நிறைவேறாமல் போன சங்காவின் ஆசைகள்

sangadraw_2789902[1]கொழும்பு: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா ஓய்வு பெறுகிறார். உலகக்கிண்ணத் தொடரோடு ஒருநாள் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போட்ட சங்கக்கரா, தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதால் அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.

இதனால் இலங்கை அணிக்காக சிறந்த பங்காற்றிய சங்கக்காராவை சிறப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மைதானத்தில் பல இடங்களில் அவரது கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று நிருபர்களிடம் பேசிய சங்கக்காரா சில விடயங்களை பற்றி பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், உலகக்கிண்ணப் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற திட்டமிட்டிருந்தேன். ஆனால் அணித்தெரிவாளர்கள் கொஞ்ச காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடும்படி கேட்டுக் கொண்டனர். இதனால் 4 டெஸ்டில் விளையாட சம்மதித்தேன்.

மேலும், கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது எனது சிறந்த வெளிநாட்டு தொடராகும். இதே போல் 2010ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில், ஒருநாள் தொடரை கைப்பற்றியதையும் மறக்க முடியாது.

2009ம் ஆண்டு பாகிஸ்தானில் விளையாடிய போது, எங்களது பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். எனது வாழ்க்கையில் நடந்த, பயங்கரமான நிகழ்வு இது தான்.

இதில் காயமடைந்த சக வீரர் சமரவீரா சில மாதங்களுக்கு பிறகு மீண்டு வந்து சதம் அடித்தது மறக்க முடியாத ஒன்றாகும்.

50 ஓவர் உலகக்கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று விரும்பினேன். இரண்டு முறை இறுதிப்போட்டி வரை வந்தும் நழுவ விட்டோம்.

அவுஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதே போல் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றிருந்தால் சிறப்பு வாய்ந்ததாக இருந்திருக்கும். இவை எல்லாம் நடக்காமல் போனது வருத்தமளிக்கிறது என்று கூறியுள்ளார்.

Published by

Leave a comment