“இந்த நாட்டு முஸ்லிம்களின் தலைமையகமாக, பாதுகாக்கின்ற கேடயமாக இந்த மண் மாற வேண்டும்”: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா

hizbullah– எம்.ஐ. அப்துல் நஸார்
காத்தான்குடி: இந்த நாட்டு முஸ்லிம்களின் தலைமையகமாக, பாதுகாக்கின்ற கேடயமாக இந்த மண் மாற வேண்டும். என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சுததந்திரக் கூட்டமைப்பின் இறுதித் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், புலிகளின் அச்சுறுத்தல் இருந்த காலப்பகுதியில், அப்போதிருந்த அரசியல்வாதிகளும் கல்விமான்களும் தேர்தலில் போட்டியிட மறுப்புத் தொவித்ததன் காரணமாக எனது அபிலாசைகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு சமூகத்திற்காக தேர்தலில் போட்டியிடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதன் பின்னர் என்மீது பல கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.  
எனக்கு என்ன பொறுப்புக்கள் தரப்பட்டனவோ அந்தப் பொறுப்புக்களை நான் அந்தந்த காலங்களின் செய்திருக்கின்றேன். 
பிரச்சினை காரணமாக இந்த ஊரிலிருந்து பல செல்வந்தர்கள் வெளியே எத்தனித்தார்கள். அதனை தடுத்து நிறுத்தினேன். அதற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். அன்று அவர்களை வெளியேற அனுமதித்திருந்தால் இன்று இந்த காத்தான்குடி இருந்திருக்காது. இந்த மக்களுக்கு என்ன என்ன தேவை இருந்ததோ அவை அனைத்தையும் எமது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி நிறைவேற்றினோம். இந்த மக்களை இந்த மண்ணிலே வாழ வைப்பதற்கான சகல பணிகளையும் செய்தோம். நீங்கள் எனக்களித்த வாக்கிற்கு நான் சரியாகச் செயற்பட்டுள்ளேனா? என்பதை உங்கள் மனச்சாட்சியிடம் கேளுங்கள்.  
தொடர்ச்சியாக வந்த அச்சுறுத்தல்கள், குண்டு வெடிப்புகள், சவால்களுக்கு முகம் கொடுத்தோம், அரசியல் தீர்வென்று வருகிற போது பாராளுமன்றத்திலே பேசினோம். முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு அநியாயம் வருகின்றபோது பாராளுமன்றத்திலே பேசினோம்.
பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் ஒருவர் தான் சார்ந்த சமூகத்திற்காக பேச வேண்டும். மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்குப் பிறகு பாராளுமன்றத்திலே ஆகக் கூடிய நேரம் உரையாற்றியிருக்கிறேன். இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட அத்தனை துன்பங்கள் துயரங்கள் அத்தனையையும் நாம் வரலாற்று ஆவணமாக்கியிருக்கிறோம். பல பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்படுவதில்லை. அவர்கள் பேசுவது மாத்திமே. நாம் பாராளுமன்றத்திலே சாப்பிடுகின்ற நேரத்தைக்கூட சமூகத்திற்காக செலவு செய்திருக்கிறோம். 
இந்தப் பாராளுமன்றத் தேர்தலிலே பிரதிநிதித்துவம் ஒன்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமாக இருந்தால் நாற்பதாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். ஐம்பதாயிரம் வாக்குகளை பெறவேண்டும் என்பதற்காக வியூகங்களை வகுத்து கடந்த ஒரு மாதகாலமாக இரவு பகலாக செயற்படுகின்றோம். 
பாராளுமன்ற உறுப்பினர்களாக முஸ்லிம்கள் 20 பேர் இருந்தனர். ஆனால் றிஷாட் பதியுதீனைத் தவிர வெளிநாட்டு நிதிளைக் கொண்டு வந்து நாம் தான் அபிவிருத்திகளைச் செய்கின்றோம்.
நாம் யாரையும் பழிவாங்கியது கிடையாது, இடமாற்றம் செய்த கிடையாது. எனது அரசியல் பயணம் என்பது மிக நேர்மையானது. ஒரு சதத்தைக்கூட லஞ்சமாகப் பெற்றது கிடையாது, ஊழலில் ஈடுபட்டது கிடையாது. நிறையவே நான் அதிகாரங்களை பயன்படுத்தியிருக்கின்றேன், எனது சொந்தத் தேவைக்கல்ல, சமூகத்திற்காகவே அவற்றை பயன்படுத்தியிருக்கிறோம். 
காணி தொடர்பாக பாரியளவு பிரச்சனைகள் காணப்படுகின்றன. நமது எதிர்கால சந்ததிகளுக்காக எமது காணிகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஜயந்தியாய, ரிதிதென்ன போன்ற கிராமங்களுக்கு முஸ்லிம்களைக் கொண்டு சென்று குடியேற்றி வீடுகளைக் கட்டுகிறபோது ஆர்ப்பாட்டம் செய்து கொடும்பாவி எரிக்கப்பட்டது. 
நான் எதிர்பார்ப்பதெல்லாம் இந்த மண் ஒற்றுமைப்படுகின்ற மண்ணாக இருக்க வேண்டும், இந்த மண் முன்னேற வேண்டும், அபிவிருத்தியடைய வேண்டும். இந்த நாட்டு முஸ்லிம்களின் தலைமையகமாக மாற வேண்டும். இந்த நாட்டு முஸ்லிம்களை பாதுகாக்கின்ற கேடயமாக இந்த மண் மாற வேண்டும். இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு எங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த மக்களைப் பாதுகாக்கின்ற அந்த மக்களுடைய தேவைகளை நிறைவு செய்கின்ற மிகப் பெரும் தலைநகராக மாற வேண்டும், வர்த்தகப் பெருமக்கள் வர்த்தகத்தை சிறப்பாகச் செய்ய வேண்டும்.
உன்னிச்சையிலிருந்து இங்கு தண்ணீரைக் கொண்டு வந்தோம். நாம் அபிவிருத்திகளைச் செய்திருக்கிறோம். உரிமைகளுக்காக பேசியிருக்கிறோம். யாரையும் யாரும் ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது. நாம் ஒற்றுமைப்பட்டு எமது பிரதிநித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும். எனவும் அவர் தெரிவித்தார்

Published by

One response to ““இந்த நாட்டு முஸ்லிம்களின் தலைமையகமாக, பாதுகாக்கின்ற கேடயமாக இந்த மண் மாற வேண்டும்”: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா”

  1. Insha Allah Vetri Nichchayam

Leave a comment