SLTJயின் தஃவா செயற்பாடுகள் காலத்திற்கு பொருத்தமானவையா?

  • ஏ.எல். முகம்மட் நியாஸ்

sltjகடந்த பல மாதங்களாக ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் அமைப்பினால் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்னும் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடாத்தப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மார்க்கம் சம்பந்தமாக மாற்றுமத மக்கள் மத்தியில் நிலவி வருகின்ற விமர்சனங்கள், அறியாமையின் காரணமாக ஏற்பட்டுள்ள தவறான எண்ணங்கள் தொடர்பில் அம்மக்களுக்கு தெளிவை வழங்குகின்ற ஓர் கேள்விபதில் நிகழ்ச்சியாக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இது நடைபெற்றுவருவதை நாம் அறிவோம்.

அந்தந்த பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலைய அனுமதியுடன் கொழும்பு, கண்டி, அம்பாறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலுள்ள இலங்கையின் பல பாகங்களிலும் இந்நிகழ்ச்சி மாற்றுமத மக்களின், மத குருமார்களின் பலத்த வரவேற்புகளுக்கு மத்தியில் நடைபெற்றுவருகின்ற அதேநேரம் இஸ்லாம் சம்பந்தமான தங்களிடமுள்ள புரிதல்களை மீளாய்வு செய்யும் நோக்குடன் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்ற அரங்கத்தை நோக்கி மாற்றுமத மக்கள் ஆர்வத்துடன் படையெடுப்பதை இதுவரை நடைபெற்ற பல நிகழ்வுகளில் ஊடாக நாம் அறிந்துகொண்டோம்.

இதன் தொடர்ச்சியாக கடந்த அன்று ஹெம்மாதகமை என்னும் பிரதேசத்தில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்வில் ஏற்பட்ட அசம்பாவிதம் தொடர்பாகவும் அதனையடுத்து இலங்கைவாழ் இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் நிலவி வருகின்ற சில கருத்தாடல்கள் தொடர்பாகவும் முடியுமானவரையில் தெளிவுகளை வழங்குவதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

ஹெம்மாதகமை நகரில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்வில் நிகழ்ச்சி தொடங்கிய சொற்ப நேரத்திலேயே பொது சேனா என்னும் பௌத்த பயங்கரவாத அமைப்பைச்சேர்ந்த சில பிக்குகளும் அவர்களுடன் இன்னும் சில நபர்களும் அரங்கத்தினுள்ளே அத்துமீறி நுழைந்தனர். பின்னர் நிகழ்வை நடாத்திக்கொண்டிருந்த ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் அனைவரையும் தகாத வார்த்தைகளால் தூசித்ததுடன் ‘எதுவாக இருப்பினும் நாம் அழகான முறையில் பேசித்தீர்ப்போம் வாருங்கள்’ என அப்துர் ராசிக் பலதடவைகள் சிங்களமொழியில் அழைத்த போதிலும் கூட அவர் மீது தாக்குதல் நடாத்துவதற்கும் எத்தனித்தனர்.

அத்துடன் அப்துர் ராசிக்கை கொலைசெய்வதாகவும் மரண அச்சுறுத்தல் விடுத்தனர். பின்னர் அவ்விடத்திலிருந்து கலைந்து செல்கின்றபோதும் அங்கே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்திற்கு சொந்தமான புத்தகங்கள், சீடீக்களையும் பலவந்தமாக அபகரித்துச் சென்றனர். (இது தொடர்பான மேலதிக தகவல்கள் அடங்கிய வீடியோ பதிவுகள் இப்போது யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.)

இவ்வாறு பெரும்பான்மையின காடையர்களால் தடுத்து நிறுத்தப்பட்டு, அச்சுறுத்தலும் விடுக்கப்பட்ட இந்த மாற்றுமத மக்களுக்கான தஃவா நிகழ்வினை நமது இஸ்லாமிய சமூகத்திலுள்ள சில முற்போக்குவாதிகள் என்று தமக்குத்தாமே கூறிக்கொள்கின்ற சில மேதாவிகள் மிகவும் கீழ்த்தரமான முறையில் இணைய தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விமர்சித்து வருவதை நாம் காண்கிறோம்.

