-
AF-90
கொழும்பு: பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்து ஒரு வாரம் சென்றுவிட்ட நிலையில், தேசியப் பட்டியல் விலை பேசப்பட்டது. அதன்படி தேசியப்பட்டியல் தேர்தலில் தோற்றவர்களுக்கும், ஏனையோருக்கும் இருதரப்பும் வழங்கி நிறைவடைந்த நிலையில், மீண்டும் தமக்கு இந்த அமைச்சுதான் தரவேண்டும் என்ற விலை பேசல் இடம்பெற்று வந்தது.
ஐ.தே.க. மற்றும் ஐ.தே.கூ. ஆட்சியமைக்கும் நெருக்கடியான சூழ்நிலையில், ஐ.ம.சு.கூயுடன் இணைந்து பாராளுமன்றத்தை அமைக்க வேண்டிய சூழ்நிலையொன்று வெற்றிபெற்ற ஐ.தே.கயிற்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்தலில் வெற்றிபெற்ற முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளும், தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் நுழைந்த முஸ்லிம் பிரதிநிதிகளும், தங்களது விசுவாசக் கட்சி மேலிடத்திற்கு அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொள்ள எடுத்த அழுத்தங்களும், ஆசைகளும் இப்போது தவிடுபொடியாகி இருக்கின்றன.
இதன்காரணமாக முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், ஏனைய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும், விலைபேசும் நடவடிக்கை தோற்றுப்போனதால், தொடர்ந்தும் கொழும்பில் இருக்காமல் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளதாக கொழும்பு அரசியல்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களைவிட, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களே அமைச்சுப்பதவியைப் பெற்றுக்கொள்வதற்கு அதிக விலை கொடுக்க முயற்சிக்கும் நிலை காணப்பட்டு வந்தன. ஆனால், தற்பொழுது இருபெரும்பான்மைக் கட்சிகளும் கூட்டிணைவதால், இருதரப்பு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கே பிரதான அமைச்சுக்கள் செல்லக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமிருக்கின்றன.
இந்த அதிருப்தியையடுத்து, அமைச்சுப்பதவி கனவில் வாய்பிளந்திருந்த முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகளும், இந்த அமைச்சுத்தான் தனக்கு வேண்டும் என்று அடம்பிடித்த சிரேஷ்ட முஸ்லிம் கட்சி உறுப்பினர்களும் சொந்த ஊர்களுக்குத் திரும்பி இருக்கின்றனர்.


Leave a reply to Faiser Cancel reply