கொழும்பு: தேர்தலில் தோல்வியடைந்த 11 வேட்பாளர்களை தேசியப்பட்டியல் எம்.பிக்களாக பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்படுவதை பலமிழக்கச் செய்யுமாறு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டியூ.குணசேகர, உச்சநீதிமன்றத்தில் நேற்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல்செய்தார். இதேபோன்று, சரியான முறைகளுக்கு அமைய பாராளுமன்ற உறுப்பினராக தம்மை நியமிக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவிடுமாறும் இந்த மனுமூலம் அவர் நீதிமன்றத்தைக் கேட்டுள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்ததன் பின்னர் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானியில் பெயர் குறிப்பிடப்படாத மற்றும் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களை தேசியப் பட்டியல் எம்.பிக்களாக அறிவிப்பதன் மூலம் தேர்தல்கள் ஆணையாளர் இந்த நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளாரென அறிவிக்குமாறும் இந்த மனுமூலம் அவர் நீதிமன்றத்தைக் கோரியிருக்கிறார்.
தேர்தல்கள் ஆணையாளர் ஐ.ம.சு.முவின் பொதுச் செயலாளர் விஸ்வ வர்ணபால அக்கட்சியின் முன்னாள் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் கபீர் காசிம், ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.துரைராஜசிங்கம் மற்றும் தேர்தலில்தோல்வியடைந்து தேசியப் பட்டியல் எம்.பிக்களாக நியமிக்கப்பட்டுள்ள 11 பேருடன், சட்டமா அதிபரும் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்தின் பிரகாரம் தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் ஆரம்பமாகும் பாராளுமன்றத்துக்கு தேசியப் பட்டியலில் இருந்து 21 பேர் நியமிக்கப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேசியப் பட்டியல் எம்.பிக்களின் எண்ணிக்கை அந்தந்தக் கட்சி தேர்தலில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது.
தேர்தலுக்காக வேட்பாளர் பட்டியல் தேர்தல் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் தேர்தல் ஆணையாளர் அந்தப் பெயர் பட்டியலை அரசாங்க வர்த்தமானியின் ஊடாகப் பகிரங்கப்படுத்துவார். இதன்படி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் தேசியப் பட்டியலையும் தேர்தல் ஆணையாளர் வெளியிட்டிருந்தார்.
அந்தப் பட்டியலில் தன்னுடைய பெயர் மூன்றாமிடத்தில் இருந்தது என்றும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். எனினும், தேர்தலின் பின்னர் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பட்டியல் ஒருபுறம் இருக்க தேர்தலில் தோல்வியடைந்த, ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட தேசியப் பட்டியலில் பெயர் குறிப்பிடப்படாதவர்கள் எம்.பிக்களாக தேர்தல்கள் ஆணையாளரி னால் அரசாங்க வர்த்தமானியின் ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நடவடிக்கை இந்த நாட்டிலுள்ள மக்களின் வாக்குப் பலத்தை கொச்சைப்படுத்துவதாகவும், ஜனநாயக விரோத செயல் என்றும் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
எனவே தேர்தல் ஆணையாளர் இறுதியாக வெளியிட்டுள்ள தேசியப்பட்டியல் வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறும் மனுதாரர் நீதிமன்றத்தைக் கோரியிருக்கின்றார். சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு ஊடாக இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
Published by
![dew-gunasekara[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/09/dew-gunasekara1.jpg?w=116&h=150)
Leave a reply to Faiser Cancel reply