மெட்ரிட்: நிரந்தரமான அலுவலகம் இல்லாமல் பணியாற்றும் பணியாளர்களைப் பொறுத்தவரை, வேலைக்குச் சென்று, வீடு திரும்புவதற்கான நேரத்தையும் வேலை நேரத்தின் பகுதியாகக் கருத வேண்டும் என ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.இதற்கு முன்பாக, இந்த நேரம் வேலை நேரமாக கருதப்படவில்லை.
ஐரோப்பிய நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பின் காரணமாக, விற்பனைப் பிரதிநிதிகள், குழந்தைகளை – முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் பணியாளர்கள், வாடிக்கையாளரின் வீட்டிற்கே சென்று பணியாற்றுபவர்கள் இந்த வரையறையில் அடங்குவார்கள்.
ஐரோப்பிய யூனியனின் வேலைநேர நெறிமுறைகளின் அடிப்படையில், தொழிலாளர்களின் உடல்நலத்தையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிமன்றம் இந்தத் தீர்ப்புக் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளது.
பணிக்கு அமர்த்தியிருப்பவர்களால் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்காக ஐரோப்பிய வேலைநேர நெறிமுறைகள் உருவாக்கப்பட்டன.
தொழிலாளர்களின் வேலை நேரம், வேலைக்கு நடுவில் கிடைக்கும் ஓய்வு நேரம், தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் விடுமுறை ஆகியவற்றை இந்த நெறிமுறைகள் தெளிவாக்குகின்றன. எந்த ஒரு தொழிலாளியும் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றாமல் இருப்பதை உறுதிசெய்வது இந்த நெறிமுறைகளின் முக்கிய நோக்கமாக இருந்துவருகிறது.
ஸ்பெயின் நாட்டில் செயல்பட்டுவரும் டைகோ என்ற பாதுகாப்பு உபகரணங்களைப் பொருத்தும் நிறுவனம் ஒன்று, 2011ல் தனது பிராந்திய அலுவலகங்களை மூடியது. இதன் காரணமாகப் பணியாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு, வாடிக்கையாளர்களின் இடத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது. வாடிக்கையாளர்கள் வெவ்வேறு இடங்களில் இருப்பதால், வீட்டிலிருந்து புறப்படும் நேரமும் வந்து சேரும் நேரமும் தொடர்ந்து மாறிவந்தது.
இதையடுத்து, தொடரப்பட்ட வழக்கிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தங்கள் பிராந்திய அலுவலகங்களை மூடுவது என்று முடிவுசெய்ததாலேயே, இந்த ஊழியர்கள் தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு வேலைகளைச் செய்துவிட்டு, வீட்டுக்குத் திரும்புகின்றனர். தங்களுடைய சொந்த விருப்பத்தின் காரணமாக அவர்கள் அதைச் செய்யவில்லை என நீதிமன்றம் கூறியுள்ளது.
Published by


Leave a comment