- இனியவன்
காத்தான்குடி: நேற்றிரவு 14-08-2015 நள்ளிரவுடன் தேர்தல் பிரச்சாரங்கள் முடிவுக்கு வருகின்றன. இந்தவகையில், காத்தான்குடியில் இரு துருவங்களாக இப்பாராளுமன்றத் தேர்தலில் களமிறங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி மற்றம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் + நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைந்த இறுதித் தேர்தல் பிரச்சார மேடைகள் வழமைபோன்று முழங்கின.
நேற்று மாலை இடி மின்னலுடன் பெய்த மழை, பின்னர் ஓய்ந்திருந்தது. இரு தேர்தல் மேடைகளையும் இருதரப்பின் அதிகளவான ஆதரவாளர்கள் அலங்கரித்திருத்தனர்.
இந்த மக்கள் ஆதரவுகளைப் பார்க்கும்போது ஐ.ம.சு.கூ இக்கு ஐம்பது வீதமும், எதிர் தரப்பினர்களுக்கு (அனைத்து கட்சியினருக்கும்) ஐம்பது வீதமும் காணப்படுவதை காத்தான்குடியில் அவதானிக்க முடியும்.
இரு தேர்தல் மேடைகளும் தங்களது கடந்த கால புராணங்களை பாராயணம் செய்யும் நிகழ்வாகவே அமைந்திருந்தன.
இரு தேர்தல் மேடைகளிலும், “முன்னாள்” என ஆரம்பிக்கும் பிரமுகர்களே நிறைந்திருந்தனர்.

இதன் காரணமாக ஒவ்வொரு பேச்சாளரும் தனது உரையை ஆரம்பிக்கும் போது, “முன்னாள்…. அவர்களே” என்று தொடங்கி, ஸலாம் கூறும் வரைக்கும் 15 நிமிடங்கள் வரைக்கும் எடுத்துக்கொண்டனர்.
இறுதித் தேர்தல் பிரச்சார மேடை என்றால் முன் ஆயத்தம் செய்யப்படவேண்டும். ஆனால் வந்தவர்களுக்கெல்லாம் பேசக்கொடுத்ததால், சொல்ல வேண்டிய விடயங்கள் இரு மேடைகளிலும் சொல்லப்படவில்லை.
வழமை போன்று, பொலிஸாரும், தேர்தல் அதிகாரிகளும் மேடையை எச்சரிக்கும்வரை பிரச்சாரம் தொடர்ந்தது,
அடுத்த 5 வருடங்களுக்கு இம்மக்களுக்கு எவ்வகையான சேவைகளை செய்ய இருக்கின்றோம், இம்மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைக்கானத் தீர்வுகள் மற்றும் தனது தேர்தல் விஞ்ஞாபனம் எவை என்பது பற்றியும் இரு மேடைகளும் கூறத் தவிர விட்டன.
“நான் கடந்த காலங்களில் என்ன செய்தேன்” என்பதே பிரதான 3 வேட்பாளர்களின் வார்த்தைகளாக இருந்தன.
வழமை போன்று “நேரம் போதாது” என்றே சொல்லிச் சொல்லி நேரம் வீணடிக்கப்பட்டிருந்தன. பிரதம வேட்பாளர் பேசுவதற்கே நேரம் போதாத துர்ப்பாக்கிய நிலையால், இம்மக்களுக்குச் செய்ய வேண்டிய எதிர்கால விடயங்களை பேச முடியாத நிலைமைக்கு 3 வேட்பாளர்களும் தள்ளப்பட்டனர்.

ஆகக் குறைந்தது. பிரதான வேட்பாளர் ஒருவர் ஒரு மணி நேரமாவது பேசி இருந்தால் மக்கள் மென்மேலும் தெளிவடைந்திருப்பர்.
இறுதிப் பிரச்சாரக் கூட்டம் என்பதால், வேட்பாளருக்கே முக்கியத்துவம் அளித்திருக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நேரம் போதாமையால் அரைகுறையுடன் இரு தேர்தல் மேடைகளும் இனிதே நிறைவுற்றிருந்தன.
நீதி: சிந்தித்து வாக்களிப்பவர்கள் பொதுமக்களே!
- யுவர்காத்தான்குடிக்காக இனியவன்
Leave a comment