-
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பல்வேறு அம்சங்களை எமக்கு உணர்த்தினாலும் அவற்றுக்கு மத்தியில் பின்வரும் முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுக்காட்ட முடியும்
இனவாத சக்திகள்மிகத் தெளிவாகவே முஸ்லிம் விரோதப் போக்கைக் கொண்டுள்ள பொதுபலசேனாவின் கட்சிக்கு படுதோல்வி கிட்டியிருப்பதையிட்டு எம்மில் எவரும் சந்தோசப்படாமல் இல்லை. ஆனால் நாடளாவிய ரீதியில் மொத்தமாக அக்கட்சிக்கு சுமார் 20107 வாக்குகள் கிடைத்திருக்கிறது. இதிலிருந்து அந்த தீவிரவாத சிந்தனையில் முழு நாட்டிலும் குறைந்தது இருபத்தி மூவாயிரம் பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பமாக இத் தேர்தல் அமைந்தது. அல்லாஹ் அந்த சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தினான்.
இலங்கையில் உள்ள முஸ்லிம்களது தொகை அதிகரித்து வருகிறது; இதனால் சிங்கள சமூகத்தின் தொகை குறைந்து வருகிறது; முஸ்லிம்கள் தமக்கெனத் தனியான சட்டங்களை அமைத்து இந்த நாட்டையே ஷரீஆ சட்டங்கள் அமுலாகும் நிலைக்கு படிப்படியாகக் கொண்டு போகிறார்கள். சர்வதேச முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுடன் இந்நாட்டு முஸ்லிம்களுக்குத் தொடர்புண்டு. இங்குள்ள பள்ளிவாசல்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளது பங்கர்கள். மத்ரஸாக்கள் தீவிரவாத சிந்தனையை உருவாக்குகின்றன. வியாபாரத்தில் சிங்களவர்களை மிகைத்து முஸ்லிம்கள் கால்பதித்துவிட்டார்கள்.
இது போன்ற துவேசத்தைக் கக்கும் கருத்துக்களை நாக் கூசாமல் பகிரங்க மேடைகளிலும் பத்திரிகையாளர் மகாநாடுகளிலும் கூறி வருகிறார்கள். தர்கா நகர், அளுத்கமை, பேருவளை உள்ளிட்ட இடங்களில் நடந்த கலவரத்துக்கு நேரடியாகவே காரணமாக அமைந்த இந்த பொதுபலசேனாவின் கொள்கைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் இருபத்து மூவாயிரம் பேர் முழு நாட்டிலும் இருக்கிறார்கள் என்றால் இதன் ஆபத்தை நாம் சரிவரப் புரிய வேண்டும்.
அதிலும் குறிப்பாக தர்கா நகர் அளுத்கமை, பேருவளை பிரதேசங்கள் அமைந்துள்ள களுத்துறை மாவட்டத்தில் 5 ஆயிரத்துக்கும் கூடுதலான வாக்குகளை பொதுபலசேனா பெற்றிருப்பதும் அபாய அறிவிப்பாகவே உள்ளது. அப்பிரதேச மக்கள் தமது பகுதிகளில் தீவிர பௌத்த வாதத்துக்கான வித்துக்கள் தூவப்பட்டு அது பெரு விருட்சமாக வளர்ந்து வருவதை உணர்ந்து அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
வளர்ச்சியை கட்டுப்படுத்துவது என்றால் தர்க்கம் செய்வதோ ஆயுதப் போரோ அல்ல. இஸ்லாத்தின் பகிரங்க விரோதிகளான இவர்கள் முஸ்லிம்கள் பற்றியும் இஸ்லாம் பற்றியும் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்து அவற்றுக்கு எழுத்தால் பேச்சால் அறிவுபூர்மாகவும் நிதானமாகவும் பதில்களை முன்வைப்பது அடிப்படையான கடமையாகும். அத்துடன் முஸ்லிம்களது வாழ்வு ஒழுங்கில் பல மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இந்த நாட்டில் முஸ்லிம்களது சமூக உறவுகளில் இஸ்லாத்துக்குப் புறம்பான பிறரது ஆத்திரத்தைத் தூண்டும் அம்சங்கள் பல இருக்கலாம். அவற்றை சீர்திருத்திக் கொள்ள வேண்டும். வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் வாய்மை, வெளிப்படைத்தன்மை என்பன இருப்பதை மீளவும் நாம் ஊர்ஜிதப்படுத்த வேண்டும். முஸ்லிம் அல்லாதவர்களுடன் மிகவும் அன்பாகப் பழகுவதுடன் அவர்களுக்கு எம்மாலான சகல உதவி ஒத்தாசைகளையும் நாம் செய்ய வேண்டும். எனவே அறிவுபூர்வமாகவும் பண்பாடுகளோடும் நடப்பது எமது இருப்பை இந்நாட்டில் பலப்படுத்தி இனவாத நெருப்பை அணைக்க பெரிதும் உதவும். முஸ்லிம் சமூகத் தலைமைகள் சமாதான சகவாழ்வுக்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவதன் அவசியத்தை 20107 வாக்குகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
பொதுபலசேனாவுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அனுசரணையாக இருந்த ஆட்சிக்கு ஜனவரி எட்டாம் திகதி ஒரு சாவுமணியும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி மற்றொரு சாவுமணியும் அடிக்கப்பட்டுவிட்டது என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அதில் உண்மையிருக்கலாம். ஆனால் அரச அனுசரணை இனி கிட்டாது என்று வைத்துக் கொண்டாலும் பல மதகுருக்களும் ஏன் பல புத்திஜீவிகளும் இனவாதத்தில் எண்ணை ஊற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
ஏலவே எழுதப்பட்ட பல நூல்கள் தற்போதும் வாசிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 20 இற்கு மேற்பட்ட இணைய தளங்களும் சமூக ஊடகங்களும் துவேசத்தைக் கக்கிக் கொண்டு தான் இருக்கின்றன.
