கொழும்பு: கொழும்பு-மினுவங்கொடை வீதியின் மிரிஸ்வத்தை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவுக்குச் சொந்தமான டிபென்டர் வாகனமொன்று, மினுவங்கொடை மிரிஸ்வத்தை பகுதியில் இன்று (10) காலை விபத்திற்குள்ளாகியுள்ளது. இதன்போது ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதோடு, அப்பிரிவைச் சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 5 பேர் அதிக காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மரண வீடொன்றுக்கு சென்று திரும்பும் வழியிலேயே குறித்த டிபென்டர் வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதிக வேகமாகச் சென்ற குறித்த வாகனம் தனியார் பஸ் வண்டியொன்றை முந்திச் செல்லும் போது அவர்களின் எதிர்த்திசையில் மற்றொரு தனியார் பஸ் ஒன்று வேகமாக வந்துள்ளது. குறித்த பஸ்ஸினால் வேகத்தை கட்டுப்படுத்தவோ நிறுத்தவோ முடியாத நிலையில் குறித்த டிபென்டர் வாகனத்தோடு மோதாத வகையில் வலது பக்கமாக திருப்பப்பட்டுள்ளது.
இதனால் எதிரெதிர் திசையில் வந்த இரு பஸ்களும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதோடு, அதற்கு நடுவில் டிபென்டர் வாகனம் மோதி பாரிய விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தின் போது டிபென்டர் வாகனத்தில் வந்த பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த இருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மேலும் இருவர் வைத்தியசாலையில் மரணித்துள்ளனர்.காயமடைந்த ஐவரும் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Published by


Leave a comment