“தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமக்கு எதிரானவர்களே! அவர்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை பயன்படுத்தி எம்மை தோல்வியடையச்செய்ய முயற்சிக்கின்றனர்”: ஹிஸ்புள்ளா

hizbullah– எம்.எச்.எம். அன்வர்

காத்தான்குடி: “தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமக்கு எதிரானவர்களே அவர்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை பயன்படுத்தி எம்மை தோல்வியடையச்செய்ய முயற்சிக்கின்றனர்” இவ்வாறு சற்றுமுன்னர் (11.08.2015) காத்தான்குடி பஸ் டிப்போ அருகில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாம் இலக்க வேட்பாளர் எம் எல் ஏ எம் ஹிஸ்புள்ளா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இப்பிரதேசத்தில் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்ய சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களான அப்துர்ரஹ்மானும், ஷிப்லி பாறுக் உம் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். நான் பிரதியமைச்சராக இருந்த போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் எதிர்ப்பிற்கும் மத்தியில் வேலை செய்தேன். தற்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியை பயன்படுத்தி எம்மை தோல்வியடையச்செய்ய இவர்கள் முயற்சிக்கின்றனர்.

நாம் செய்த அபிவிருத்திகளை கொச்சைப்படுத்தி எதுவும் செய்யவில்லை என பொய் சொல்கின்றனர்.அவர்களுக்கு என்ன நடந்தது என கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் பொலிசுக்கு செல்கின்றனர். நாளாந்தம் 25 அல்லது 30 முறைப்பாடுகள் போடப்படுகின்றன. அவர்களால் மிகவும் கஷ்டப்படுகின்றேன்.

எதற்கெடுத்தாலும் விமர்சனம் செய்கின்றனர். மாநாடு நடத்தி சோறு கொடுத்தால் சோத்துக்கு போக வேண்டாம் என புலம்புகின்றனர் .ஆனால் அவர்கள் பெண்கள் மாநாடு வைக்கின்றனர். 25 வருடங்களுக்கு பிற்பாடு இப்போதுதான் இவ்வாறான வேலைகளை செய்கின்றனர். ஒரு மையத்து வீட்டையும் விடுகிறார்கள் இல்லை.

அதேபோல் ஹஜ்ஜூக்கு உம்றாவுக்காக செல்கின்ற வீடும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. நாங்கள் சென்றால் பிழை நீங்கள் சென்றால் சரியா என கேட்க விரும்புகிறேன்.

மாநாட்டில் 1,8000 பெண்கள் பங்குபற்றி வெற்றியளித்தது நான் அபிவிருத்தி செய்தால் அதனை செய்யாமல் நிறுத்த பல பிட்டிஷன்கள் அனுப்புகின்றனர்.

காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய வரவேற்புக் கோபுரம் நான் வெளிநாட்டில் பார்த்து வந்து கட்டியுள்ளேன். அதனையும் விமர்சிக்கின்றனர். காத்தான்குடி வைத்தியசாலையை நவீன வசதிகள் கொண்ட வைத்தியசாலையாக சவுதி நாட்டு அரபி ஒருவரின் நிதி பங்களிப்புடன் செய்யவுள்ளேன். அதே போல் ஆற்றங்கரையை வீதிகள் போட்டு அபிவிருத்தி செய்துள்ளேன். மேலும் அபிவிருத்தி செய்யவுள்ளேன்.

காத்தான்குடி அபிவிருத்தியை போல சம்மாந்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என தற்போதய வேட்பாளரும் முன்னாள் பல்கலைக்கழக உப வேந்தருமான கலாநிதி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கல்முனையை அபிவிருத்தி செய்ய வெண்டும் என ஹரீஸ் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையில் அப்துர்ரஹ்மான் அவர்களே உங்களுக்கு மட்டும் ஏன் அவ்வாறு சொன்னால் பிடிப்பதில்லை என கேட்கவிரும்புகிறேன் என தனதுரையில் மேலும் தெரிவித்தார்.

Published by

Leave a comment