பழங்கால பல்மைரா நகரின் காப்பாளர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை
டமஸ்கஸ்: சிரியாவில் உள்ள பழங்கால நகரமான பல்மைராவின் காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய அகழ்வாராய்ச்சியாளரான காலீத் அல் – அசாதை இஸ்லாமிய அரசு என்று கூறிக்கொள்ளும் அமைப்பினர் தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளனர். ஐநாவின் கலாச்சாரப் பிரிவான யுனெஸ்கோ இந்தக் கொலைக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சிரியாவின் மிகவும் மதிக்கப்பட்ட அகழ்வாராய்ச்சியாளரான காலீத், கடந்த மே மாதம் பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.
அவரைப் பொது இடத்தில் வைத்து தலையைத் துண்டித்து, அவரது உடலை ஒரு தூணில் கட்டிவைத்ததாக சிரிய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்மைரா நகரின் அழிவுகளுக்கு அருகில் இருக்கும் நகரமான தத்மூரில் இருக்கும் அருங்காட்சியத்திற்கு முன்பு அமைந்திருக்கும் சதுக்கத்தில், பலருக்கும் முன்பாக வைத்து செவ்வாய்க்கிழமையன்று காலீதின் தலை துண்டிக்கப்பட்டதாக சிரிய அரசு செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.
பிரதான சாலையை ஒட்டியிருக்கும் ஒரு விளக்குக் கம்பத்தில் அவரது உடல் கட்டப்பட்டுக் கிடக்கும் காட்சியைக் கொண்ட புகைப்படங்கள், ஐஎஸ் ஆதரவாளர்களால் இணையத்தில் பரப்பப்பட்டுவருகின்றன. வெட்டப்பட்ட காலீதின் தலை அவரது காலடியில் வைக்கப்பட்டிருந்தது.
81 வயதாகும் காலீதிடமிருந்து, சில பழங்கால பொக்கிஷங்கள் எங்கிருக்கின்றன என்று கேட்டறிய பயங்கரவாதிகள் முயற்சித்ததாக சிரியாவின் அகழ்வாராய்ச்சித் துறை இயக்குனர் மாமவுன் அப்துல் கரீம் தெரிவித்திருக்கிறார்.
பல்மைராவில் எங்கோ தங்கம் இருப்பதாக கருதிய பயங்கரவாதிகள் அதைத் தேடிவந்தார்கள் எனவும் ஆனால், உண்மையில் அப்படி ஏதும் அங்கு கிடையாது எனவும் அகழ்வாராய்ச்சித் துறை இயக்குனர் கூறியிருக்கிறார்.
ஆசாத் தன் வாழ்வின் பெரும் பகுதியை, பல்மைரா இடிபாடுகளைப் பாதுகாப்பதிலும் அதன் பெருமையை முன்னெடுத்துச் செல்வதிலும் செலவிட்டார்.
பல்மைரா தலத்தின் பொறுப்பாளராக 40 ஆண்டுகள் பணியாற்றிய ஆசாத், 2003ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார். அதற்குப் பிறகு பழங்காலப் பொருட்கள் மற்றும் அருங்காட்சியகத் துறையில் நிபுணராகப் பணியாற்றிவந்தார்.
பல்மைராவைக் கைப்பற்றிய பிறகு, ஐஎஸ் குழுவினர் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிங்கத்தின் சிலை ஒன்றை அழித்தனர். பல கடவுள்களை வணங்குவதன் சின்னம் என்று கூறி அருகில் இருந்த இரண்டு இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களையும் அழித்தனர்.
அகழ்வாராய்ச்சியாளரான காலீத் அல் – அசாத்
ஐஎஸ் குழுவால் பிடிக்கப்பட்ட 20 அரச படையினர் பல்மைராவின் அரங்கத்தில் சுட்டுக்கொல்லப்படும் காட்சியை ஐஎஸ் குழுவினர் ஜூலை மாதத்தில் வெளியிட்டனர்.
ஈராக்கின் வட பகுதி மாகாணமான நினேவேயில், பழங்காலப் பொருட்களை ஐஎஸ் குழுவின் மத காவல்துறை என்று கூறிக்கொள்ளும் குழுவினர் சிதைக்கும் காட்சிகள் புதன்கிழமையன்று இணையத்தில் வெளியிடப்பட்டன.
ஈராக்கில் ஏற்கனவே பல பழங்காலத் தலங்களை இடித்துச் சிதைத்திருக்கும் ஐஎஸ், மத்திய கிழக்கின் பொக்கிஷமாகக் கருதப்படும் பல்மைராவையும் அழித்துவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
Leave a comment