எனவே இப்பிரச்சினையை அரசின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு நாம் குறட்டை விட்டுத் தூங்கினால் அல்லது நம்பாட்டில் நாம் இருந்துவிட்டால் அல்லது கைவிட்டுப் போனால் அல்லாஹ்தான் பாதுகாக்க வேண்டும். மீண்டும் வியாபாரத் தளங்களும் வீடுகளும் பற்றி எரியும் நாள் வரும்போது மட்டுமே உடனே விழித்தெழுந்து பேஸ்புக்கிலும் ‘வட்ஸ் அப்’பிலும் வீறாப்புப் பேச ஆரம்பிப்போம். கார்ட்போர்ட் வீரர்களாக மாறுவோம். சோடா கேஸாகுவோம்.
தர்கா நகர் கலவரம் நடந்து ஒரு சில மாதங்கள் கழியும் வரை அந்தச் சூடும் இருந்தது. பல கலந்துரையாடல்கள் ஆக்கங்கள் என்று முயற்சிகள் தீவிரமாக இருந்தன. தற்போது அது பழங் கதையாகிவிட்டதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஹலால் விவகாரம், நிகாப் விவகாரம், ஐ.எஸ்.ஐ.எஸ். விவகாரம் என்பன வந்த போதெல்லாம் உடனடியாக பலர் களத்தில் இறங்கினார்கள். ஏதோ நடந்தது. அதன் சூடு தணிந்ததும் மீண்டும் நாம் சோர்ந்து போனோம். பிரச்சினைகள் நீறுபூத்த நெருப்புப் போல் அடிமட்டத்தில் இருந்து பல்கிப் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன.
நாம் உடனடித் தீர்விலும் ஆர்ப்பாட்டங்களிலும் கண்டன அறிக்கைகளிலும் கவனம் செலுத்தும் அளவுக்கு நீடித்து நிலைக்கும் தீர்வுகளைப் பற்றி யோசித்து உணர்ச்சிகளுக்கு அப்பால் நின்று காத்திரமான நீண்ட காலத் திட்டங்களுக்காக உழைப்பது குறைவு. எமது ஞாபகசக்தி குறுகியது.
பிரச்சினைகளுக்கான காரணங்கள் ஆராயப்பட வேண்டும். பிரச்சினைகள் எவ்வளவு பாரதூரமானவை என்பதை மிகச் சரியாக மட்டிடுவது முக்கியமான விடயமாகும். அத்துடன் அத்தகைய பிரச்சினைகள் எதிர்காலத்தில் தோன்றாமலிருக்க எத்தகைய வேலைத் திட்டங்களை அமுலாக்க வேண்டும் என்பது பற்றியும் அதற்கான வளங்களைத் திரட்டுவது மற்றும் பயன்படுத்துவது பற்றியும் துறைசார் வல்லுனர்களும் சமூக ஆர்வலர்களும் நன்கு கலந்தாலோசித்து திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதுவல்லாமல் தற்காலிகமாக மேற்கொள்ளப்படும் பிளாஸ்டர் ஒட்டும் ‘பெச்’ போடும் வேலைகள் மட்டும் பலனளிக்கப் போவதில்லை.
