கொழும்பு: ரக்பி விளையாட்டு வீரர் வசிம் தாஜுதீன் கொலை வழக்கில் பிரதான சாட்சி ஒருவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அரச தரப்பு வழக்கறிஞர் இதனைத் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் மொஹமத் மிஸ்பாக் தெரிவித்தார்.
இருந்தபோதும், பாதிக்கப்பட்டுள்ள சாட்சி தொடர்பாக விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக, குற்ற புலனாய்வு திணைக்களம் விசாரணையொன்றை ஆரம்பித்துள்ளதாகவும் அரச தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன் பின்னர், தோண்டி எடுக்கப்பட்ட வசிம் தாஜுதீனின் உடல் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை எந்த கட்டத்தில் இருக்கிறது என நீதிபதி நிஷாந்த பிரிஸ் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அரச தரப்பு வழக்கறிஞர், முன்னாள் கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசெகரவின் இறுதி அறிக்கை கிடைத்த பின்னர் நீதிமன்றத்திட்கு அறிக்கை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்ப்பான முக்கிய தகவல்கள் ஊடகங்கள் முலம் பிரசுரிக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால் விசாரணைகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் அரச தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். எனவே வழக்கின் முக்கிய ஆவணங்களை நீதிபதியின் அறையில் பாதுகாப்பாக வைக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அந்த வேண்டுகோளை நிராகரித்த நிதிபதி நிஷாந்த பிரிஸ் அரசியல்யாப்பின் 19வது திருத்தச் சட்டத்தின் முலம் தகவல் அறியும் உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறான உத்தரவொன்றை பிறப்பிக்க முடியாதென்று தெரிவித்தார்.
ஆனால் சம்பந்தப்பட்ட தகவல்களை பொறுப்புடன் பிரசுரிப்பதற்கு ஊடகங்கள் கவனம் செலுத்த வேண்டுமென்றும் நீதிபதி கூறினார்.அதன் பின்னர் வழக்கு விசாரணை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ரக்பி ஆட்டக்காரரான வசிம் தாஜுதீன் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் வாகன விபத்து ஒன்றில் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் நடந்த விசாரணைகளில் வசிம் தாஜுதீனின் மரணம் ஒரு கொலையென்று தெரியவருவதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
Published by

Leave a comment