40 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இறைத்தூதரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ஈரானில் பெரும் வரவேற்பு!

iran film (2)தெஹ்ரான்: முஹமது நபியின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட ஷியா முஸ்லிம் நாடான ஈரானிய திரைப்படம் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் அரபு உலகின் ஒருசில சுன்னி முஸ்லிம் மதத் தலைவர்கள் அந்த திரைப்படத்தை தடை செய்யுமாறு ஈரானை வலியுறுத்தியுள்ளனர்.

ஈரான் அரசின் அனுசரணையில் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனரான மஜீத் மஜிதின் இயக்கத்தில் ‘இறைத்தூதர் முஹமது’ என்ற திரைப்படம் கடந்த வியாழக்கிழமை ஈரானில் 140 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.அதிக வரவேற்பு பெற்றிருக்கும் இந்த திரைப்படம் வசூலில் சாதனை புரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

40 மில்லியன் டொலர் செலவில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படம் ஈரானில் தயா ரிக்கப்பட்ட அதிக செலவு கொண்ட திரைப்படமாகவும் உள்ளது.

“மேற்குலக இஸ்லாமிய எதிர்ப்பின் புதிய அலைக்கு எதிராக போராடவே இந்த திரைப்படத்தை எடுக்க தீர்மானித்தேன். மேற்குலகின் இஸ்லாம் பற்றி வியாக்கியானம் அது முற்று முழுதாக வன்முறை மற்றும் தீவிரவாதம் கொண்டதாக பார்க்கப்படுகிறது” என்று மஜீத் ஈரானிய சஞ்சிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

இறைத்தூதரின் வாழ்க்கை வரலாற்றின் முதல் பாகமாக வெளியாகி இருக்கும் இந்த திரைப் படம் 171 நிமிடங்கள் கொண்டதாகும். இதில் இறைத்தூதரின் குழந்தை பருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.

எனினும் இஸ்லாமிய கட்டுப்பாடுகளுக்கு அமைய இந்த திரைப்படத்தில் இறைத்தூதர் கதாபாத்திரத்தின் முகம் காண்பிக்கப்படுவதில்லை. அந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் சிறுவனை பின் புறமாகவும் நிழலாகவுமே கெமரா காண்பிக்கிறது.

அதேபோன்று இறைத்தூதரின் கதாபாத்திரத்தில் நடிக்கும் குறித்த சிறுவனின் தனித்துவம் வெளிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு அவதானத்துடன் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டபோதும் சுன்னி முஸ்லிம்களின் மதிப்பிற்குரிய நிறுவனமான எகிப்தின் அல் அஸ்ஹர், அதிருப்தியை வெளியிட்டிருப்பதோடு, இந்த திரைப்படத்திற்கு தடை விதிக்கவும் ஈரானை வலியுறுத்தியது.

‘இந்த விவகாரம் ஏற்கனவே தீர்மானம் ஒன்றுக்கு வந்ததாகும். ஷரிஆ (இஸ்லாமிய சட்டம்) இறைத் தூதரின் உருவத்தை காண்பிப்பதை தடுக்கிறது” என்று அல் அஸ்ஹரின் இஸ்லாமிய கோட்பாடுகள் துறையின் தலைவரான பேராசிரியர் அப்துல் பத் தாஹ் அல்வாரி குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்த முன்னணி இசையமைப்பாளரான சமி யூசுப், திரைப்படம் பற்றி பெரும்பாலான விமர்சனம் அரசியல் பின்னணி கொண்டது” என்று ராய்ட்டருக்கு குறிப்பிட்டுள்ளார்.

‘அல் அஸ்ஹரை சேர்ந்தவர்களும் இந்த திரைப்படத்தை விமர்சிக்கும் ஏனையவர்களும் அதனை இன்னும் பார்க்கவில்லை என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஈரானிய கலாசாரத்திலிருந்த வந்ததாலேயே அவர்கள் இதனை எதிர்க்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் ஈரானின் பிராந்திய எதிரியான சுன்னி முஸ்லிம் நாடான சவூதி அரேபியா தரப்பில் இந்த திரைப்படம் குறித்து இதுவரை எந்த கருத்தும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இறைத்தூதர் முஹமது நபியின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்ட முழு நீள திரைப்படம் ஒன்று வெளியாவது இது இரண்டாவது முறையாகும்.

இதற்கு முன்னர் ‘தி மெஸ்ஸேஜ் ‘ என்ற பெயரில் 1976 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தை சிரிய நாட்டு இயக்குனரான முஸ்தபா அல் அக்காத் இயக்கினார்.

இந்த திரைப்படத்தில் இறைத்தூதரின் சிற்றப்பா ஹம்ஸாவாக ஹொலிவுட் நடிகர் அன்தனிகுயின் தோன்றியிருந்தார்.

குறித்த படத்தில் இறைத்தூதரின் முகம் திரையில் காண்பிக்கப்படவில்லை. எனினும் ஒரு சில முஸ்லிம் தரப்பு இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. திரைப்படத்தை இயக்கிய அக்காத் 2005 ஆம் ஆண்டு அம்மானில் தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டார். எனினும் இந்த திரைப்படத்தின் பின்னணியில் அந்ததாக்குதல் நடத்தப்பட்டதா என்பது உறுதியாகவில்லை.

‘இறைத்தூதர் முஹமது’ திரைப்படத்தின் பிரதான காட்சிகள் ஈரானிலேயே படம்பிடிக்கப்பட்டது. பிரமாண்டமான பகுதியில் மக்கா போன்று வடிவமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

யானைகள் வரும் காட்சிகள் இந்தியாவில் எடுக்க திட்டமிடப்பட்ட போதும் முஸ்லிம் நாடுகளின் எதிர்ப்புக்கு பயந்து இந்தியா மறுத்ததை அடுத்து அந்த காட்சிகள் தென்னாபிரிக்காவில் எடுக்கப்பட்டன.

எனினும் ஈரானிய உயர்மட்ட தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமைனி, படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்று வாழ்த்து தெரிவித்திருந்தது இந்த திரைப்படத்திற்கான வலுவான ஆதரவை பெற்றுக்கொடுத்தது.

Published by

Leave a comment