இலங்கையில் புலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்தவுடன் சிங்களவர்களை முஸ்லிம்களுடன் மோதவிடுவதற்கான பல சக்திகள் மிகச் கச்சிதமாக வேலை செய்து கொண்டிருக்கின்றன. அரசியல் இலாபத்துக்காக வெளிநாட்டிலிருந்து வரும் பணத்துக்காக தனிப்பட்ட குரோதங்களுக்காக பௌத்தர்களை ஏவிவிடும் சக்திகளை இனங் கண்டு அவற்றுக்கான பரிகாரங்கள் காணப்படுவது உடனடித் தேவையாகும். சாமானியமான சிங்கள சமூகத்திலுள்ள பொது மக்கள் படித்த வர்க்கம், வியாபார சமூகம் என பல தரப்பட்டவர்களது மனங்களிலும் சூட்சுமமாக துவேஷ நஞ்சைப் போடுவதில் சில தீவிரவாதிகள் அல்லும் பகலுமாக உழைத்து வருகிறார்கள்.
எனவே பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகளாக இருக்கலாம். ஏற்கனவே மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களாக இருக்கலாம். மற்றும் உலமாக்கள் புத்திஜீவிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம் சமூகத்தை நோக்கிப் பாய்ந்துவரும் இனவாத பிரளயத்தைத் தடுத்து நிறுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட வேண்டும். அது காலத்தின் தேவையும் மார்க்கக் கடமையுமாகும். விஷப் பாம்பை கட்சியின் சின்னமாக ஆக்கிக் கொள்வதாயின் தம்மை விஷ ஜந்துவாக சித்தரிப்பதில் பெருமைப்படுகின்ற அளவுக்கு அவர்களது மனப்பாங்கு கீழ் நிலைக்கு வந்தவிட்டது.
மியன்மாரில் பல்லாயிரம் முஸ்லிம்களை கொன்று குவித்து சர்வதேச அளவில் கூட துஷ்டனாகக் கணிக்கப்படும் விராதுவை கொழும்பு சுகததாஸ அரங்கு நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக அழைத்தத்தில் இருந்து தாமும் அப்படியான போக்குள்ளவர்கள் தான் என பொதுபல சேனாவினர் பறைசாற்றுகிறார்கள்.
ஒழுங்குபடுத்தப்பட வேண்டிய முஸ்லிம்களின் அரசியல் நகர்வு
தேர்தலின் மூலம் நாம் பெற்ற மற்றுமொரு படிப்பினை முஸ்லிம்கள் பிளவுபட்டிருப்பதனால் முஸ்லிம்களிடையே சண்டை சச்சரவுகள் மென்மேலும் அதிகரிக்கும் என்பதாகும். தேர்தல் காலத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் தமக்கிடையே மோதிக் கொண்டனர். ஓர் அரசியல்வாதியின் ஊழல்களை மற்றுமொரு முஸ்லிம் அரசியல்வாதி பகிரங்கமாகவே மீடியாக்களில் வெளிப்படுத்தினார். அது பொதுபலக்காரர்களுக்கே தூண்டுதலாகவும் தைரியமாகவும் அமைந்தது. ஊழலில் சம்பந்தப்படுவது தவறுதான். அதேபோல் எமது தவறை எமது தனிப்பட்ட நலன்களுக்காக எமது பொது எதிரிக்குக் கூட தெரியப்படுத்துவதும் தவறுதான். எம்மை எள்ளி நகையாடுவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த எதிரிக்கு ‘வாய்க்கு அவல்” கிடைத்த கதையாகிவிட்டது.
தேர்தலுக்கு முன்னால் எம்மில் பலரும் வாக்களிப்பது என்பது அமானத், ஷஹாதத், ஷபாஅத் என்ற வகையில் சாரும் என்று பேசி வாக்காளர்களை அறிவூட்டி வந்தோம். அதுபோல் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் பல தகைமைகள் இருக்க வேண்டும் என்றும் பரவலாகப் பேசப்பட்டது. இறையச்சம் சமூக உணர்ச்சி, அறிவு திறமை, ஆற்றல், பரந்த மனப்பான்மை தைரியம் போன்ற பண்புகளைப் பெற்றவர்களை மட்டுமே நாம் தெரிவு செய்ய வேண்டும். இல்லாதபோது அது ‘கவ்லுஸ் சூர்” என இஸ்லாத்தில் கூறப்பட்ட பொய்ச் சாட்சியம் கூறும் குற்றமாகக் கருதப்படும் என்றும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அப்படியாயின் தற்போது பொது மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்றத்துக்கான முஸ்லிம் பிரதிநிதிகளிடம் இப்பண்புகள் எந்தளவுக்கு இருக்கின்றன. முழுமையாக இல்லாவிட்டாலும் உயர்ந்த பட்சம் இருக்கின்றனவா? இவை சிந்தனைக்குரிய அம்சங்கள்.