இவ்வாறனவர்களுடைய விமர்சனங்களில் அடங்கியுள்ள சாராம்சத்தை நாம் எடுத்துநோக்கினால் அதில்,
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் இந்நிகழ்ச்சியினால்தான் இலங்கை நாட்டில் இனவாதம் பெருக்கெடுத்து ஓடுவதாகவும் இது போன்ற மாற்றுமத தஃவா நிகழ்வுகளை கைவிடவேண்டும் எனவும் சிலர் தமது வாதங்களை முன்வைக்கின்றனர். இன்னும் சிலரோ இன்னுமொரு படி மேலே ஏறிச்சென்று ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தை நாட்டில் தடைசெய்ய வேண்டும் என்றும் இணையதளங்களில் போர்க்கொடி தூக்குகின்ற காட்சிகளையும் நாம் காண்கிறோம்.

உண்மையில் இவ்வாறான ஒரு நிகழ்வானது இந்த நாட்டிற்கு தேவைதானா என்று நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், இஸ்லாமிய மார்க்கத்தை பற்றிய ஒரு சரியான புரிதலை மாற்றுமத மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்திற்கு மாத்திரமல்லாது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் இறைவனால் சுமத்தப்பட்ட கட்டாயமான கடமைகளில் ஒன்றாகவே அது இருந்துவருகிறது.

யதார்த்தமாக நாம் சிந்தித்தால் இதுபோன்ற நிகழ்வுகள் மிகவும் காலந்தாழ்த்தியே நமது நாட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காரணம், இன்று இந்த நாட்டில் சூல் கொண்டு சூறாவளியாக வீசுகின்ற இனவாதம் என்பது ஒருசில மதகுருமார்களுடைய தனிப்பட்ட சுயநலன்களுக்காகவே தூண்டிவிடப்பட்டுள்ளது என்றாலும் அந்த இனவாதிகளோடு இணைந்துகொண்டு சாதாரண பாமர மக்களும் இஸ்லாமிய எதிர்ப்பாளர்களாக மாறுவதற்கு அவர்களிடமுள்ள இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான சரியான புரிதலின்மையே காரணமாகக்கருதப்படுகின்றது.

சமகாலத்தில் வாழ்கின்ற இஸ்லாமிய மக்களுடைய செயற்பாடுகளைப் பார்த்து யாரும் இஸ்லாமிய மார்க்கத்தை சரியாக எடை போட்டுவிடமுடியாது. அதேபோன்று முஸ்லிம்களுடன் வியாபார ரீதியான இன்னபிற தொடர்பாடல்களைப் பேணுகின்ற மாற்றுமதத்தவர்கள் கூட இஸ்லாத்தைப் பற்றிய சரியான வடிவத்தை அறிந்துகொள்கின்ற வகையில் இன்றைய முஸ்லிம்களுடைய செயற்பாடுகள் காணப்படவில்லை.

இஸ்லாமிய மார்க்கம் எவ்வளவுதான் தூய்மையானதாக இருந்தாலும் இன்று இஸ்லாமியர்கள் என்று தமக்குத்தாமே கூறிக்கொள்கின்ற பெயர்தாங்கிகளால் அதன் தனித்துவம் மழுங்கடிங்கப்பட்டு வருகின்ற கசப்பான உண்மையினை நாம் ஏற்றுக்கொண்டேதான் ஆகவேண்டும். வட்டி என்னும் பெரும்பாவம் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டிருந்தும் இன்று மாற்றுமத மக்கள் பெரும்பான்மையாகப்பணியாற்றுகின்ற வங்கிகளில் அதிகளவான வட்டியோடு கூடிய தொடர்பாடல்களைப் பேணுபவர்கள் முஸ்லிம்களாகவே இருக்கிறார்கள்.

sltj
SLTJயின் தஃவா செயற்பாடுகள் காலத்திற்கு பொருத்தமானவையா?

