காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா – ந.தே.முன்னணி கூட்டணியில் 2ம் இலக்க வேட்பாளராகப் போட்டியிட்ட பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மானை, இம்மாவட்டத்தில் ஐ.ம.சு. கூட்டமைப்பின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கையாட்கள் பலர் முற்றுகையிட்டுத் தாக்குதல் நடாத்த முயற்சித்த சம்பவம் ஒன்று, இன்று மாலை தேர்தல் வாக்களிப்புக்கள் முடிவடைந்த சற்று நேரத்தில் காத்தான்குடியில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவம் பற்றித் தெரிவிக்கப்படுவதாவது:
இன்று காலை முதல் காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கும் சென்று வாக்குப்பதிவுகளை அவதானித்து வந்தநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளரும், வேட்பாளருமான பொறியியலாளர் எம்.எம். அப்துர் றஹ்மான், இறுதியாக மாலை 03:45 மணியளவில் காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலய வாக்குச் சாவடிக்குச் சென்று அவதானித்து விட்டு, பிரதான வீதியிலுள்ள கடாபி ரெஸ்ரூரெண்ட் ஹோட்டலுக்குத் தேநீர் அருந்துவதற்காக தனது ஆதரவாளர்கள் சிலருடன் சென்றுள்ளார்.
அவ்வேளையில் முன்னாள் பிரதியமைச்சரும், ஐ.ம.சு. கூட்டமைப்பின் தலைமை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் கையாட்கள் பலர் ரெலிகொம் ரிஸ்வி என்பவரின் தலைமையில் குறித்த ஹோட்டலுக்குச் சென்று, பொறியியலாளர் அப்துர் றஹ்மான் குழுவினருடன் முரண்பாடாக நடந்து கொண்டதுடன், அவர்களைச் சுற்றி வளைத்துத் தாக்குவதற்கும் தயாராகியுள்ளனர்.
இதனை அவதானித்த குறித்த ஹோட்டலில் இருந்தவர்கள், ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா நஸார்) என்பவருக்கு இச்சுற்றி வளைப்பு மற்றும் தாக்குதல் முஸ்தீபு பற்றித் தொலைபேசி மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதுபற்றிய தகவலறிந்ததும் உடனடியாகவே அங்கு விரைந்து வந்த ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின்; தலைவரை முற்றுகையாளர்கள் கண்டதும் அதிர்ச்சியடைந்து செய்வதறியாது ஸ்தம்பித்துப் போயினர்.
முற்றுகையாளர்களால் சூழப்பட்டிருந்த பொறியியலாளர் அப்துர் றஹ்மானை அவர் சாதாரணமாக அழைத்துக்கொண்டு வெளியில் வந்து தனது மோட்டார் சைக்கிளில் பக்குவமாக ஏற்றி நண்பர் ஒருவரின் துணையுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி பிராந்திய அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். இதன் பின் அங்கிருந்து அப்துர் றஹ்மானின் ஆதரவாளர்களான பொறியியலாளர் எம்.எம். பழுலுல்ஹக், அன்சார் உள்ளிட்ட பலரும் தத்தமது வாகனத்தில் ஏறி அலுவலகம் வந்து சேர்ந்தனர்.
இந்த முற்றுகை மற்றும் தாக்குதல் சம்பவத்தை பிரதான வீதியில் தேர்தல் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சில விஷேட இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளும் நேரில் கண்டிருந்த போதிலும் அவர்கள் இந்தக் காடையர்களுடன் தலையிட்டு வேட்பாளர் அப்துர் றஹ்மானுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கத் தவறியதாகவும் சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் சுயேட்சைக்குழுவாகப் போட்டியிட்டிருந்த ஐக்கிய மக்கள் ஒன்றியத்தினர், கடந்த வெள்ளிக்கிழமையன்றே தமது போட்டியை விலக்கிக் கொண்டு, பொறியியலாளர் அப்துர் றஹ்மானை ஆதரிப்பதாக அறிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
- புவி எம்ஐ ரஹமதுழ்ழாஹ்

Leave a comment