“தேசியப்பட்டியல் நியமனங்கள் உரிய நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும்”: அஷ்ஷெய்க் பிர்தௌஸ்

firthous naleemi– நல்லாட்சிக்கான தேசிய முன்னணி

காத்தான்குடி: “தேசியப்பட்டியல் நியமனம் என்பது ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் வலுச் சேர்த்தல் என்ற அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும் என்பதே தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் எமது நிலைப்பாடாகும்” என NFGGயின் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் தெரிவித்துள்ளார்.

தேசியப்பட்டியல் நியமன விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…

“தேர்தலில் வெற்றி பெறாதவர்கள் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு உள்வாங்கப்படுவது முறையாகுமா? என்ற கேள்வி தற்போது பரவலாக எழுப்பப்படுகிறது. எந்தவொரு விடயமும் அதன் அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைகிறதா இல்லையா என்பதனை நோக்குவதில் இருந்தே நாம் எமது நிலைப்பாடுகளை வரையறுக்க வேண்டும். அந்த வகையில் தேசியப்பட்டியல் நியமன முறை என்பது எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவு செய்யும் வகையில் அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதே இங்கு நோக்கப்பட வேண்டிய அடிப்படை விடயாமாகும்.

இந்த நாட்டில் தேசியப்பட்டியல் முறை அறிமுகம் செய்யப்பட்டதற்கு அடிப்படையான ஒரு நோக்கம் இருக்கிறது. பாராளுமன்றத்திற்கு அறிவு பூர்வமான பங்களிப்புச் செய்யக்கூடிய புத்தி ஜீவிகளும், நேர்மையானவர்களும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறமுடியாத சூழ்நிலைகளில் அவர்களை பாராளுமன்றத்திற்கு உள்வாங்குவதே தேசியப்பட்டியல் முறையின் அடிப்படை நோக்கமாகும்.

firthous naleemi
அஷ்ஷெய்க் MBM. பிர்தௌஸ் (நளீமி)

இந்த அடிப்படை நோக்கத்தை மனதிற்கொண்டே தேசியப்பட்டியல் நியமனம் வழங்கப்படல் வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

அந்த வகையில் தேசியப்பட்டியல் நியமனங்கள் இந்த அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்வதாக பெரும்பாலும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய ஒரு வரலாற்று உண்மையாகும்.

தேசியப்பட்டியல் மூலமாக பொருத்தமானவர்களை பாராளுமன்றத்திற்கு உள்வாங்கும் விடயம் பல கட்சிகளினாலும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதும் மற்றுமொரு கவலையான விடயமாகும்.

இந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே தேசியப்பட்டியல் நியமனம் மீண்டும் ஒருமுறை இந்தத் தடவையும் துஷ்பிரயோகம் செய்யப்படக்கூடாது என்ற கருத்து தற்போது மேலோங்கி வருகிறது.

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் போது தேர்தலில் வெற்றி பெறத் தவறியவர்களில் பொதுவாக இரண்டு வகையினர் இருக்கின்றார்கள்.

அதில் முதலாவது வகையினர் நல்லாட்சிக்காக அர்ப்பணத்துடன் உழைத்த ஒரு தரப்பினராகும். அடுத்த வகையினர் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளிலும், அதிகாரத் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபட்டு நல்லாட்சியின் அடிப்படைகளுக்கு எதிராகத் தொடர்ந்தும் செயற்பட்டவர்களாகும்.

இங்கே நல்லாட்சிக்காக உழைக்கின்ற வரலாற்றைக் கொண்டவர்களை, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற தவறுகிற போது தேசியப்பட்டியல் மூலமாக உள்வாங்குவதானது தேசியப்பட்டியல் முறையின் அடிப்படை நோக்கத்திற்கு முரணானதல்ல. அதனை நாம் வரவேற்கிறோம்.

உதாரணமாக நல்லாட்சிக்கான உழைப்பில் முன்னணி வகித்த ஒருவரான சுனில் ஹந்துநெட்டி போன்றவர்கள் தேசியப்பட்டியல் மூலமாக உள்வாங்கப்படுருப்பது நல்லாட்சிக்கும் ஜனநாயகத்திற்கும் வலு சேர்க்கின்ற விடயமாகும். மட்டுமின்றி தேசியப்பட்டியல் முறையின் நோக்கத்தை நிறைவு செய்வதாகவே இது அமைகிறது. இது போன்ற நியமனங்களை NFGG வரவேற்கிறது.