அதேபோன்று மதுபானம், விபச்சாரம் என்று பல்வேறுபட்ட பாவச்செயல்களிலும் மாற்றுமதத்தவர்களுக்கு நாங்கள் எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லவென்பதை பறை சாற்றுகின்ற அளவுக்கு இஸ்லாமியர்களுடைய தனித்துவம் பாழ்படுத்தப்பட்டு இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாசு கற்பிக்கின்ற அளவுக்கு அனைத்துவிதமான பாவச்செயல்களும் மிதமிஞ்சிக்காணப்படுகிறது.

இஸ்லாமிய மக்களோடு தொடர்புகொண்டு முஸ்லிம்களின் செயற்பாடுகளை வைத்து இஸ்லாத்தை மதிப்பிட்டு இஸ்லாத்தின் மீது நன்னம்பிக்கை ஏற்பட்ட காலமானது அது ஸஹாபாக்களோடும் இமாம்களோடும் முடிவடைந்துவிட்டது. இப்போதுள்ள முஸ்லிம்களின் அன்றாட செயற்பாடுகளை மாற்றுமத மக்கள் உற்றுநோக்கினால் அவர்கள் இஸ்லாத்தின் மீது நல்லெண்ணம் வைப்பதற்கு இம்மியளவும் வாய்ப்பில்லை என்பது நாமெல்லோரும் நன்கறிந்த ஒன்றாகும்.

“இஸ்லாமியர்கள் அநியாயமாக மிருகங்களை கொல்கிறார்கள், அதை உண்கிறார்கள்.” என்று இனவாதிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. மாற்றுமத பாமர மக்களும் அதை அப்படியே நம்புகிறார்கள். இஸ்லாமியர்கள் மிருகவதை செய்பவர்கள் என்றொரு தவறான நம்பிக்கை அவர்களிடத்தில் வேர்விடுகிறது.

மேலும் இஸ்லாமிய ஷரீஆ சட்டமுறைமையை எடுத்துக்கொண்டால், இன்று அதிகளவான மீடியாக்கள் இது தொடர்பாக விமர்சிக்கின்றன. இனவாதிகளுடைய மிகப்பெரிய கனரக ஆயுதமாக இந்த ஷரீஆ சட்டமுறைமையின் மீதான விமர்சனமே இருந்துவருகிறது. இஸ்லாம் ஒரு கொடூரமான மார்க்கம். அது சிறிய சிறிய குற்றங்களுக்காகக்கூட மனிதர்களை கொலை செய்யத்தூண்டுகிறது. என்ற விமர்சனங்களை இதன் மூலமே அவர்கள் கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

இன்னும் இது போன்று நிகாப், தாடி, பலாதார மணம், இஸ்லாமிய ஜிஹாத் போன்ற இன்றைய சமகால சூழலில் இஸ்லாத்தை நோக்கி முன்வைக்கப்படுகின்ற எந்தவொரு விமர்சனமாகட்டும் அவை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் அவை தொடர்பிலான உண்மை நிலவரம் என்பதை ஏனையோர்களுக்கு தெளிவூட்டுவதற்கும் நமது சமூகத்திலுள்ள பொறிமுறைதான் என்ன?

வெறுமனே இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் அளிக்கப்படுகின்ற விளக்கவுரைகள் மாற்றுமத மக்கள் மத்தியில் எத்தனை சதவிகிதம் செல்வாக்குச்செலுத்தும்?

இணைதயத்தளங்களைப் பற்றிய அடிப்படையறிவு கூட இல்லாத பெரும்பான்மையின மக்கள் வாழ்கின்ற குக்கிராமங்களில் நமது எதிர்வாதங்கள் எவ்வாறு சென்றடையும்?

எல்லாவற்றிற்கும் மேலாக காணப்படுகின்ற சிங்கள மொழிமூலமான தொடர்பாடல் திறனுள்ள எத்தனை ஜமாஅத்துக்கள், மார்க்க அறிஞர்களை நாம் மூலதனமாகக்கொண்டிருக்கிறோம்?

அவ்வாறு அமையப்பெற்றால் கூட இவ்வாறான மாற்றுமத தஃவா செயற்பாடுகளில் அக்கறை காட்டுகின்ற அறிஞர்கள் எத்தனை பேர் நம்மத்தியில் இருக்கிறார்கள்?

