி ஆர்பாட்டம் செய்தார்கள்.
அனைத்தையும் செய்துவிட்டு தற்போது நாம் அமைதியாக இடம்பெற்ற தேர்தலுக்கு பின்னால் ஏற்பட்ட வன்முறைகளை எதிர்த்தோம், இப்படிப்பட்டவர்கள் பாராளுமன்றம் சென்று என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினோம் என்றெல்லாம் அப்பட்டமான பொய்யினை வாய் கூசாமல் சொல்லும் இவர்களைப் பார்த்து வெட்கப்படத்தான் தோன்றுகிறது.
அதேவேளை கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களுக்குள் இவ்வளவு மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறோம் என்று இடம்பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் மட்டக்களப்பு மாவட்ட முடிவினை மாத்திரம் வைத்துக் கொண்டு கருத்துத் தெரிவிப்பது இவரிடம் போதியளவான அரசியல் ஆய்வறிவு கிடையாது என்பதைக் காட்டுகிறது. ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் பிரதேசங்களை எடுத்து நோக்கும் போது ஓட்டமாவடிப் பிரதேசத்தில் யார் என்ன சொன்னாலும், செய்தாலும் சுமார் 8000 வாக்குகள் இவர்கள் இணைந்து கேட்ட SLMC க்கு இருக்கிறது. அதேவேளை ஏறாவூர் பிரதேசம் யார் எந்த நல்ல விடயங்களைச் செய்தாலும் தேர்தல் என்று வரும் போது அந்த ஊரில் யாருக்கு செல்வாக்கு அதிகமாக இருக்கிறதோ அவரை நாம் நமது பிரதிநிதி ஆக்குவோம் எனும் கோஷத்தின் கீழ் கணிசமான வாக்கு அங்கே அளிக்கப்படும். அந்த வகையில் இம்முறை சகோதரர் அலிசாஹிர் மௌலானாவுக்கு ஆதரவு அதிகமாக இருந்ததனால் அவர் போட்டியிட்ட SLMC க்கு அதிக மக்கள் வாக்களித்தார்கள்.
ஆனால் காத்தான்குடியினைப் பொருத்தமட்டில் சுமார் 75வீதத்திற்கும் மேலதிகமான வாக்குகளை சகோதரர் ஹிஸ்புல்லாஹ் வைத்திருப்பதனால் அந்த வாக்கு வங்கியினை சரியச்செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் அதிலும் குறிப்பாக பெண்களின் வாக்குகளை சகோதரர் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக திருப்பும் நடவடிக்கையில் இவரது இயக்கத்தை சேர்ந்தவர்கள் மிகவும் மும்முறமாகச் செயல்பட்டு சகோதரர் ஹிஸ்புல்லாஹ்விற்கு வாக்களித்தால் மீண்டும் மஹிந்த பிரதமராவார். அப்படி ஏதும் நடந்தால் அழுத்கமயில் இடம்பெற்றது போன்ற பல பிரச்சனைகள் நாடுமுழுவதும் இடம்பெறும் என்று பெண்கள் மத்தியில் பயத்தை உண்டாக்கி, அழுத்கம வீடியோ காட்சிகளை பெண்கள் மாநாடு என்ற போர்வையில் அவர்களை அழைத்துக் காண்பித்து பொய்யான பல தரப்பட்ட விமர்சனங்களை சகோதரர் ஹிஸ்புல்லாஹ்விற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவரது 75 வீதமாக இருந்த வாக்கு வங்கியினை 55 வீதமாகக் குறைத்து தாங்கள் குறித்த தேர்தலில் வெற்றியடையமாட்டோம் எனத் தெரிந்தும் சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வை தோற்கடிப்பதே எமது வெற்றி எனும் அடிப்படையில் செயல்பட்டு இறுதியில் அவரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார்கள்.
அதற்கு சான்றாக தேர்தல் முடிவுக்குப் பின் அவர்கள் ஊடகங்களுங்கு தெரிவித்த கருத்துக்களை நாம் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக 17 மில்லியன் ரூபாய்களை செலவு செய்து சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வை தோற்கடித்தோம் எனக் கூறுவது எந்த ஒரு முஸ்லிமாலும் ஜீரணிக்க முடியாத வறட்டு கௌரவத்துடன் கூடிய ஒரு பேச்சாகும்.
அரசியல் தலைமைகள் மற்றும் கட்சிகளிடம் இருக்கும் எந்த ஒரு அடிப்படை பண்பும் இவர்களிடத்தில் கிடையாது. இவர் சொல்வது போன்று எந்தக் குற்றச்சாட்டும் இதுவரை இவர்களால் நிரூபிக்க முடியாத நிலையில் பிச்சைக்காரன் காலிலுள்ள புண்ணைப் போன்று தொடர்ச்சியாக ஒரே பொய்யினை மக்கள் மத்தியில் கூறுவதை நிறுத்தி விட்டு ஆக்கப்பூர்வமான, ஆதாரங்கள் இருக்கத்தக்க விடயங்களை மக்கள் மத்தியில் கூறும் படி மிக வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.
அத்தோடு தங்களிடம் இருக்கும் தன்மைகள் என்று குறிப்பிடும் விடயங்கள் உண்மையிலேயே அவர்களிடத்தில் இருக்கிறதா என்ற கேள்வி என்னிடத்தில் எழுகிறது. ஏனென்றால் அவைகள் உண்மையில் இருந்திருந்தால் கடந்த தேர்தலில் அவர்களைப் பற்றியும், அவர்களின் கொள்கைகளைப் பற்றியும் மற்றும் அவர்களின் எதிர்கால செயல்பாடுகள் பற்றியும் தேர்தல் மேடைகளில் பேசி வாக்குக் கேட்டிருப்பார்களே தவிர சகோதரர் ஹிஸ்புல்லாஹ் எனும் தனிநபரை மாத்திரம் விமர்சனம் செய்யும் அரசியலை மேற்கொண்டிருக்க மாட்டார்கள்.
இடம்பெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி இவர்கள் தங்களின் இயக்கம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என நினைத்தால் வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொள்வார்கள். எனவே இனிமேலாவது சகோதரர் ஹிஸ்புல்லாஹ் எனும் தனிநபர் மீது வசை பாடுவதை நிறுத்திவிட்டு தங்களின் அரசியல் கொள்கையினை மக்கள் மயப்படுத்தி அதனூடாக தங்களின் அரசியல் முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்குகிறேன்.
Leave a reply to Azmy Sally Cancel reply