ஆனால், கடந்த காலங்களில் ஊழல் மோசடிகள் புரிந்து சட்ட விரோத செயல்களையும் அதிகாரத் துஷ்பிரயோகங்களையும் மேற்கொண்டு நல்லாட்சிக்கு விரோதமாக செயற்பட்டவர்களை தேர்தலில் மக்களே தோற்கடித்திருக்கும்போது அவர்களை தேசியப்பட்டியல் மூலம் உள்வாங்குவதென்பது ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் விரோதமான நடவடிக்கையாகவே அமையும்.

உதாரணமாக மஹிந்தவின் அராஜக ஆட்சியின் முகவர்காக இறுதிவரை தொழிற்பட்டு பல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு நல்லாட்சிக்கு விரோதமாக இறுதிவரை செயற்பட்ட பலரை மக்கள் தோற்கடித்த பின்னரும் கூட தேசியப்பட்டியல் மூலமாக UPFA கட்சி உள்வாங்கியிருப்பதானது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.

மட்டுமின்றி நல்லாட்சியை உருவாக்குவதற்கு அர்ப்பணம் கொண்டுள்ளோம் எனக்கூறும் ஜனாதிபதி மைத்திரி அவர்களினால் தலைமை தாங்கப்படும் கட்சி இதனைச் செய்திருப்பதானது ஜனநாயகத்தை நேசிக்கும் அத்தனை பெயரையும் தலை குனியச் செய்யும் நடவடிக்கையாகவும் அமெந்துள்ளது.

இது போன்ற தேசியப்பட்டியல் நியமனங்கள் ஜனநாயக விரோத மற்றும் நல்லாட்சி விரோத செயற்பாடாக அமையும் என்பதனால் நாம் இவற்றை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அந்த வகையில் தேசியப்பட்டியல் நியமன விடயம் என்பது ஜனநாயகத்திற்கும் நல்லாட்சிக்கும் வலுச் சேர்த்தல் என்ற நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும் என்பதே தேசியப்பட்டியல் நியமனம் தொடர்பில் எமது உறுதியான நிலைப்பாடாகும்.”

Published by

One response to ““தேசியப்பட்டியல் நியமனங்கள் உரிய நோக்கத்தை நிறைவு செய்வதாக அமைய வேண்டும்”: அஷ்ஷெய்க் பிர்தௌஸ்”

  1. Mohammed Fasleen Avatar
    Mohammed Fasleen

    NFGG யின் தேசிய அமைப்பாளர் MBM.பிர்தௌஸ் அவர்களால் தேசியப்பட்டியல் நியமன விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டுள்ள அறிக்கை

    ஒரு நல்லசிக்கான அறிக்கையாக இல்லாமல் பலரையும் மறை முகமாகவும் நேரடியாகவும் குறை சொல்லி மிரட்டல் விட கூடியதவே காணப்டுகின்றது. மேலோட்டமாக பார்த்தால் நல்லாசிக்காக கவலை படுவது போல் இருந்தாலும் இதனால் சகோதரர் ஹிஸ்புல்லாவின் தேசிய பட்டியலின் மூலமான வெற்றியை கொச்சைப் படுத்தி வரும் நகர சபை தேர்தலில் குளிர்காய நினைப்பது ஒரு நோக்கமாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

    மற்றும் இந்த அறிக்கையின் மூலமாக நல்லாட்சிக்காக உழைக்கின்ற வரலாற்றைக் கொணடவர்களை, அவர்கள் தேர்தலில் வெற்றி பெற தவறுகிற போது தேசியப்பட்டியல் மூலமாக உள்வாங்குவதானது தேசியப்பட்டியல் முறையின் அடிப்படை நோக்கத்திற்கு முரணானதல்ல.என்பதை ஏற்றுகொள்ளும் நீங்கள் ஏன் பயங்கர வாதத்தினால் பாதிக்கப்பட்ட எமது ஊரான காத்தான்குடியை அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு போன்ற இவ்வாறான நல்லாட்சிக்காக உழைத்த வரலாற்றைக் கொண்ட சகோதரர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற தவறிய போது தேசியப்பட்டியல் மூலமாக உள்வாங்கப் பட்டது எந்த அடிப் படையில் தேசியப்பட்டியல் முறையின் அடிப்படை நோக்கத்திற்கு முரணானது.

Leave a comment