இஸ்லாத்தை பற்றி யார் என்னசொன்னாலும் பரவாயில்லை நமக்கு நம்முடைய தேவைதான் முக்கியம் என்று பாராமுகமாக இருப்பதுதான் ஒரு முஸ்லிமுடைய பண்பாடா?

கடந்த காலங்களில் நமது சமூகத்தில் தோன்றிய பல பலம்பொருந்திய ஜமாஅத்துக்கள் அவ்வாறு இருந்தான் காரணமாகத்தான் இன்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளை பூர்வீகமாக நாம் கொண்டிருந்த போதிலும் இந்நாட்டில் நம்மோடு அண்டி வாழ்கின்ற அந்நிய மதத்தவர்களுக்கு நமது மார்கத்தைப்பற்றிய ஒரு சரியான வடிவத்தை நம்மால் அறிவிக்க முடியாமல் போனது.

ஏன், நமது நாட்டில் இஸ்லாமிய சமூகத்தை வழிநடாத்தி நெறிப்படுத்துவதாக கூறிக்கொள்கின்ற, மக்கள் செல்வாக்குகளை கொள்ளைகொண்ட மாபெரும் அமைப்பான அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவேனும் இதுகாலவரையில் மாற்றுமத மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் சிறப்பம்சங்களை எடுத்துக்கூறுகின்ற வகையிலான ஏதேனும் திட்டமிடலை மேற்கொண்டதா?

அல்லது இன்று பல்வேறு அரபு நாடுகளுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அதன் மூலம் கோடிக்கணக்கான பணத்தை வசூல் செய்து கிலோமீட்டருக்கு ஒரு பள்ளிவாயில் என பட்டி தொட்டியெங்கும் பள்ளிவாயில்களை அமைத்து அந்நியர்களின் ஆற்றாமைக்கு வழிவகுகின்ற எத்தனையோ தஃவா(?) அமைப்புக்கள், பள்ளிகட்டும் ஏஜெண்டுகள் இருக்கின்றன. அவையேனும் இவ்வாறான மாற்றுமத மக்களுடனான ஒரு புரிந்துணர்வுடன் கூடிய நிகழ்ச்சி நிரல்களை ஏற்பாடு செய்தனவா?

ஏன் அண்மையில் கூட இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றிய பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொதுபல சேனா போன்ற பௌத்த இனவாத அமைப்புக்கள் மாநாடுகள் நடாத்தின. துண்டுப்பிரசுரங்கள் வெளியிட்டன. மேலும் அல் குர்ஆன் வசனங்களைக்கூட திரிபுபடுத்தி மாற்றுமத சமூகங்களுக்குள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தவறான வடிவங்களை ஏற்படுத்தின.

இந்த இனவாத செயற்பாடுகளைப்பற்றி கவலை கொண்ட நம்முடைய ஜமாஅத்துக்கள் எத்தனை இருக்கின்றன?

இன்று ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தை தடை செய்யவேண்டும் என்று இணையதளங்களில் போர்க்கொடி தூக்குகின்ற எத்தனை எழுத்தாளர்கள், உலமாக்கள், அமைப்புக்கள் அன்று இந்த இனவாதிகளுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்பினார்கள்?

இவ்வாறு நம்மை அண்டி வாழ்கின்ற அந்நிய மக்களுக்கு இஸ்லாமிய ,மார்க்கத்தைப்பற்றிய சரியான வடிவத்தை நாம் உரிய வேளைகளில் வழங்காமல் தானுண்டு தன்பாடுண்டு என்று பாராமுகமாக இருந்ததன் விளைவுதான் இன்று இனவாதக் காடையர்களால் இஸ்லாத்தைப்பற்றிய தவறான வடிவங்களை மிகவும் இலகுவான முறையில் பாமர மக்கள் மத்தியில் பசுமரத்தாணியாக விதைக்கமுடிந்தது.

