அரசியல்வாதிகளுக்கு ‘வாலி’பிடிக்கும் காத்தான்குடி மாணவர் சமூகமும் எதிர்காலமும்…

isis facebook– MJ

காத்தான்குடி: முகநூல் எனும் சமூக வலைத்தளம் வந்ததன் பின்னர் ஆளுக்கொரு கணக்கை ஆரம்பித்துவிட்டு, தான் ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கு வக்காலத்து வாங்கி, அவர்களுக்கு புகழ்மாலை சூடுவதிலும், தனது எதிரி அரசியல்வாதிகளுக்கு அவர்களைத் தூற்றி எழுதுவதிலும் இன்றைய காத்தான்குடி இளைஞர் சமூகம் முகநூலில் சீரழிந்துகொண்டிருக்கின்றது.

கணினி யுகம் வருவதற்கு முன்னர் எமது சமூகம் இனப்பிரச்சினையை முகம்கொடுத்துவந்தது. ஒன்றாகப் படித்த நண்பனை குண்டு வெடிப்பில் இழந்ததும், ஒன்றாக விளையாடி மகிழ்ந்த அயலவர்களை கடத்தப்பட்டு இழந்ததும், கூடப்பிறந்த சகோதரனை துப்பாக்கி ரவை துளைத்து இழந்ததும் மரணத்தில் இருந்து தப்பிப்பிழைத்த அந்த நாட்கள் எம்மை இன்றும் நினைவூட்டிக்கொண்டிருக்கின்றன.

‘மஃரிபு’ பாங்கு சொன்தும், மின்சாரமில்லாத அந்த நாட்களில் விளக்கேற்றி, கிணற்றடிக்குச் சென்று வுழுச் செய்து, எங்களையும் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பள்ளிவாயல் விட்டு, வீடு வரும்வரைக்கும் எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற பிராத்தணையில் எம் தாய்மார் தொழுது கொண்டிருப்பர்.

துப்பாக்கிக் குண்டுகள் வானை பிளக்கும். ஷெல் அடிகள் அங்குமிங்கும் விழுந்துவெடிக்கும், ஹெலிகொப்டர் வானில் வட்டமிடும் இத்தனைக்கும் இறைவனைத் தலைசாயத்து பள்ளிசென்று வீட்டிற்குள் முடங்கி பாடப்புத்தகத்தில் லயித்திருப்போம்.

இரவில் படித்துக்கொண்டிருக்கும்போதும் துப்பாக்கிச் சந்தங்கள் காதைக்கிழித்துச் செல்லும். காயப்பட்ட ஊர்காவற்படைவீரர்களின், பொலிஸாரின் அலரல்கள் எங்கள் கண்களைக் குளமாக்கிச் செல்லும். காலையில் சடலங்களாக அவர்களை காணத் தோன்றும். மரத்தில் இருந்து காககம் கரைந்தாலோ, மதில் பூனை பாய்ந்தாலோ நெஞ்சு படபடக்கும்.

மாலையானதும் காத்தான்குடியின் நூலகத்தில் எங்களை அர்ப்பணிப்போம். அஸர் தொழுகை மெத்தைப்பள்ளியில் தொழுதுவிட்டு மாலை வரைக்கும் படித்துக்கொண்டிருப்போம். மஃரிப் பாங்கை மெத்தைப் பள்ளியில் எதிர்பார்த்து வாசிகசாலை சந்தியில் துவிச்சக்கர வண்டியை நிறுத்திவிட்டு, நாங்கள் ஓர் வட்டமாநாடு நடாத்திக்கொண்டிருப்போம். அந்நேரத்தில் அவ்வழியால் செல்லும் பெரியவர்கள் “தம்பிமார்களே இப்படி நின்று கதைத்துக்கொண்டு இருக்காதீங்க. அங்க இங்க எல்லாம் குண்டு வெடிக்குது. பள்ளிக்குப் போங்க. இல்லாட்டி வீட்ட போய் சேருங்க” இவ்வாறு எங்களை எச்சரித்துச் சென்ற காலம்.