பாராளுமன்றம் செல்லும் இவர்களை தனி மனிதர்களாகப் பார்க்க முடியாது. அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் தலைவர்கள்; பிரதிநிதிகள். சமூகத்தில் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன. அவற்றைத் தீர்ப்பதிலும் அவர்களது பங்கு மகத்தானது. அவர்களது ஒவ்வொரு அசைவுக்கும் வார்த்தைக்கும் பெறுமதியுண்டு. நிலைப்பாடுகளை எடுக்க முன்னர் கருத்துக்களை வெளியிட முன்னர் அவர்கள் வெகு தூரம் சிந்தித்துக் கொள்ள வேண்டும்.
எனது ஒவ்வொரு வார்த்தையும் நாட்டின் நலனைப் பாதுகாக்குமா? அல்லது பாதிக்குமா? நான் பிரநிதித்துவப்படுத்தும் சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவுமா? அல்லது இன்னும் அதனைக் குட்டிச் சுவராக்கிவிடுமா என அவர்கள் சிந்திக்க வேண்டும். சமூகமும் அவர்களைத் தனிமைப்படுத்திவிடாமல் அவர்களை நெறிப்படுத்தவும் தேவைப்படும்போது அவர்களைப் பாதுகாக்கவும் முயற்சிகளையெடுக்க வேண்டும். குறிப்பாக சமூகத்திலுள்ள உலமாக்கள் புத்திஜீவிகள் இதற்காக முன்வர வேண்டும்.
பாராளுமன்றத்தில் உள்ள ஒரு பிரதிநிதியின் உரை பயனுள்ளதாகவும் தாக்கம்மிக்கதாவும் அமைவதற்கு அதில் நம்பகரமான தகவல்கள் புள்ளி விபரங்கள் உள்ளடங்கியிருப்பது அவசியமாகும். அப்படியாயின் அத்தகைய தகவல்களை அவர்களுக்கு வழங்குவதற்கு முஸ்லிம் சமூகத்தில் ஒரு தகவல் களஞ்சியம் இயங்க வேண்டும். அதி நவீன தொழில்நுட்பங்கள் ஆய்வு முறைகள் தகுதியான ஆய்வாளர்கள் அதில் உள்வாங்கப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தேவை.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மன்றம்
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களது மன்றம் ஒன்று உருவாக்கப்பட்டு அதில் கட்சி பேதமின்றி சகல பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான கிரமமான சந்திப்புக்கள், கலந்துரையாடல்கள் பயிற்சித் திட்டங்கள், ஆத்மீக ரீதியான வழிகாட்டல்கள் இடம்பெற வேண்டும். இந்த மன்றத்தை தேசிய சூரா சபை போன்ற ஒரு பொதுவான அமைப்பு ஒழுங்கு செய்யலாமே என ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். அது சிறந்த ஓர் அபிப்பிராயமாக இருந்தாலும் அதனை எந்த அளவு சாத்தியப்படுத்தலாம் என்பது பற்றி சிந்திப்பது அவசியமாகும். ஆனால் அது மிகவும் அவசியமான காலத்தின் தேவை என்பதில் இரு கருத்துக்கு இடமிருக்க முடியாது.
முஸ்லிம் சமூகத்தில் தீர்க்கப்பட வேண்டிய ஊன்றிக் கவனிக்கப்பட வேண்டிய பிரதானமாக ஏழு துறைகள் உள்னள.
1) ஆத்மீகமும் பண்பாடும்
2) அரசியல்
3) கல்வி
4) வெகுஜன தொடர்பு சாதனத் துறை
5) சுகாதாரம்
6) குடும்ப உறவுகள்
7) பிற சமூகங்களுடனான சமாதான சக வாழ்வு.இவற்றில் ஒரு துறையாக மட்டுமே அரசியல் இருந்தாலும் ஏனைய ஆறு துறைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக அது இருப்பது கண்கூடு. எனவே அரசியல் துறையையும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களையும் பற்றிய சரியான நிலைப்பாடுகளை நாம் எடுப்பதற்கான சந்தர்ப்பமாக இந்த தேர்தலுக்குப் பிந்திய சூழலை நாம் பயன்படுத்திக் கொள்வோமாக.
Reactive ஆக அதாவது பிரச்சினைகள் தோன்றியதற்குப் பின்னர் தீர்வுகளைத் தேடுவது பற்றி சிந்திப்பதனை விட Proactive எனப்படும் பிரச்சினைகள் உருவாகாமல் இருப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கும் அதிக முயற்சிகளை எடுப்போமாக.
வல்ல அல்லாஹ் அனைவருக்கும் அருள் பாலிப்பானாக!
![parliament[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2015/08/parliament1.jpg?w=150&h=100)
Leave a comment