எனவேதான் இஸ்லாமிய மார்க்கத்தைப்பற்றிய மாற்றுமத மக்கள் மத்தியில் எழுகின்ற விமர்சனங்களுக்கு, தவறான கருத்துக்களுக்கு உரிய முறையில் பதிலளித்து அவர்களிடையே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பற்றிய தீய எண்ணங்களை அகற்ற வேண்டிய பொறுப்பு இன்று இஸ்லாமிய சமூகத்தின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.

அதைத்தான் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் களத்தில் இறங்கி செயற்படுத்துகிறது. இஸ்லாமிய மார்க்கத்தின் மீதான மாற்றுமத மக்களுடைய சந்தேகங்களுக்கு அந்த ஜமாஅத் மிகத்தெளிவான முறையில் விளக்கமளிக்கிறது. இதுதான் அன்று நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த தஃவா முறை. நமது நாட்டிலுள்ள மாற்றுமத மக்கள் கூட இதைத்தான் வரவேற்கிறார்கள்.

ஆனால் காலாதிகாலமாக தஃவா என்னும் போர்வையில் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போன்று இஸ்லாமிய சமூகத்திற்குள்ளேயே ஒரு சிறிய வட்டமைத்து அரைத்த மாவையே மீண்டு மீண்டும் அரைத்துக்கொண்டிருக்கின்ற சில குறுகிய எண்ணங்கொண்டவர்கள் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மீதுள்ள தங்களுடைய நீண்ட கால வஞ்சத்தை தீர்த்துக்கொள்வதற்காக இந்த பதட்டமான சூழ்நிலையினை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி வருகிறார்கள். இது உண்மையில் முறைகேடானது.

இஸ்லாமிய சமூகத்தின் மீது கட்டாயமாக விதிக்கப்பட்ட ஒரு கடமையினை நாமெல்லோரும் புறந்தள்ளிவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க அதனை ஒரு ஜமாஅத் துணிந்து வந்து மேற்கொள்கின்றபோது அவர்களுக்கு நாம் தோள் கொடுத்து உதவவேண்டும். அவர்களுடைய உரிமைகளுக்காக போராடவேண்டும். குரல் எழுப்பவேண்டும். மாறாக இயக்கரீதியான பிரிவினைகளை மனதில் வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் பார்த்துப் பழி தீர்ப்பது அப்பட்டமானதொரு நயவஞ்சகத்தனமேயன்றி வேறேதுமில்லை.

உண்மையில் இந்த இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் நிகழ்ச்சியானது சமூகங்களுக்கிடையிலான முறுகல் நிலையினை ஏற்படுத்தக்கூடியதென்றால் அதை நடைமுறை ரீதியாக நிரூபிக்கவேண்டும். இந்த நிகழ்வு நடைபெற்ற ஏதாவது பிரதேசத்தில் இதனையே காரணமாக வைத்து மாற்றுமத பொதுமக்கள் எங்காவது வன்முறைகளில் ஈடுபட்டார்களா, அல்லது இப்பிரதேசத்தில் இதனை நடாத்த வேண்டாம் எனக்கூறி அப்பிதேசத்திலுள்ள மாற்றுமத மக்கள் காவல்த்துறைக்கு பெட்டிஷன்கள் வாயிலாக அறிவித்தார்களா என்றால் அவ்வாறு ஒரு சம்பவம் கூட இதுவரை நடைபெற்றதாக தகவல்கள் இல்லை..

மாறாக நடைபெற்று முடிந்த அதிகமான நிகழ்வுகளில் கலந்துகொண்ட பெரும்பான்மையின மக்களே அதனை ஆர்வத்துடன் வரவேற்றதும் மீண்டும் மீண்டும் இவ்வாறான நிகழ்வுகள் பரவலாக அனைத்துப் பிரதேசங்களிலும் தொடர்ந்தும் நடைபெறவேண்டும் என்று வேண்டிக்கொண்டதுடன் மட்டுமல்லாது பெரும்பான்மையின மத குருமார்கள் கூட இந்நிகழ்ச்சியினை அதிகமாக சிறப்பித்து, சிலாகித்துகூறிய வரலாறுகளே காணப்படுகின்றன.