பாடசாலைகூட சரியாக இயங்க முடியாமல் இடையிடையே நேரத்தோடு விடப்படும். இன்றுபோல் ரியூசன் வகுப்புக்கள் அன்று அதிகமாக இருக்கவில்லை. காத்தான்குடியில் ஆங்கிலப் பாடத்துக்குத்தான் அன்று ரியுசன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கணிதம், விஞ்ஞானம் பாடங்கள் வரைக்கும் ரியுசன் வகுப்புக்கள் சென்றன.

மட்டக்களப்பில் தனியார் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. யுத்த-இனப்பிரச்சினை சூழ்நிலையிலும் காத்தான்குடி மாணவ, மாணவிகள் மட்டுநகர் சென்று தனியார் வகுப்புக்களில் படித்து வந்தனர்.

அடையாள அட்டை கொண்டு செல்ல மறந்ததால் கல்லடி சோதனை முகாமில் பல மாணவர்கள் திருப்பியனுப்பப்பட்டனர். வகுப்பு நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே பாதுகாப்புப் படையினர் சோதனைகளை மேற்கொள்வர். சந்தேகமென்றால் கைது செய்யவும் தயங்க மாட்டார்கள்.

இன்று காத்தான்குடி இளைஞர் சமூகம் யுத்தகால வடுக்களை மறந்து, இதுதான் இன்றைய புதிய யுகம் என்ற போக்கில் தங்களை சமூக வலைத்தளங்களில் அர்ப்பணிக்கின்றனர். பெற்றோரின் பணம் “நெட்கார்ட்” ரீலோடுக்கும், அரசியல்வாதிகளுக்கு வாலிபிடிப்பதற்கும் கறைந்து செல்கின்றது.

தனக்குக் கீழ் இருக்கும் தம்பி, தங்கைகளின் எதிர்காலம் மறந்து, அக்கறையற்று, சமூக வலைத்தளங்களில் அதிகாலைவரைக்கும் தங்களை அர்ப்பணிக்கும் இன்றைய மாணவர் சமூகம், “எலக்ஸன்” அன்றைய நாளில்தான் சுப்ஹூத் தொழுகைக்கு பள்ளிக்குச் செல்லுகின்ற நிலை ஏற்படுகின்றது.

சிறுபராயத்தில் மத்ரஸாவில் கற்ற மார்க்கக் கல்வியும் மறந்து, இன்றை உலகக் கல்வியும் துறந்து, அரசியல்வாதிகள் எங்களைக் காப்பாற்றுவார்கள், அவர்கள் எங்களுக்கு சோறுபோடுவார்கள் என்ற நினைப்பில் அதிகமான இளைஞர்களின் காலங்கள் முகநூலில் கரைந்துகொண்டிருக்கின்றன.

இன்றைய நவீன வசதிகள் உள்ள இக்காலத்திலலேயே இவர்களால் தழிழை சரியாக எழுத முடியவில்லை. ஆங்கிலத்தை இலக்கணத்தில் எழுதத் தெரியவில்லை. இன்றைய மாணவர்களின் பலவீனம் அவர்களது எதிர்காலத்தை நிரூபித்துச் செல்கின்றன.

சமூகம் எதிர்நோக்கும் எதிர்காலச் சவால்கள், தனது மார்க்கம் எதிர்நோக்கும் சம கால சவால்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் புறமுதுகாட்டும் இன்றைய மாணவர் சமூகத்தின் இயலாமை, நாளைய காத்தான்குடியின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியுள்ளது.

மாணவர் சமூகம் கட்டுக்கோப்புடன் செயற்பட வேண்டும். சமூக வலைத்தளங்களில் எல்லை மீறும் மாணவர்களை குறித்த பாடசாலை இத்தகைய மாணவர்கள் விடயத்தில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

அரசியல்வாதிகளுக்காக உங்கள் அறிவை அடகு வைக்காதீர்கள்! உங்கள் கல்வியால் எமது ஊரையும் சமூகத்தையும் வளப்படுத்துங்கள். அதைத்தான் நானும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

Published by

Leave a comment