லண்டன்: நேற்று சனிக்கிழமை லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இங்கிலாந்து-அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியின் போது, இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர் பெண் ஸ்டோக்ஸ்ஸிற்கு வழங்கப்பட்ட ஆட்டமிழப்பு அங்கு தற்பொழுது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிபெற 310 ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிவந்த இங்கிலாந்து, 5வது இலக்க துடுப்பாட்ட வீரர் பெண் ஸ்டோக்ஸ் களமிறங்கியிருந்தார்.
அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் ஸ்டார்க்கின் பந்தை எதிர்கொண்ட ஸ்டோக்ஸ், விக்கட் எல்லையைக் கடந்து முன்னேறி வரும்போது, தான் தடுத்த பந்தை விக்கட்டை நோக்கி ஸ்டார்க் எரியும்போது, துடுப்பாட்டவீரர் ஸ்டோக்ஸ் தனது கையால் தடுத்தார்.
இந்நிகழ்வு தற்காப்புக்காக இடம்பெற்றதா அல்லது விக்கட்டை நோக்கி வந்த பந்தை, தான் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பிக்கொள்வதற்கு தடுத்தாரா என்பதைத் தீர்மானிக்க, 3வது நடுவரிடம் முறையிடப்பட்டது. எனினும் 3ம் நடுவரின் தீர்மானத்தின்படி “களத்தடுப்புக்கு இடைஞ்சல்” (Obstructing the field) எனும் விதியின் கீழ் ஆட்டமிழப்பு வழங்கப்பட்டது.
இப்போட்டியில் அவுஸ்திரேலியா 64 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதுவரை இடம்பெற்ற இரு போட்டிகளிலும் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி 2:0 என தொடரில் முன்னிலையில் உள்ளது.
Published by



Leave a comment