இவ்வாறு இந்நிகழ்வானது பல்சமூகங்களுக்கிடையிலான பலமான ஒற்றுமைக்கு அத்திவாரமிடுகின்ற ஒரு சிறந்த ஊடகமாக பலராலும் பார்க்கப்படுகின்றபோது சமகாலத்தில் இந்நாட்டின் மிகப்பெரும் பயங்கரவாத அமைப்பாக செயற்பட்டுவருகின்ற ஒரு காடையர் கூட்டம் அதிருப்தியடைகிறது என்பதற்காக அக்காடையர்களுடைய வழியில் நாமும் நின்று இந்நிகழ்ச்சியை இடைநிறுத்தவேண்டும் என்று போர்க்கொடி தூக்குவது எந்தவகையில் நியாயமானது?

இந்த இனவாதக்கூட்டம் ஒருபோதும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையினை விரும்புவதில்லை. இந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டு வருவதன் காரணமாக சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமை வலுப்பெற்று வருவதை இனவாத அமைப்புக்கள் நன்றாகவே உணர்ந்துகொண்டுள்ளன. இவ்வாறு சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைகள் வலுப்பெறுகின்றபோது இனவாதிகளுடைய எந்தவொரு திட்டமும் எடுபடாது என்பதை அவர்கள் நன்கு அறிந்துகொண்டார்கள். இந்நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மையினை மக்கள் “நாங்கள் ஒருபோதும் இனவாதத்தை ஆதரிக்கவில்லை” என்பதை கடந்த நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் மிகத்தெளிவாகவே அறிவித்துவிட்டார்கள்.

எனவேதான் இரண்டு சமூகங்கள் ஒன்றிணைந்தால் அதில் நஷ்டமடைவது தமது இனவாத வியாபாரம்தான் என்பதை இனவாதிகள் உணர்ந்துகொண்டார்கள். இனவாதம் இருக்கும் வரைதான் இனவாதிகளின் பிழைப்பும் வண்டியோடும். இனவாதம் ஒழிந்துவிட்டால் அவர்களுடைய வியாபாரம் திவாலாகிவிடும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடாத்தவிடாது தங்களின் ஆற்றாமையினை வெளிப்படுத்திவருகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

உண்மையில் இந்நிகழ்வானது சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கு, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதென்றால் அதை தடைசெய்வதற்குரிய உரிமையும் கடமையும் இந்நாட்டின் அரச காவல்த்துறைக்கோ அல்லது புலனாய்வுத்துறைக்கோதான் இருக்கிறது. இந்த நிகழ்வு நடாத்தப்படுவதால் தேசிய பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது என்று பொலீசார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கின்றபோது நீதிமன்றம் குறித்த நிகழ்வை தடைசெய்யும். ஆனால் தங்களுடைய விஷமத்தனமான பிரச்சாரத்தினால் பேருவளை உட்பட நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பலதரப்பட்ட வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிடுகின்ற பொதுபல சேனா அமைப்புக்கு தேசிய பாதுகாப்பைப்பற்றி அக்கறையுடன் பேசுவதற்கு என்ன அருகதையிருக்கிறது?

கேவலம் இந்நாட்டில் தங்களுடைய கொள்கைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி தாங்கள் போட்டியிட்ட பிரதேசத்தில் குறைந்த பட்சம் ஐயாயிரம் வாக்குகளைக்கூட பெற்றுக்கொள்வதற்கு துப்புக்கெட்டுப்போய் இழிவடைந்துபோன இனவாதக்காடையர் கூட்டத்திற்கு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை பற்றி வாய்திறப்பதற்கு இருக்கின்ற தராதரம்தான் என்ன?

