கொழும்பு: இலங்கையின் புதிய அமைச்சரவையின் 42 அமைச்சர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இவர்களைத் தவிர, வெளியுறவு அமைச்சராக மங்கள சமரவீர சில தினங்களுக்கு முன்னரே பதவியேற்றுவிட்டார். புதிய அமைச்சரவையில் 32 அமைச்சர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசிய கட்சி
தலைமையிலான கூட்டணியிலிருந்தும் மிகுதி 11 பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும் தெரிவாகியுள்ளனர்.
டி.எம். சுவாமிநாதன், பழனி திகாம்பரம், மனோ கணேசன் ஆகிய மூன்று தமிழ் அமைச்சர்களும் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கபீர் ஹஷீம், ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், அப்துல் ஹலீம் மொஹமட் ஹஷீம் ஆகிய நான்கு முஸ்லிம் அமைச்சர்களும் இம்முறை அமைச்சரவையில் உள்ளனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை 30-இலிருந்து 48 வரை உயர்த்துவதற்கும் ஏனைய அமைச்சர்களின் எண்ணிக்கையை 40-இலிருந்து 45 ஆக உயர்த்துவதற்கும் புதிய தேசிய அரசாங்கம் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற்றிருந்தது.
அமைச்சுப் பொறுப்புக்களை பகிர்ந்துகொள்வது தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தைகளே புதிய அமைச்சரவை பொறுப்பேற்பதில் ஏற்பட்ட தாமதத்துக்கு காரணம் என்று தேசிய கலந்துரையாடல்கள் தொடர்பான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
‘பதவி ஆசை கொண்டவர்களாலேயே’ அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை புதிய அரசாங்கத்துக்கு ஏற்பட்டது என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறினார்.
Published by

Leave a comment