மத்திய கிழக்கில் புழுதிப்புயல்: மருத்துவமனையில் பலர் அனுமதி
பெய்ரூட்: லெபனான், சிரியா ஆகிய இரு நாடுகளிலும் பெரும் புழுதிப்புயல் சூழ்ந்துள்ளது. இரு நாடுகளின் தலைநகரங்களான, பெய்ரூட் மற்றும் டமஸ்கஸ் ஆகிய நகரங்களை ஒரு மஞ்சள் நிற மாசு மண்டலம் சூழ்ந்துள்ளது.மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அல்லது வெளியே வர வேண்டிய சூழல் நேரிட்டால், அறுவை சிகிச்சையின் போது மருத்துவப் பணியாளர்கள் அணியும் முகமூடிகளை அணிந்து செல்லுமாறு அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
திங்கட்கிழமை இரண்டு பெண்கள் லெபனானின் கிழக்குப் பகுதியில் உள்ள பெக்கா பள்ளத்தாக்கில் வீசிய புழுதிப்புயலில் சிக்கி இறந்தனர். சுமார் 80 பேர் சுவாசப் பிரச்சனை காரணமாக மருத்துவமனைகளுக்கு எடுத்துசெல்லப்பட்டனர் என்று செய்திகள் கூறுகின்றன.
லெபனானின் தெருக்களில் அகற்றப்படாமல் குப்பைக் கூளங்கள் கிடப்பதைக் கண்டித்து நடத்தப்பட்டுவந்த அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் இந்த புழுதிப்புயலால் பாதிக்கப்பட்டன.
சிரியாவின் ஹோம்ஸ் நகரைச் சூழ்ந்துள்ள புழுதி மண்டளம்
சிரியாவில் கிளர்ச்சிக்குழுக்களுக்கு எதிராக சிரியா அரசு நடத்தி வந்த வான் தாக்குதல்களும் இந்தப் புழுதிப் புயல் பிரச்சனையால் இடை நிறுத்தப்பட்டன என்று சிரியாவின் ஒரு மத்திய மாகாணத்தில் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
மத்தியக் கிழக்குப் பிராந்தியத்தின் மற்ற சில பகுதிகளான இஸ்ரேல் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் சில பகுதிகளிலும் இந்தப் புழுதிப்புயல் தாக்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. சைப்ரஸ் நாட்டில் 10 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Leave a comment