இந்நாட்டில் ஜனநாயக வழியில் மிகவும் அசிங்கமாக தோற்கடிக்கப்பட்ட இந்த மிகச்சொற்பளவிலான இனவாதிகளுடைய வேண்டுகோளுக்காக ஒரு பூர்வீக சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிகழ்ச்சியை தடைசெய்தால் நாளை அதுவே அந்த இனவாதிகளுக்குக்கிடைத்த மாபெரும் வெற்றியாக அமைந்துவிடும். இதைக்காரணமாக வைத்தே அடுத்தடுத்து இஸ்லாமியர்களாகிய நமது வழிபாட்டு விடயங்களில் ஒவ்வொன்றாகக் கைவைப்பார்கள். வெள்ளிக்கிழமை ஜும்மா பறிபோகலாம், ஒலிபெருக்கியில் கூறப்படுகின்ற தொழுகைக்கான அழைப்பு பறிபோகலாம். பகிரங்க மாநாடுகள், இஜ்திமாக்கள் இவ்வாறு பலதரப்பட்ட இஸ்லாமிய பிரச்சார செயற்பாடுகளிலும் நாளை அவர்கள் கைவைப்பதற்கு இது ஒரு ஆரம்பப்படியாக மாறிவிடும்.

காரணம் இனவாதிகள் இந்த இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்வை மாத்திரம்தான் எதிர்க்கிறார்களா என்றால் அவ்வாறில்லை. மாறாக இஸ்லாமிய மார்க்கத்தின் தனித்துவமான, பிரத்தியேகமான அத்தனை செயற்பாடுகளையும் இந்நாட்டை விட்டும் துடைத்தெறிவதற்கே அவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறார்கள். இந்த சந்தர்ப்பங்களில் இஸ்லாமிய மார்க்கத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவும் நிலை நாட்டுவதற்காகவும் இந்நாட்டின் ஜனநாயக வழிமுறைக்கு உட்பட்ட அத்தனை வழிகளையும் நாம் பயன்படுத்தவேண்டும். நம்முடைய உரிமைகள் என்னவென்பதை இஸ்லாமிய சமூகத்திற்கும் இந்த நாட்டிற்கும் பகிரங்கமாக எடுத்துக்கூறவேண்டும். உரிமைகள் ஒடுக்கப்படுகின்றபோது அதற்குண்டான இந்நாட்டின் நீதித்துறையினுடைய தீர்வுத்திட்டங்கள் என்னவென்பதனையும் நாம் அறிந்துகொள்ளவேண்டும்.

அதைவிடுத்து நம்மிடமுள்ள இயக்கரீதியான, கொள்கைரீதியான முரண்பாடுகளை மனதில் இருத்திக்கொண்டு இவ்வாறு நமது சகோதர அமைப்பொன்றை இனவாதிகளுடன் இணைந்துகொண்டு சந்தர்ப்பம் பார்த்துப்பழிதீர்ப்பது உண்மையான ஒரு முஸ்லிமுக்கு அழகான செயலல்ல.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஒருபோதும் சட்டத்திற்குப் புறம்பான வழிவகைகளை மேற்கொண்டு இஸ்லாமியப்பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. பொதுபல சேனா அமைப்பைப்போன்று பாமர மக்கள் மத்தியில் மாற்றுமதத்தினை கொச்சைப்படுத்தி அதன்மூலம் வன்முறைகளை தூண்டிவிட்டு அதில் குளிர்காயவில்லை. மாறாக இந்நாட்டின் ஜனநாயக சட்ட வழிமுறைகளை அதிகபட்சமாக மதித்து பொலிஸ் நிலையங்களில் அனுமதி பெற்றுத்தான் இவ்வாறான தஃவா நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

ஆனால் அவ்வாறு நாட்டின் இறைமைக்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தாத, மாற்றுமத மக்களால் கூட விரும்பப்படுகின்ற, மதிக்கப்படுகின்ற ஒரு நிகழ்வை இந்நாட்டில் பொதுமக்களால் வெறுத்து, ஒதுக்கி, ஓரங்கட்டப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பு சட்டத்துகுக்கு புறம்பான வகையில் அத்து மீறி தடுத்து நிறுத்துகின்ற போது நமது கண்டனங்கள் அனைத்தும் அந்த பயங்கரவாத அமைப்புக்களை நோக்கி இருக்கவேண்டுமேயன்றி ஜனநாயக வழியில் நின்றும் தமது பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்கின்ற ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்துக்கு எதிராக நாம் ஒரு போதும் களமிறங்கக்கூடாதென்பதை மறந்துவிடக்கூடாது.

இன்னும் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் மாத்திரமல்ல, நாட்டிலுள்ள எந்தவொரு தஃவா அமைப்பு இவ்வாறான அழுத்தங்களை சந்தித்தாலும் அவர்களுடைய ஜனநாயக செயற்பாடுகளுக்கு இதுபோன்ற பயங்கரவாதிகள் முட்டுக்கட்டையிட்டாலும் அவற்றை சட்டத்தின் முன்னிறுத்தி நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்கே நாம் துணிந்து எழவேண்டும். காலாவதியாகிப்போன ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியில் வேண்டுமானால் பொதுபல சேனா போன்ற பயங்கரவாதிகளுக்கு முட்டுக்கொடுக்கும் வகையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் அதிகளவில் இருந்தன. ஆனால் இப்போது ஓரளவுக்கேனும் இந்நாட்டில் சட்டத்துறையும் காவல்த்துறையும் செயற்பட ஆரம்பித்துள்ளன.

இதற்கு உதாரணமாக கடந்த ஆட்சியில் பொதுபல சேனா அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட பலவகைப்பட்ட வன்முறை சார் செயற்பாடுகளுக்கும் எதிராக தற்போது நீதிமன்றங்களில் நடைபெற்றுவருகின்ற விசாரணைகளும் அவற்றின் பின்னால் அலைக்கழிந்து திரிகின்ற இனவாதப் பிக்குகளின் பரிதாபகரமான நிலைமைகளையும் நாம் குறிப்பிடலாம். பல இனவாதிகள் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

ஆனாலும் அவ்வப்போது சில சந்தர்ப்பங்களில் இனவாதிளுக்கு முதுகு சொறிகின்ற பொலிஸ் அதிகாரிகளும் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவ்வாறானவர்களை ஊடகங்கள் வாயிலாக நாம் அடையாளப்படுத்தவேண்டும். சட்டரீதியாக அவர்களுக்கு நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும்.

எனவே இறுதியாக,

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்ற எத்தனையோ பௌத்த பயங்கரவாத அமைப்புக்களும் மதகுருமார்களும் இந்நாட்டில் சுதந்திரமாக நடமாடுகின்றபோது ஒரு ஜனநாயக வழியிலான தஃவா அமைப்பை நாமே நமது கைகளால் அந்நிய சமூகத்திடம் காட்டிகொடுத்து சமூகத்திலிருந்து அப்புறப்படுத்துகின்ற பாவகாரியத்தில் ஈடுபடுவோமானால் நாளை மறுமையில் இதுதொடர்பிலான அழ்ழாஹ்வின் விசாரணைகளை நாம் பயந்துகொள்ளவேண்டும்.

ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தை பொறுத்தவரைக்கும் அவர்களுடைய மார்க்க ரீதியான மசாயில்களில் பலருக்கும் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்தளவுக்கு அவர்களுக்காக ஊடகங்கள் வாயிலாக பரிந்து பேசுகின்ற நான் கூட ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தினுடைய பல கோட்பாடுகளில் முரண்பட்ட ஒருவனாக மாத்திரமல்லாது அவைகளை கடுமையான விமர்சிக்கின்ற ஒருவனாகவும் இன்றுவரை இருந்துவருகிறேன்.

ஆனாலும் அது நமது உள்வீட்டு விவகாரம். “இனவாதிகளா? ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாத்தா?” என்று வருகின்றபோது நம் அனைவருக்கும் பொது எதிரியாக இருப்பவர்கள் இனவாதிகளே. ஆகவே இயக்க ரீதியான, கொள்கை ரீதியான பிரிவினைக்களுக்காக, மாறுபட்ட நிலைப்பாடுகளுக்காக ஒரு தரப்பினருக்கு ஏற்படுகின்ற இவ்வாறான இறுக்கமான, பதட்டமான சூழ்நிலைகளை நம்முடைய சுயநலன்களுக்காக பயன்படுத்துவது இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கு ஏற்புடைய ஒன்றல்ல என்பதை மனதில் வைத்து செயற்படுவோம்.

Published by

Leave a comment